பதிவு செய்த நாள்
26
டிச
2011
10:12
கம்பம்:கேரளாவில், தமிழக அய்யப்ப பக்தர்களுக்கு, சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. சபரிமலையில் கூட்டம் குறைந்ததாலும், வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாலும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு போராட்டங்களால், சபரிமலைக்குச் சென்ற, தமிழக அய்யப்ப பக்தர்கள் தாக்கப்பட்டனர். குமுளி, கம்பமெட்டு பாதைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், அய்யப்ப பக்தர்கள் செல்லவில்லை. சபரிமலைக்கு மாலை அணிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோவில்களுக்குச் சென்று, தங்களின் விரதத்தை முடித்துக் கொண்டனர்.இதனால், குமுளி, வண்டிப்பெரியார், பீர்மேடு, குட்டிக்கானம், எருமேலி உள்ளிட்ட, பல ஊர்களில் கடைகள் வெறிச்சோடின. கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. சபரிமலையிலும் கூட்டம் குறைந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த தேவசம் போர்டு, அகில இந்திய அய்யப்ப சேவா சங்கம் போன்றவைகள், கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இதன் பயனாக, அய்யப்ப பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும், வாகனங்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் உறுதியளித்து, சிகப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
சகஜநிலை எப்போது திரும்பும்?முல்லைப் பெரியாறு அணை பிரச்னையால், கேரளாவிற்கு இன்னும் போக்குவரத்து துவக்கப்படவில்லை. தமிழகத்தில் இருந்து ஏல விவசாயிகள், கம்பமெட்டு, குமுளி வழியாக செல்லத் துவங்கியுள்ளனர். காய்கறிகள், பால், இறைச்சி போன்றவை செல்லவில்லை. அதே நேரம், இடுக்கி மாவட்டத்தில் வசிக்கும் கேரளத்தவர்கள், ஒருவர் கூட தமிழகத்திற்குள் வரவில்லை. ஏல விவசாயி அருண் கூறியதாவது: கேரளாவில் உள்ள ஏலத் தோட்டத்திற்கு, இரண்டு வாரங்கள் கழித்து சென்றேன். அங்கு நிலைமை பதட்டமாகத் தான் உள்ளது. நன்றாக பழகியவர்கள் கூட, நம்மை வித்தியாசமாகப் பார்க்கின்றனர். இயல்பான பேச்சு இல்லை. தோட்டத்தைச் சுற்றி பார்த்து விட்டு உடனே திரும்பி விட்டேன், என்றார்.தமிழர்கள், கேரளாவிற்கு செல்லத் துவங்கினாலும், கேரளத்தவர்கள், இங்கு வரத் தயக்கம் காட்டி வருகின்றனர். இரு மாநில மக்களிடமும் இயல்பு நிலை திரும்ப, சில மாதங்களாவது ஆகும், என தெரிகிறது.