மயிலம்: சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை வக்ர காளியம்மன் கோயிலில் நள்ளிரவில் மெகா தீபம் ஏற்றப்பட்டது.
மயிலம் அடுத்த திருவக்கரையில் சித்திரா பவுர்ணமி ஜோதி தரிசன விழாவை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு சந்திரமவுலீஸ்வரர், வக்கிரகாளியம்மனுக்கு அபிஷேகம் வழிபாடு நடந்தது. தொடர்ந்து 7:00 மணிக்கு நடந்த 1008 சங்கு அபிஷேகம் நடந்தது. காலை 8:00 மணிக்கு வக்கிரகாளியம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், சந்திரமவுலீஸ்வரர், வக்கிரகாளி, குண்டலிமா முனிவர், வரதராஜபெருமாள், வள்ளி, தெய்வானை சுப்பரமணியர், வக்கிரசனி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் மகா தீபாரதனை நடந்தது. இரவு 8:00 மணிக்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முத்துப் பல்லக்கில் சுவாமி வீதியுலா காட்சி நடந்தது. இரவு 12 மணிக்கு பவுர்ணமி ஜோதி தரிசனம் நடந்தது. விழாவில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.