பதிவு செய்த நாள்
06
மார்
2018
11:03
திருப்பூர்: திருப்பூர், கொங்கணகிரி ஸ்ரீ கந்த பெருமான் கோவில் திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மூலவர் பாலாலயம் வரும், 8ம் தேதி நடக்கிறது.திருப்பூரில், பழமை யானதும், அருண கிரிநாதரால் பாடல் பெற்ற தலமாகவும், கொங்கணகிரி மலை மேல், பிரசித்த பெற்ற ஸ்ரீ கந்தப்பெருமான் கோவில் உள்ளது. கோவிலில், திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளை சார்பில், ஐந்து நிலை ராஜகோபுரம், 12 அடி உயரத்தில், 590 அடி நீளத்தில் பிரமாண்டமான திருமதில், பிரகாரத்தில், 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கல் தளம் ஆகிய திருப்பணிகள் நடந்து வருகின்றன. மேலும், 35 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி, கிரிவலப்பாதை, கோவிலுக்கு வெளியே எட்டு கழிப்பிடம் ஆகிய கட்டுமான பணிகளும் நடந்து வருகின்றன.
ராஜ கோபுர பணியில், 98 சுதை அமைத்து, அவற்றுக்கு பஞ்ச வர்ணம் பூசும் பணியும், பிரமாண்ட ராஜகோபுரம் கதவு, ராஜகோபுரம் படி ஏறும் பகுதிகளில், கல்லால் செதுக்கப் பட்ட யானை சிற்பங்கள் செதுக்கும் பணிகளும், தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. திட்டமிட்டபடி, வெளிப் பகுதியில் பெரும்பாலான பணிகள் நிறைவு பெறும் தரு வாயில் உள்ளது. ஒரு சில மாதங்களில் கும்பாபிேஷகம் செய்யும் வகையில், மூலவர், உற்சவர் சன்னதி கோபுரங்கள், கன்னி மூல செல்வ விநாயகர், வெங்கடேச பெருமாள், கருடாழ்வார், நவக்கிரகம், சித்திவிநாயகர், கருவறை, அர்த்த மற்றும் மகா மண்டபம் ஆகிய பகுதிகளில், திருப்பணி வேலைகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக, வரும், 8ம் தேதி, பாலாலயம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. பாலாலய பூஜை மற்றும் திருப்பணியிலும் பக்தர்கள் பங்கேற்க வேண்டுமென, திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளை நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.