பதிவு செய்த நாள்
05
ஜன
2012
11:01
ஸ்ரீவைகுண்டம்:நவதிருப்பதி கோயில்களில் இன்று 5 ம் தேதி வியாழக்கிழமை வைகுண்ட ஏகாதேசி திருவிழா நடைபெறுகிறது.நவதிருப்பதி கோயில்களில் மார்கழி திருவிழா பகல் பத்து திருவிழா எனவும் இரவுபத்து திருவிழா எனவும் கொண்டாடப்படுகிறது. கடந்த வாரம் 26ந் தேதி தொடங்கிய பகல் பத்து திருவிழாவில் இன்று 5ம் தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை யொட்டி காலை 4.30 மணிக்கு நவதிருப்பதி கோயில்களில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபதரிசனமும் காலை 6 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி, நத்தம் விஜயசன பெருமாள், திருப்புளியங்குடி காயசினி வேந்த பெருமாள், பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள், திருக்கோளூர் ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள், தென் திருபேரை மகர நெடுங்குழைக் காதர், ரெட்டை திருப்பதி தேவர் பிரான் மற்றும் அரவிந்த லோசனர், ஆழ்வார்திருநகரி ஆதிநாத பெருமாள் தாயார்களுடன் சயனகோலத்தில் அருள் பாலிக்கின்றனர். மாலை திருமஞ்சனம் நடைபெறுகிறது. ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோயிலில் இரவு 7 மணிக்கும் தென் திருபேரை மகர நெடுங் குழை க்காதர் கோயிலில் இரவு 6 மணிக்கும் ஆழ்வார்திருநகரி ஆதிநாத பெருமாள் கோயிலில் 6ம் தேதி காலை 12.30 மணிக்கும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.நவதிருப்பதி கோயில்களுக்கு காலை முதல் மாலை வரை வெளியூரில் இருந்து வரும் வாகனங்கள் ஒருவழிபாதையாக ஸ்ரீவைகுண்டம், நத்தம், ஆயத்துறை வழியாக இரட்டைதிருப்பதி ஸ்தலங்க ளுக்கு செல்ல காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி இராமசுப்பிரமணியன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.