பதிவு செய்த நாள்
21
ஏப்
2018
02:04
குன்னுார்:குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில், 73வது ஆண்டு முத்துப்பல்லக்கு விழா கோலாகலமாக நடந்தது.குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த, 6ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நேற்று தந்தி மாரியம்மன் கேரளா சேவா சங்கம் சார்பில், 73வது ஆண்டு முத்துப்பல்லக்கு திருவிழா கொண்டாடப்பட்டது. அதில், காலை, 10:00 மணிக்கு வி.பி., தெரு சுப்ரமணியசுவாமி கோவிலில் இருந்து, பஞ்ச வாத்தியம் பூக்காவடி, அம்பலவயல் காவடி, கருடசேவை, சிங்காரி மேளம், உலக்கையாட்டம், தேவி ரக்ஷா, முத்துரத காளைகளுடன் துவங்கிய கும்ப கலச ஊர்வலம் மாரியம்மன் கோவிலை அடைந்தது. அங்கு அம்மனுக்கு, 108 குடம் பசும்பால், 108 இளநீர் மற்றும் அபிஷேக பொருட்களுடன், தந்தி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடந்தன. மேலும், பிரம்மாண்ட சிம்பன்சி, பாலகேளி எனப்படும் சிவ தாண்டவத்தில், கால பைரவர் நிகழ்ச்சி, நாட்டுப்புற பாட்டுகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது.
மாலை, 3:30 மணிக்கு ஐயப்பன் கோவிலில் இருந்து முத்துரத காளை வாகனத்தில் அம்மன்; முத்துப்பல்லக்கில் தந்திமாரியம்மன் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஊர்வலம், தீயணைப்பு நிலையம், பஸ் ஸ்டாண்ட், கஷே்பஜார், டி.டி.கே., ரோடு,விநாயகர் கோவில் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.