பதிவு செய்த நாள்
05
மே
2018
12:05
பழநி: பழநி முருகன் கோயிலில் ஐம்பொன்சிலை மோசடி வழக்கில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், குருக்களிடம் இருந்து மீண்டும் விசாரணையை துவக்கியுள்ளனர். 2004ல் பழநி முருகன்கோயிலுக்கு 200 கிலோவில் ஐம்பொன்சிலை செய்ததில் மோசடி செய்ததாக, அப்போதைய நிர்வாக அதிகாரி கே.கே.ராஜா, ஸ்தபதி முத்தையா ஆகியோரை சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் கைதுசெய்தார்.
இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டு நீதிமன்றம் உத்தரவின்பேரில் மீண்டும் பொன்.மாணிக்கவேல் விசாரிக்கிறார். ஜாமீனில் ராஜா, ஸ்தபதி முத்தையா வந்தனர். இந்நிலையில், பழநியில் சிலைக்கடத்தல், தடுப்புபிரிவு டி.எஸ்.பி., கருணாகரன் குழுவினர் மீண்டும் விசாரணையை துவக்கியுள்ளனர். அதில் 2004ல் கோயில் ராஜபண்டித குருக்களாக இருந்த கண்ணன் இறந்து விட்டதால், அவரது மகன் சுகிசிவம் குருக்களிடம் டி.எஸ்.பி., கருணாகரன் நேற்றிரவு2 மணிநேரம் விசாரணை செய்தார். அதில் சிலை தொடர்பாக ஏதேனும் விபரம் தெரியுமா, கண்ணன் ராஜபண்டிதர் பதவியை விட்டு விலகியதற்கான காரணம் குறித்தும் விசாரித்தனர்.மேலும் 2004ம் ஆண்டில் பணியில் இருந்த அதிகாரிகள், அலுவலர்கள், குருக்களிடம் விசாரணை நடத்த உள்ளனர். டி.எஸ்.பி., கருணாகரன் கூறுகையில், இன்னும் நிறைய பேரிடம் விசாரணை செய்ய வேண்டியுள்ளது. வேறு முக்கிய தகவல் எதுவும் இல்லை என்றார்.