பதிவு செய்த நாள்
31
டிச
2011
10:12
கடவுளுடன் கரம் கோர்ப்போம் : நீங்கள் ஆபத்தான வேலைக்கோ, ஆபத்தான இடங்களுக்கோ செல்ல நேரலாம். கடுமையான சவாலை சமாளிக்கும் சந்தர்ப்பங்களை சந்திக்கலாம். அப்போது மனம் "திக் திக் என அடித்துக் கொள்ளும். அதிகரிக்கும் இதயத்துடிப்பு நம்மை முன்னேற விடாமல் செய்து விடுவதும் உண்டு. சில சமயங்களில் அந்த ஆபத்துப் பாதையைக் கடக்க பயந்து "எதற்கு வம்பு என திரும்பி விடுவதும் உண்டு. இதுபோன்ற சமயங்களில், ""என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும், ஒரு கை பார்த்து விடுகிறேன், என்று மனதில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.
உங்களுடன் கடவுளே உடன் வருவதாகவும், அவரே அந்த வேலைக்கு உங்களை அழைத்துச் செல்வதாகவும் பாவனை செய்து கொள்ள வேண்டும். உச்சத்தில் இருக்கும் சிகரமாயினும், தங்கத்தைத் தேடிப் போகும் சுரங்கமாயினும், ஆழக்கடலாயினும்..ஏன்.. கடுமையான சவாலை கொடுக்கும் போட்டித்தேர்வாயினும், கடவுள் உங்களோடு இருப்பதாக உணருங்கள். அப்போது பயஉணர்வு நீங்கி விடும்.
தன்னை நம்புவோர் பற்றி இயேசுகிறிஸ்து கூறும் போது, ""நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை. ஒருவனும் அவைகளை எனது கையில் இருந்து பறித்துக் கொள்வதும் இல்லை, என்கிறார்.
இறைமகனே இவ்வளவு தைரியத்தை நமக்கு தரும் போது, நாம் அவரோடு கைகோர்த்து செல்வதில் தயக்கமென்ன! இனிய புத்தாண்டில், எல்லாவற்றிலும் வெற்றி பெற நாம் கடவுளுடன் இணைந்து முன்னேற்றப் பாதையில் நடை போடுவோம்.