காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவிலில், பிரசித்தி பெற்ற மாங்கனி திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. விழாவில், பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான, புனிதவதியார் என்ற காரைக்கால் அம்மையாருக்கு, புதுச்சேரி பிராந்தியமான, காரைக்காலில் கோவில் அமைந்துள்ளது. சிவபெருமான் மீது, புனிதவதியார் கொண்ட தீவிர பக்தியை விவரிக்கும் வகையில், இக்கோவிலில், ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.நேற்று முன்தினம், காரைக்கால் அம்மையார் - பரமதத்தர் திருக்கல்யாணம் நடந்தது. மாலை, பிஷாடணமூர்த்தி வெள்ளைசாத்தி புறப்பாடு, இரவு அம்மையார் - பரமதத்தர் முத்துப்பல்லக்கில் வீதி உலா நடந்தது.நேற்று அதிகாலை பிஷாடணமூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. வேதபாராயணங்கள் மற்றும் மேளதாளம் முழங்க, காலை, 9:15 மணிக்கு, பவழக்கால் விமானத்தில் சிவபெருமான் காவியுடை, ருத்ராட்சம் தரித்து, பிச்சாண்டவர் மூர்த்தியாக எழுந்தருளி வீதி உலா வந்தார்.அப்போது, சிவபெருமானுக்கு பக்தர்கள் மாங்கனியை வைத்து அர்ச்சனை செய்து, வழிபட்டனர். தொடர்ந்து, வீடுகளின் மாடிகளில் இருந்து, பக்தர்கள் மாங்கனி வீசும் வைபவம் நடந்தது. பக்தர்கள் இந்த மாங்கனிகளை ஆர்வத்துடன் பிடித்து, வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். விழாவில், பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர்.