பதிவு செய்த நாள்
13
பிப்
2018
01:02
மதுரை யானைக்கல் வைகை பாலத்தின் கீழே வைகை கரையில் ஒரு தீர்த்த கிணறு இருக்கிறது. இந்த கிணற்றில் இருந்து தான் மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்ய நீர் எடுத்துச் செல்கின்றனர். ஒவ்வொரு நாளும் காலை நேரம் யானை, குதிரை, ஒட்டகம் புடைசூழ அர்ச்சகர் ஒருவர் வந்து தண்ணீரை எடுத்துச் செல்வது வழக்கம். தீ விபத்துக்கு பின்பு தான் இந்த நடைமுறையை முழுமையாக கடைபிடிக்கிறார்கள். கோயில் நிர்வாகம் தீர்த்தம் எடுப்பதை இனியாவது கைவிடாமல் தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த தீர்த்த கிணற்றை சுத்தமாக பராமரிக்க வேண்டும். அதே போல் வைகையின் நடுவில் அழிவின் விளிம்பில் தவித்துக் கொண்டு இருக்கும் மண்டபத்தையும் பராமரிக்க வேண்டும்.
- வி.ஆர்.எம்.பிரவீன் குமார், மதுரை.
புராதன சிலை பாதுகாப்பு: வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்த உலக புகழ்பெற்ற புண்ணியஸ்தலம் மீனாட்சி அம்மன் கோயில். இந்த வரலாற்று பொக்கிஷத்தை வெளிநாட்டினர் வியந்து பார்க்கின்றனர். கோயிலில் உள்ள புராதன சிலைகளை இன்றைக்கு செதுக்க முடியுமா என்பது சந்தேகம் தான். அதை உணர்ந்து சிலைகளை பாதுகாக்க வேண்டும். இக்கோயிலின் வளர்ச்சி, பாதுகாப்பில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. ஆன்மிக தலம் வியாபார தலமாக மாறிவிடாமல், கண்காணிக்க வேண்டியது அரசின் கடமை. மேலும், புராதன சிலைகளை பாதுகாக்க, தொல்லியல் ஆராய்ச்சியாளர்களை கொண்ட குழு அமைத்து, அவ்வப்போது பராமரித்து வரவேண்டும். - என்.முத்துலட்சுமி,தொல்லியல் ஆராய்ச்சியாளர், மதுரை
கோயிலில் விளம்பரம் வேண்டாம்: மீனாட்சி கோயிலில் கடைகளை காலி செய்த இடத்தில் கோயில் நிர்வாகமே பூஜை பொருட்களை மட்டும் விற்பனை செய்யலாம். கோயிலுக்குள் இருக்கும் விளம்பர போர்டுகளை அகற்ற வேண்டும். மீனாட்சி கோயில் நம் பாரம்பரிய பொக்கிஷம், அதை பாதுகாக்க வேண்டும். மீண்டும் ஒரு விபத்து நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை உடனே செய்ய வேண்டும்.- ஆர்.ஜெயஸ்ரீ, ஆசிரியை, விருதுநகர்.
மதுரை மீனாட்சி கோயில் நமது பொக்கிஷம். இக்கோயிலை இயற்கை சீற்றம், விபத்துக்கள், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கேட்டில் இருந்து காப்பது நம் கடமை. மீனாட்சி கோயிலின் பழம்பெருமை, புராதனம் காக்க விரும்பும் வாசகர்கள், பல்துறை வல்லுனர்கள் அதற்கான ஆலோசனைகளை மீனாட்சி கோயிலை காப்போம், தினமலர்,டி.வி.ஆர்., ஹவுஸ், தினமலர் அவென்யூ, மதுரை - 625 016என்ற முகவரிக்கு தங்கள் புகைப்படத்துடன் அனுப்பலாம்.
mdureporting@dinamalar.in