பதிவு செய்த நாள்
27
மார்
2018
02:03
பரமக்குடி : பரமக்குடி முத்தாலம்மன் கோயில் நான்காம் நாள் விழாவில் வண்டிமாகாளி உற்ஸவ விழா நடந்தது. பரமக்குடி முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி விழாவையொட்டி தினமும் அம்மன் பல் வேறு வாகனங்களில் வீதியுலா வருகிறார். தொடர்ந்து நேற்று காலை அம்மன் எட்டு கரத்துடன் கத்தி, வாள், சூலம், கேடயம் ஏந்தி வீதிவலம் வந்தார். அப்போது சிறுவர், சிறுமியர்கள் நேர்த்திக்கடனுக்காக குறவன், குறத்தி, அம்மன், பெண், ஆண் வேடமணிந்து ஆடி, பாடிசென்றனர்.பின்னர் மாலை 5:30 மணிக்கு இரண்டு காளை மாடுகள் பூட்டிய வண்டியை அலங்கரித்து, மேல் பகுதியில் காளி அலங்காரத்துடன் ஒருவர் அமர்ந்தும், அதற்கு கீழ் பெண் வேடமிட்ட ஆண்கள் சுற்றிலும் ஆடி வந்தனர். அப்போது சிலம்பம், புலி ஆட்டம், கரகம் மற்றும், பல்வேறு வேடம் தரித்தபடி வந்தனர். ஊர்வலம் சின்னக்கடை வீதியில் துவங்கி பஜார் வழியாக முத்தாலம்மன் கோயிலை சுற்றி மீண்டும் சின்னக்கடை முத்துமாரியம்மன் கோயில் அருகில் நிறைவடைந்தது.அங்கு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 11:00 மணிக்கு அம்மன் ரிஷப வாகனத்தில் மீண்டும் கோயிலை அடைந்தார். ஏற்பாடுகளை வன்னியகுல சத்திரிய மகாசபையினர் செய்திருந்தனர்.