பதிவு செய்த நாள்
10
மே
2018
02:05
திருச்சிற்றம்பலம் கூட்ரோடு:கிளியனுார் கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழாவில் ஏராளமானபக்தர்கள் கலந்துகொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழுப்புரம் மாவட்டம், கிளியனுாரில் பிரசித்தி பெற்ற திரவுபதியம்மன் கூத்தாண்டவர் கோவில் திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, கடந்த 2ம் தேதிஅரக்கு மாளிகை உற்சவம் நடந்தது. ௩ம் தேதி பக்காசூரனுக்கு சோறு போடுதல் (சம்ஹாரம் செய்தல்), 4ம் தேதி அம்மனுக்கு திருமண உற்சவம், 5ம் தேதி கரக உற்சவம், 6ம் தேதி பாரதம் படித்தல், மாடு மிரட்டல், அரவாண் கடபலி, தபசு உற்சவம் ஏறுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. இதையடுத்து, 7ம் தேதி அம்மனுக்கு தீ மிதி உற்சவம், 8ம் தேதி சிரசு ஊர்வலம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு தேர் புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்தது. மாலை 4:00 மணிக்கு கூத்தாண்டவர் தேரோட்டம் நடந்தது. கிளியனுார் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முன்பு காசு, மணிலா, மிளகாய், போன்ற தானியங்களை பக்தர்கள் கொள்ளைவிட்டு, நேர்த்தி கடன் செலுத்தினர். மாலை 6:00 மணிக்கு கூத்தாண்டவர் சுவாமிக்கு தாலி கட்டிய பெண்கள் வேடமிட்டவர்கள், தாலி அறுத்து ஒப்பாரி வைத்து அழுதனர். கிளியனுார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.