திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோயிலில் நாளை மதியம் 12:40 மணிக்கும், இரவு 10:00 க்கும் மாசித் தெப்ப உற்ஸவம் நடக்கிறது. இங்கு தெப்ப உற்ஸவம் பிப்.,21ல் துவங்கியது. நேற்று எட்டாம் திருநாளை முன்னிட்டு குதிரை வாகனத்தில் பெருமாள் வீதிவலம் வந்தார்.
இன்று காலையில், வெண்ணெய்த்தாழி கண்ணன் அலங்காரத்தில் பெருமாள் புறப்பாடு, மதியம் 12:40 மணிக்கு தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடக்கும். நாளை (மார்ச் 2) அதிகாலை 5:00 மூலவருக்கு அபிேஷகம் நடந்து பக்தர்கள் தரிசனம் துவங்கும். காலை 6:30 மணிக்கு ஏகாந்த சேவை அலங்காரத்தில் உற்ஸவர் தங்கப் பல்லக்கில் உலா வருவார். பக்தர்கள் பட்டு சார்த்தி பெருமாளை வழிபடுவர்.மதியம் 12:00 மணிக்கு தெப்பக்குளம் அருகே தெப்பமண்டபத்தில் திருக்கண் சாதித்தல் நடக்கும். பின், தெப்பத்தில் பெருமாள் எழுந்தருள மதியம் 12:40 மணிக்கு பகல் தெப்பம் துவங்கும். ஒரு முறை வலம் வந்த பின் மீண்டும் தெப்ப மண்டபம் வருவார். இரவு 10:00 மணிக்கு மேல் மீண்டும் தெப்ப உற்ஸவம் நடக்கும். மார்ச் 3 காலையில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரியுடன் உற்ஸவம் நிறைவடையும்.