பதிவு செய்த நாள்
02
ஜன
2012
11:01
சென்னை: தமிழக இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் கோவில்களில், அமல்படுத்தப்பட்டுள்ள அன்னதான திட்டத்தில், வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ தினங்களில் வடை, பாயாசத்துடன் சாப்பாடு வழங்கப்படுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவால், கடந்த 2002 மார்ச் 23ல், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அன்னதான திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இந்த திட்டம், முதல் கட்டமாக தமிழகத்தின், 63 கோவில்களில் அமல்படுத்தப்பட்டது. அதன் பின், ஏழு கட்டங்களாக இத்திட்டம், 362 கோவில்களில் நடைமுறை படுத்தப்பட்டது. தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து, தி.மு.க., ஆட்சியில் அ.தி.மு.க., அரசால் துவங்கப்பட்ட திட்டம் என்பதால், ஏனோ தானோ வென செயல்பட்டு வந்தது.
தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க., அரசு பதவி ஏற்ற நிலையில் இத்திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கோவில்களில், உச்சிக்கால பூஜைக்கு பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில், அரிசி சாதம், சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொறியல், இவற்றுடன் அப்பளம், ஊறுகாய் வழங்கப்பட்டு வந்தது. நேற்று முதல், இந்த உணவு வகைகளை மேம்படுத்தி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ தினங்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் உணவுடன் வடை, பாயாசம் வழங்கப்படுகிறது. இந்த புதிய திட்டத்துக்காக, சாப்பாடு தயாரிப்பு செலவும் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த காலத்தில், சாப்பாடு ஒன்றுக்கு, 14 ரூபாய் என்பது 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அது போல், முதல்நிலைக் கோவில்களில், நேற்று முன்தினம் வரை, 75 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த அன்னதானம், 100ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த காலம், இத்திட்டம் நடைமுறையில் இருந்து வந்த 362 கோவில்களுடன், மேலும், 106 கோவில்களுக்கு, இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அன்னதான திட்டம் நடைமுறையில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சேர், டேபிள் வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை முதல், பக்தர்களுக்கு சேர், டேபிளில் போட்டு சாப்பாடு வழங்கப்பட உள்ளது.
இது குறித்து, இந்து சமய அறநிலையத் துறை இணை கமிஷனர் ஒருவர் கூறியதாவது: தமிழக கோவில்களில் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமின்றி, முக்கிய விசேஷ நாட்களில், மதியம் வழங்கும் சாப்பாட்டுடன் வடை, பாயாசம் இணைத்து வழங்கப்படும். நேற்று, அனைத்து கோவில்களிலும் அன்னதானத்துடன் வடை, பாயாசம் வழங்கப்பட்டது. மேலும், குடியரசு தினம், சுதந்திர தினம், அண்ணாதுரை பிறந்த நாள், காந்தி பிறந்த நாட்களிலும் வடை, பாயாசத்துடன் சாப்பாடு வழங்கப்படும். இத்திட்டத்துக்கு நன்கொடை வழங்கும் உபயதாரர்கள் இனி, 100 சாப்பாட்டுக்கு 1,400 ரூபாய்க்கு என்பதற்கு பதில், 2,000 ரூபாய் வழங்க வேண்டும். இதற்கு அரசு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை, அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவுபடி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.