பதிவு செய்த நாள்
01
மார்
2018
12:03
பழநி: பழநி மலைக்கோயில் கிரிவீதியில்கல்மண்டபத்தில் பழங்கால சுவாமி சிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. பழநி தாசில்தார் ராஜேந்திரன், தமிழ்நாடு திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இடும்பன்மலைக்கோயில் அருகே பாதைக்காக தனியார் நிலங்கள் கையப்படுத்தவும், கிரிவீதியை சுற்றியுள்ள பழங்கால கல்மண்டபங்கள் பார்வையிட்டும் ஆய்வுசெய்தனர். மேற்குகிரி வீதியிலுள்ள தனியார் கல் மண்டபத்தை ஆக்கிரமித்து ஓட்டல், கழிப்பறை இடமாக பயன்படுத்துவது தெரியவந்தது. உள்ளே பழமையான சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, சிவன், நாகர் சிலைகள் இருப்பதும் தெரியவந்தது. துாண்களில் கலையமிக்க சிற்பங்கள் சிதைந்து போய் உள்ளன. இதேபோல சில தனியார் மடம், கல் மண்டபங்களை ரூ.பல லட்சத்திற்கு உள் வாடகைக்கு விட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘அரசுபுறம் போக்கு நிலத்தில் உள்ள பழங்கால கல்மண்டபங்களை ஆக்கிரமித்து, அதிகாரிகள் உடந்தையுடன் பட்டா வாங்கியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல் மண்டபங்களை தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வுசெய்து கையப்படுத்தி பாதுகாக்க வேண்டும்,’’ என்றார்.