மானாமதுரை : மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்ன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முத்துமாரியம்ன் கோயில் பங்குனி பொங்கல் விழா கடந்த 10 நாள்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும்,ஆராதனையும் நடைபெற்றது. இரவு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய திருவிழாவான பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று டிரஸ்டி சுப்பிரமணியன் தலைமையில் காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம், தீச்சட்டி, பூக்கரகம் எடுத்து வந்த பக்தர்கள் நகரின் முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து கோவில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதனையடுத்து அம்மனுக்கு சந்தனக்காப்பு செலுத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் உடைகுளம், தயாபுரம்,கணபதிநகர், சிப்காட் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.