பதிவு செய்த நாள்
25
ஜூன்
2018
12:06
வாழப்பாடி: வாழப்பாடி அருகேயுள்ள, பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் குளம் சீரமைக்கப்பட வேண்டும். பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில், வசிஷ்ட நதிக்கரையொட்டி அமைந்துள்ளது. கோவிலில் சிற்பக்கலைக்கு, மகுடம் சூட்டும் வகையில், பல்வேறு சிற்பங்கள் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள, கல்யாண விநாயகரை வணங்கினால், திருமணம் கைக்கூடும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு பிரதோஷம், சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளில் பங்கேற்க, பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து தரிசித்து செல்கின்றனர். பல சிறப்புகளை பெற்றாலும், கோவில் வளாகம் முன்பு, அயோத்தியாப்பட்டணம் சாலையை யொட்டியுள்ள பழமை வாய்ந்த குளம், தற்போது முட் புதர்கள் நிறைந்தும், குப்பை கொட்டும் இடமாகவும் மாறி வருகிறது. மேலும், படிக்கட்டுகள் சேதமடைந்துள்ளன. குளத்தை சீரமைத்து, தண்ணீர் விடுவதற்கு உரிய நடவடிக்கையை, இந்துசமய அறநிலையத்துறை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.