பதிவு செய்த நாள்
26
ஏப்
2018
02:04
சிதிலமடைந்துள்ள கிராம கோவில்களின் திருப்பணிக்கான நிதிக்கு, முழு வரி விலக்கு அளிக்க வேண்டும் என, கிராம கோவில் நிர்வாகத்தினர் கோரி உள்ளனர்.தமிழகத்தின் குக்கிராமங்களில், ஒரு கால பூஜைக்கே வழியின்றி, ஏராளமான கோவில்கள் உள்ளன. அவற்றில், சிதிலமடைந்த கோவில்களை சீரமைக்க, திருக்கோவில் திருப்பணி நிதி என்ற பெயரில், அறநிலையத்துறை சார்பில், ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.இந்த நிதி, முழுமையாக கிடைப்பதில்லை. திருப்பணி மதிப்பீடு செலவு, கட்டட தொழிலாளர் நல நிதி, ஜி.எஸ்.டி., வரி என, பல்வேறு வகையில், 20 ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது.இது பற்றி கிராமப்புற மக்களுக்கு விபரம் தெரியாத நிலையில், கோவில் நிர்வாகத்தினர், 20 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொள்வதாக, புகார் எழுகிறது. இதனால், இருக்கும் தொகையில், திருப்பணி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, திருப்பணிக்கு வழங்கும் நிதிக்கு, வரி விலக்கு பெற்று தர அறநிலையத்துறையும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம கோவில் நிர்வாகத்தினர் கோரி உள்ளனர்.