பதிவு செய்த நாள்
31
டிச
2011
10:12
பழநி: மாலை முதல் அதிகாலை வரை கொட்டும் பனி, பகலில் சூரிய வெளிச்சத்தையும் ஊடுருவி உடலை துளைக்கிறது. இதை பொருட்படுத்தாமல், தமிழகம் முழுவதும் இருந்து, பாத யாத்திரையாக பழநிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம். இந்த ஆண்டு தைப்பூச விழா, பிப்ரவரியில் துவங்குகிறது. இப்போதே பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. வழக்கம் போல இடர்பாடுகளுக்கு குறைவில்லை. மாவட்ட நிர்வாகம், அறநிலைய துறை அலட்சியத்தால், பக்தர்களின் நிலையோ பரிதாபம்.
எல்லாம் தாராளம்: தற்போது, செம்பட்டி, கன்னிவாடி, பண்ணைப்பட்டி, ஸ்ரீராமபுரம், நீலமலைக்கோட்டை, மூலச்சத்திரம், பாலம்ராஜக்காபட்டி, கதிரையன்குளம், ரெட்டியார்சத்திரம், செம்மடைப்பட்டி, லெக்கையன்கோட்டை, குழந்தைவேலப்பர் கோயில், விருப்பாட்சி, சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, ஆயக்குடியில், ரோடு ஓர ஆக்கிரமிப்பு கடைகள்
முளைத்துள்ளன. இங்கு சுகாதாரமற்ற பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
"சும்மா தடை: இது தவிர தடை செய்யப்பட்ட "பாலிதீன் உபயோகமும் தாராளம். "பாலிதீன் பொருட்களால் நோய் வரும் என, உள்ளாட்சி நிர்வாகத்தினர், அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஆனால், கண்காணித்து தடை செய்வதற்கான நடவடிக்கை இல்லை. "மினரல் வாட்டர் என்ற பெயரில், தண்ணீர் பாக்கெட் விற்கப்படுகிறது. இவற்றில் தயாரிப்பு தேதி, விலை விபரம் இல்லை. உணவுப் பொருட்களும், "பாலிதீன் பைகளில் சுற்றி விற்கப்படுகிறது. சில வீடுகளில் மின் "பம்ப் அமைத்து, குளிப்பதற்கு தண்ணீர் விற்கப்படுகிறது.
கேள்விக்குறி: வரும் வழிகளில் தற்காலிக கழிவறைகள் அமைத்து, கட்டணம் வசூலிக்கின்றனர். இவை பராமரிக்கப்படுவதில்லை. இதனால் தொற்றுநோய் அபாயம் உள்ளது. அறநிலையத் துறை சார்பில் தங்குமிடம், கழிவறைகள் அமைக்க அதிகாரிகள் முன்வரவில்லை. பக்தர்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவதிலும் அலட்சியமாக உள்ளனர்.ஒரு வாரத்திற்கு மட்டும் பெயரளவில் மருத்துவ முகாம்கள் நடத்துவதால் பயன் இல்லை. இம்முகாம்களை இப்போதே துவக்க வேண்டும்.
நோகும் பாதங்கள்: பழநி- செம்பட்டி, திண்டுக்கல் வழிகளில், பாதயாத்திரை பக்தர்களுக்காக அகலப்படுத்தப்பட்ட ரோடு சேதம் அடைந்துள்ளது. சில இடங்களில் மட்டும், பள்ளத்தை ஒட்டுப்போடும் பணி நடக்கிறது. சமீபத்திய மழையால் பெயர்ந்துள்ள கற்கள், பக்தர்களின் பாதங்களை பதம் பார்க்கின்றன. இரவில் பக்தர்களின் பாடு, சொல்லித் தெரியவேண்டிய தில்லை. இதனால், ரோட்டை ஆக்கிரமித்து நடக்கின்றனர்; கடந்த ஆண்டு விருப்பாட்சி, சமத்துவபுரம், சிந்தலவாடம்பட்டி, கோபாலபுரம், சத்திரப்பட்டி பகுதிகளில் ரோடு சீரமைக்கும் பணியை, இரவில் மேற்கொண்டனர். இரு புறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்தன. போக்குவரத்து பிரச்னையால், பக்தர்கள் நடந்து செல்ல முடியவில்லை. இந்த ஆண்டு, பக்தர்களுக்கு பாதிப்பு இன்றி, இப்பணியை துரிதப்படுத்த வேண்டும்.
பழநி பரிதாபம்: இத்தனை பிரச்னைகளையும் கடந்து வரும் பக்தர்களுக்கு, பழநியில் பிரச்னைகள் ஏராளம். பஸ் ஸ்டாண்ட், அடிவாரம், கிரிவீதிகளில் ஆக்கிரமிப்பு கடைகள், கண்ட இடங்களில் நிற்கும் வாகனங்களால் நெரிசல் ஏற்படுகிறது. பல ஓட்டல்களில் அதிக விலைக்கு தரமற்ற உணவுகள் பரிமாறப்படுகின்றன. கோயிலுக்கு அழைத்து செல்லும் இடைத்தரகர்களின் இடையூறு, அடிப்படை வசதிகள் குறைவு போன்றவற்றால் பக்தர்கள் பாடு படுதிண்டாட்டம் தான்.
உடனடி தேவை: பாதயாத்திரை பக்தர்களுக்கான பிரச்னைகளை கண்டறிய, சிறப்புக்குழு அமைக்க வேண்டும். உள்ளாட்சி, நெடுஞ்சாலை ரோடுகளை அவ்வப்போது சீரமைக்க வேண்டும். உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்வது அவசியம். இப்பணிகளை கலெக்டர் நாகராஜன் முடுக்கி விட வேண்டும்.