பதிவு செய்த நாள்
18
மே
2018
10:05
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுாரில் அவதரித்த ஸ்ரீராமானுஜருக்கு, அந்நகரில் மணிமண்டம் அமைக்க, ஏழு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கட்டுமான பணிக்கான, ’டெண்டர்’ விடப்பட்டுள்ளதால், வேத பாடசாலை, தகவல் மையத்துடன் ராமானுஜருக்கு, விரைவில் மணி மண்டபம் அமைய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஸ்ரீபெரும்புதுாரில், 1017ம் ஆண்டு அவதரித்தவர் வைணவ மகான் ஸ்ரீராமானுஜர். இவர் அந்த காலத்திலேயே சமய, சமூக, சமுதாய சீர்திருந்தங்களை ஏற்படுத்தியவர். அவரின் மனித நேய பண்புகளும், கொள்கை, கோட்பாடுகளும் அனைத்து தரப்பினரும் போற்றி, பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ராமானுஜர் அவதரித்த, 1,000வது ஆண்டு விழா, கடந்த ஆண்டு ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் விமரிசையாக கொண்டாடப் பட்டது. இதை முன்னிட்டு, ராமானுஜருக்கு பெருமை சேர்க்கும் வகையில் மணி மண்டபம் அமைக்க, தமிழக சுற்றுலா துறை சார்பில் திட்டமிடப்பட்டது. இதற்காக, ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையம் அருகே, கோவிலுக்கு சொந்தமான, 2.79 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன், ராமானுஜருக்கு மணி மண்டபம் கட்டுவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்காக, 6 கோடியே 96 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, இந்து சமய அறநிலைய துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆசிய மேம்பாட்டு வங்கியின் நிதி உதவியுடன் ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜருக்கு மணி மண்டபம், வேதபாட சாலை, வேதபாட சாலையில் பயிலும் மாணவர்களுக்கான தங்கும் விடுதி அமைக்கப்பட உள்ளன.மேலும், ராமானுஜர் பற்றிய வரலாற்று தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில், தகவல் மையம் அமைத்து அங்கு, நுாலகம், வரலாற்று தகவல்கள் புகைபடங்கள், ராமானுஜரின் வாழ்கை வரலாறு குறித்த குறும்படத்தை பொதுமக்களுக்கு காட்ட உள்ளோம். கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.