பதிவு செய்த நாள்
16
பிப்
2018
12:02
தர்மபுரி: மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அங்காளம்மன் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை மற்றும் அம்மன் மயானம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. தர்மபுரி, குமாரசாமிப்பேட்டை மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு, கடந்த, 11 காலை, 7:30 மணிக்கு கணபதி, சுப்பிரமணியர், அங்காளபரமேஸ்வரிக்கு ?ஹாம பூஜை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. 12ல், தீ மிதிவிழா நடந்தது. கடந்த, 13ல் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். நேற்று முன்தினம் காலை, 9:15 மணிக்கு பால் குடம் எடுக்கும் நிகழ்ச்சி, இரவு அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. முக்கிய நாளான நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு முகவெட்டு ஊர்வலம், மதியம், 1:00 மணிக்கு அங்காளபரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில், பூதவாகனத்தில் மயானம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள், அலகு குத்தி ஊர்வலம் வந்தனர். சில பக்தர்களுக்கு, சாட்டை அடிக்கப்பட்டது. இதேபோல், தர்மபுரி எஸ்.வி.,ரோடு அங்காளம்மன் மற்றும் வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவில் சுவாமிகள், பைபாஸ் ரோட்டில் உள்ள, பச்சியம்மன் கோவில் மயானம் சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
* போச்சம்பள்ளி, மத்தூர் அருகே, சிவம்பட்டி கிராமத்தில், பூங்காவனத்தம்மன் கோவில் மயான சூறைத் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை, சக்தி கரகம் எடுத்தல், அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு நடந்த பிறகு, கோவிலில் இருந்து மயானம் வரை ஊர்வலமாக வந்த அம்மன் சிலை முன், காளி வேடம் அணிந்து ஏராளமான பக்தர்கள் மயானத்துக்குள் நுழைந்தனர். மயானத்திற்குள் சென்றவர்கள் குழியைத் தோண்டி, ஆவேசமாக எலும்புகளை வாயால் எடுக்கும் வினோத நிகழ்ச்சி நடந்தது. இதைக்காண ஏராளமான, பக்தர்கள் கூடியிருந்தனர். பூத வாகனத்தில், பூங்காவனத்தம்மன் மற்றும் சிம்ம வாகனத்தில் ஏழூரம்மன் மயானத்திற்கு சென்று சூறையாடும் நிகழ்ச்சி முடியும் போது, பக்தர்களுக்கு சாட்டையடி கொடுத்து பேய் விரட்டும் நிகழ்ச்சி நடந்தது. வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஊத்தங்கரை, திருப்பத்தூர் பகுதிகளில் இருந்து, பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.