சோழவந்தான், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இக்கோயிலில் வைகாசி திருவிழா மே 21ல் கொடியேற்றத்துடன் தொடங்கி 17 நாட்கள் நடக்கின்றன. ஒன்பதாவது நாளான நேற்று முன்தினம் பக்தர்கள் பால் குடம் எடுத்தும், அக்னிசட்டி ஏந்தியும் கோயிலை சுற்றி ரத வீதிகளில் வலம்வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மாலை பூக்குழி திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி, காவடி, அக்னிசட்டி எடுத்து பூக்குழியில் இறங்கி அம்மனை வழிபட்டனர். மதுரை காளவாசல் சவுந்திரம், 52, பூக்குழியில் விழுந்து காயமடைந்தார்.