பதிவு செய்த நாள்
04
ஜூன்
2018
12:06
வழுதாவூர்: வி.நெற்குணம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவத்தில் ஏராளான பக்தர்கள் தீ மிதித்து, சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். வழுதாவூர் அடுத்த வி.நெற்குணம் கிராமத்தில் திரவுபதியம்மன், முத்துமாரியம்மன், சேப்பெருமாள், ஐய்யனாரப்பன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தீமிதி உற்சவம் கடந்த 27ம் தேதி துவங்கியது.இதையொட்டி, அன்று ஐய்யனாரப்பனுக்கு குதிரை விடுதல் நிகழ்ச்சி, சுவாமி வீதியுலா நடந்தது. 29ம் தேதி மதியம் 12:00 மணிக்கு சாகை வார்த்தல், இரவு 6:00 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. கடந்த 31ம் தேதி காலை 10:30 முதல் 12:00 மணி வரை திரவுபதியம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முக்கிய நிகழ்வாக, நேற்று பகல் 12:00 மணிக்கு படுகளம் நிகழ்ச்சி, மாலை 6:00 மணிக்கு தீ மிதி உற்சவம் நடந்தது. இதில், நெற்குணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தீமிதித்து, சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.