பதிவு செய்த நாள்
28
மே
2018
01:05
சிவகங்கை: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி பெருவிழாவையொட்டி மூலவர் போன்ற உற்ஸவரான களியாட்ட கண்ணாத்தாள் வெள்ளி ரதத்தில் காட்சியளித்ததால் பக்தர்கள் பரவசமடைந்தனர். விழா மே 19ல் அனுக்ஞை விக்னேஸ்வரர் பூஜையுடன் துவங்கியது. மே 20 ல் கொடியேற்றம்; காப்புக் கட்டுதல் நடந்தன. தினமும் உற்ஸவர் காலை வெள்ளி கேடயத்திலும், இரவில் சிம்மம், காமதேனு, யானை, பூதம், வெள்ளி ரிஷப போன்ற வாகனங்களில் உலா வந்தார். மே 26ல் தங்கரதம், அன்னவாகன புறப்பாடு நடந்தன. நேற்று காலை 8:10 மணிக்கு மூலவர் போன்று காட்சியளிக்கும் மற்றொரு உற்ஸவரான களியாட்ட கண்ணாத்தாளுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார மண்டபத்தில் அபிேஷகம் நடந்தது. களியாட்ட கண்ணாத்தாள் இரவு வெள்ளி ரதத்தில் எழுந்தருளி, தேரோடும் வீதிகளில் வலம் வந்தார். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வந்து காட்சியளிப்பதால் பக்தர்கள் பரவசமடைந்தனர். தொடர்ந்து நள்ளிரவில் வெள்ளி குதிரை வாகன புறப்பாடு நடந்தது. இன்று காலை 9:10 மணிக்கு தேரோட்டம், இரவு புஷ்ப பல்லக்கு, மே 29 காலை பால்குடம், பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியும், இரவில் வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் முயல்குத்தி திருநாள் நடக்கும். மே 30 ல் வெள்ளி ஊஞ்சல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.