பதிவு செய்த நாள்
21
மே
2018
03:05
கோவை: தென் கைலாய பக்தி இயக்கத்தினர், வெள்ளியங்கிரி மலைப்பகுதியில், துாய்மைப்பணியில் ஈடுபட்டனர். 315 கிலோ எடையில், பாலிதீன் கழிவு சேகரித்தனர்.
தென் கைலாயம் என்றழைக்கப்படும் வெள்ளி யங்கிரி மலைக்கு, மேற்கு தமிழகம் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் இருந்து சித்திரை, வைகாசி மாதங்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மலை ஏறும் பக்தர்கள், பிளாஸ்டிக் குளிர்பான பாட்டில்கள், பாலித்தீன் பைகள் மற்றும் கவர்களை வீசிச்சென்று விடுகின்றனர். தென்கைலாயத்தை பாதுகாக்கும் பொருட்டு, தென்கைலாய பக்தி இயக்கம் செயல்பட்டு வருகிறது. இவ்வியக்கத்தில் அங்கம் வகிக்கும் பக்தர்கள், வெள்ளியங்கிரி மலைப்பகுதியில், நேற்று துாய்மைப்பணியில் ஈடுபட்டனர். காலை 8:00 மணிக்கு துவங்கிய துாய்மைப்பணி, மாலை 4:00 மணி வரை நடந்தது. கோவை, சென்னை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து வந்திருந்த தன்னார்வ தொண்டர்கள், முதல் ஐந்து மலைகளில், 315 கிலோ எடை பிளாஸ்டிக் குப்பை மற்றும் கழிவுகளை அப்புறப்படுத்தினர். இதன் தொடர்ச்சியாக உலக சுற்றுச்சூழல் தினமான, மே 27 அன்று, துாய்மை பணி மேற்கொள்ள, இவ்வியக்கும் முடிவு செய்துள்ளது. துாய்மைப்பணியில் தங்களை தன்னார்வலராக இணைத்துக்கொள்ள, 8300083111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.