ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ஸ்ரீதாயாருக்கு பகல் பத்து உற்சவ விழா கோலாகலமாக தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து ஸ்ரீதாயாரை தரிசித்தனர். ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடந்தாலும் மார்கழி மாதத்தில் பகல்பத்து, ராப்பத்து இயற்பா என 21 நாட்கள் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். வைகுண்ட ஏகாதசி விழா நம்மாழ்வார் மோட்சத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து ஸ்ரீதாயாருக்கு நடக்கும் திருவத்யயன உற்சவம் என்றழைக்கப்படும் பகல் பத்து விழா கடந்த 16ம் தேதி தொடங்கி நடந்து வருகின்றது. இது வரும் 20ம் தேதி வரை நடக்கிறது. தினமும் மாலை ஆறு மணி முதல் 8.30 மணி வரை ஸ்ரீதாயார் மூலஸ்தானத்திலேயே இருக்க முன்புறம் உள்ள மண்டபத்தில் அரையர்கள் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களில் உள்ள பாசுரங்களை படிப்பர். இதை ஸ்ரீதாயார் மனங்குளிர்ந்து கேட்பதாக ஐதீகம். இதேபோல், இன்று 21ம் தேதி ராப்பத்து உற்சவம் தொடங்கி 25ம் தேதி நிறைவடைகிறது. இந்த நாட்களில் ஸ்ரீதாயார் தினமும் மாலை ஆறு மணிக்கு ஸ்ரீதாயார் மூலஸ்தானத்தில் இருந்து சிறப்பு அலங்காரத்துடன் புறப்பட்டு பங்குனி உத்திர சேர்த்தி மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு அரையர்கள் இசைக்கும் திருவாய்மொழி பாசுரங்களைக் கேட்டு மகிழ்வார். இரவு ஒன்பது மணிக்கு ஸ்ரீதாயார் அங்கிருந்து புறப்பட்டு வீணை வாத்தியங்கள் முழங்க மூலஸ்தானம் அடைவார். ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா நிகழ்ச்சிகளில் ஸ்ரீதாயார் கலந்துகொள்வதில்லை. இதில் கலந்துகொண்டு ஆழ்வார்களில் தீந்தமிழ் பாசுரங்களை கேட்கும் வாய்ப்பு தமக்கு திட்டவில்லையே என்று அரையர்கள் கனவில் தோன்றி வருந்தினராம். இதன் பிறகு தான் ஸ்ரீரெங்கநாதருக்கு நடத்தியது போல் ஸ்ரீதாயாருக்கென்று பத்து நாள் மேற்கண்ட விழா நடத்தப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.