பதிவு செய்த நாள்
25
ஏப்
2018
12:04
கூவத்துார்: கூவத்துார் சிதம்பரேஸ்வரர் கோவில், இந்து சமய அறநிலைய துறைக்கே சொந்தமானது என, மதுராந்தகம் சார்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கூவத்துாரில், 200 ஆண்டுகள் பழமையான, திரிபுரசுந்தரி அம்பாள் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. கடந்த, 1959ல், இந்து சமய அறநிலையத் துறை உருவாக்கப்பட்ட போது, இதன் நிர்வாகத்தின் கீழ் இக்கோவில் கொண்டு வரப்பட்டது. கோவிலுக்கு சொந்தமாக, 3.20 ஏக்கர் நன்செய் நிலம் உண்டு. இதே பகுதியில், ஞானியார் மடம் நடத்திய, முத்துக்குமார சுவாமி என்பவர், கோவிலில் அர்ச்சகராக இருந்தார். நாளடைவில், மடத்திற்கே கோவில் சொந்தம் என்றார். தன்னை, பரம்பரை அறங்காவலராக நியமிக்க கோரி, அத்துறை துணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.
இவ்வழக்கு தள்ளுபடியான நிலையில், ஆணையர் நீதிமன்றத்தில், மேல்முறையிட்டு, அங்கும் வழக்கு தள்ளுபடியானது. இதற்கிடையே அவர் இறக்க, மனைவி கமலாம்பாள், இணை ஆணையர் நீதிமன்றத்தில், 1999ல் வழக்குத் தொடர்ந்து, அப்போதும் தள்ளுபடியானது. அவரும் இறந்து விடவே, அவரது உறவினர் மகன் ராமலிங்கம் என்பவர், இவ்வழக்கை கவனித்தார். இதற்கிடையே, அறநிலையத் துறை, மாமல்லபுரம், ஆளவந்தார் அறக்கட்டளை செயல் அலுவலரை, கோவிலின் தக்கராக நியமித்து, அறக்கட்டளை குழு கோவிலாக நிர்வகிக்க அறிவித்தது. நியமனத்தை எதிர்த்து, மதுராந்தகம் சார்பு நீதிமன்றத்தில், ராமலிங்கம் வழக்குத் தொடர்ந்து, 10 ஆண்டுகளாக நடந்தது. இந்நிலையில், கோவில், மடத்திற்கு சொந்தமானதாக நிரூபிக்க இயலாத நிலையில், அரசுக்கே சொந்தமான பொதுக்கோவில் என, சமீபத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.