பதிவு செய்த நாள்
26
ஏப்
2018
02:04
லக்னோ: உ.பி, மாநிலம், அலகாபாதில், அடுத்த ஆண்டு நடக்க உள்ள கும்பமேளாவில், தலித் துறவிக்கு, மஹா மண்டலேஷ்வர் பட்டம் வழங்கப்படுகிறது.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அசாம்கார் மாவட்டத்தைச் சேர்ந்தவர், கண்ணையா பிரபுனந்த் கிரி, ௩௨. சிறு வயதிலிருந்தே, ஆன்மிகத்தில் அதிக நாட்டம் உடையவராக இருந்தார். சமஸ்கிருதத்தில் முதுகலை பட்டம் பெற்றபின், சண்டிகரில் உள்ள, பாரதிய ஜோதிஷ் விஞ்ஞான் கேந்திராவில் சேர்ந்து படித்தார். இதன்பின், அகில இந்திய அகாரா பரிஷத் எனப்படும், அகில இந்திய துறவியர் பேரவையின், ஒரு பிரிவான, ஜுனா அகாராவில் சேர்ந்தார். நாட்டின் பல பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து, ஆன்மிகம் மற்றும் ஹிந்து மதம் பற்றி பிரசாரம் செய்து வந்தார்.இந்நிலையில், கண்ணையா பிரபுனந்த் கிரிக்கு, மஹா மண்டலேஷ்வர் பட்டத்தை வழங்க, அகில இந்திய துறவியர் பேரவை முடிவு செய்துள்ளது. துறவறம் ஏற்று, சிறப்பாக சேவை செய்தோருக்கு மட்டுமே, இந்த பட்டம் வழங்கப்படும். அடுத்த ஆண்டு, அலகாபாதில் நடக்க உள்ள கும்பமேளாவில், இந்த பட்டத்தை கிரிக்கு, துறவியர் பேரவை வழங்குகிறது.