பதிவு செய்த நாள்
17
ஏப்
2018
01:04
கரக்பூர், சிந்து சமவெளி நாகரிகம், 900 ஆண்டுகளாக ஏற்பட்ட வறட்சியால் அழிந்து போனதாக, கரக்பூர், ஐ.ஐ.டி., கண்டறிந்துள்ளது. மேற்கு வங்கத்தில், உள்ள கரக்பூர், ஐ.ஐ.டி.,யைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சிந்து சமவெளி நாகரிகம் அழிந்தது தொடர்பான ஆராய்ச்சிகளை நடத்தினர். அவர்களின் ஆய்வு முடிவுகள், சமீபத்தில் வெளியாகின. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இமயமலையில் இருந்து ஓடிய நதியால், சிந்து சமவெளி நாகரிக பகுதி செழிப்பாக இருந்தது. ஒரு கட்டத்தில், நதியோட்டம் நின்று போய், 900 ஆண்டுகளாக, அப்பகுதியில் நீண்ட வறட்சி நிலவியது.இதனால், சிந்து சமவெளி நாகரிக கால மக்கள், மழை, நீர்வளம் மிக்க, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர். இவர்கள், காலப்போக்கில், கங்கை - யமுனை பள்ளத்தாக்கு, கிழக்கு மற்றும் மத்திய, உ.பி., பீஹார், கிழக்கு வங்கம், ம.பி., விந்தியாச்சலின் தெற்கு, தெற்கு குஜராத் ஆகிய பகுதிகளில் குடிபுகுந்தனர்.இவ்வாறு ஆய்வு முடிவில் கூறப்பட்டுஉள்ளது.சிந்து சமவெளி நாகரிக பகுதியில், 200 ஆண்டுகளாக தொடர் வறட்சி நிலவியதால், அப்பகுதி மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்ததாக முன்பு கூறப்பட்டது. அதை மறுக்கும் வகையில், தற்போதைய ஆய்வறிக்கை முடிவுகள் அமைந்துஉள்ளன.