பதிவு செய்த நாள்
02
ஏப்
2018
01:04
கூடலுார்:முதுமலை, தெப்பக்காடு ஆதிவாசி மக்களின் கோவிலான, ஸ்ரீ ஆத்தன்சேரி ஆதிபராசக்தி அம்மன் கோவில் திருவிழா, கடந்த 14ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 15 முதல், 30ம் தேதி வரை, தினமும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் மற்றும் கலாசார நடன நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று முன்தினம், மாலை 4:00 மணிக்கு கார்குடி மாரியம்மன் கோவிலிலிருந்து அலங்கரிக்கப்பட்ட கும்பம் கொண்டு வரும் நிகழ்ச்சி; இரவு, 8:00 மணிக்கு திருத்தேர் ஊர்வலம் ஆகியவை நடந்தன. நேற்று, காலை, 8:20 மணிக்கு மாயார் ஆற்றின் கரையிலிருந்து அலங்கரிக்கப்பட்ட கும்பத்தை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. காலை 8:50 மணிக்கு, தீ குண்டம் இறங்கும் பக்தர்கள், மாயார் ஆற்றிலிருந்து, பூஜை செய்து மாலை அணிவித்து, ஊர்வலமாக,கோவிலுக்கு அழைத்து வந்தனர். கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில், அவர்கள் இறங்கி அம்மனை தரிசித்தனர். தொடர்ந்து, ஆதிவாசி மக்கள் சார்பில், கலாசார நடனங்கள் அனைவரையும் கவர்ந்தது.