பதிவு செய்த நாள்
30
மே
2018
12:05
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில், கருட சேவை திருவிழா, நேற்று, விமரிசையாக நடைபெற்றது. வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, பெருமாளை தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், வைகாசி பிரம்மோற்சவம், கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாம் நாள் கருட சேவை உற்சவத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 4:50 மணிக்கு, கோபுர தரிசனத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். பின், அங்கிருந்து சுவாமி புறப்பட்டு, திருக்கச்சி நம்பி தெரு வழியாக, விளக்கடி தெரு தேசிகர் கோவிலை அடைந்தார். அங்குப்பெருமாளுக்கு மரியாதை அளிக்கப்பட்டது. அங்கிருந்து தாயார் குளம் சாலை வழியாக பிள்ளையார்பாளையம் சென்றார். தொடர்ந்து, புத்தேரி தெரு வழியாக கச்சபேஸ்வரர் கோவிலை, காலை, 10:00 மணிக்கு அடைந்தார். அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு காட்சியளித்தார். குடை மாற்றப்பட்டதும், கோவிந்தா... கோவிந்தா... என, பக்தர்கள் கோஷமிட்டனர்.
வழக்கமாக புறப்பாடு முடிந்து, காலை, 11:30க்குள், கோவிலை பெருமாள் சென்றடைவார். நேற்று காலை கோபுர தரிசனம் முடிந்து, சுவாமி புறப்பட்டதும், சுவாமியை துாக்கி செல்லும் தடி பழுதானது. அதனால், அதை மாற்றி விட்டு வேறு தடி பொருத்தி, சுவாமி புறப்பட தாமதம் ஆனது. வெயில் அதிகமாக இருந்ததால், கோடியக்காரர்கள் நீண்ட துாரம் சுமந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. அதனால் அடிக்கடி நிறுத்தி சென்றனர். சுவாமி ஊர்வலத்தில் பங்கேற்ற பெண்களுக்கு, செயின் பறிப்பிலிருந்து காத்துக் கொள்ள, போலீசார், சேப்டி பின் வழங்கினர். இந்த கருட சேவை உற்சத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று சுவாமியை வழிப்பட்டனர். வெளியூர்களிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் வெள்ளத்தில் வரதராஜப் பெருமாள் நீந்திச் சென்றார். கருட வாகனத்தில் வரதராஜப் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.