சூலுார்: சூலுார் மார்க்கெட் ரோட்டில் உள்ள பழமையான அத்தனுார் அம்மன் கோவிலில் 25ம் ஆண்டு வை காசி திருக்கல்யாண திருவிழா, கடந்த, 15ம் தேதி சாமி சாட்டுதலுடன் துவங்கியது. 22ம் தேதி இரவு அக்னி கம்பம் நடப்பட்டு, தினமும் பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடினர். நேற்று முன்தினம் பண்டார வேஷம், திருக்கல்யாண அம்மை அழைத்தல் நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு நொய்யல் ஆற்றில் இருந்து அம்மன் அழைப்பு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் பவனி வந்த அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. மாலை,4:00 மணிக்கு மாவிளக்கு அலங்கார பூஜை நடந்தது. இரவு வள்ளி கும்மி நடந்தது. திருவிழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.