அமர்நாத் தரிசன யாத்திரை பலத்த பாதுகாப்புடன் துவக்கம்
பதிவு செய்த நாள்
28
ஜூன் 2018 10:06
ஜம்மு: அமர்நாத் பனி லிங்க தரிசன யாத்திரை, பலத்த பாதுகாப்புடன் நேற்று துவங்கியது.ஜம்மு - காஷ்மீரில், கவர்னர் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அமர்நாத் குகையில், ஆண்டுதோறும், ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க, நாடு முழுவதிலும் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கடந்த ஆண்டு, ௨.௬௦ லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள், பனிலிங்கத்தை தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு, அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான முன் பதிவு, இரண்டு மாதங்களுக்கு முன் துவங்கியது. இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர், முன் பதிவு செய்துள்ளனர். யாத்ரீகர்கள் தங்குவதற்காக, ஜம்முவில், அமர்நாத் மலையடிவார பகுதியான பார்வத் நகரில், முகாம் அமைக்கப்பட்டு உள்ளது.பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான முதல் குழு, நேற்று புறப்பட்டது. ௧௦௭ வாகனங்களில், ௧௨௦ துறவியர், ௨௧ குழந்தைகள், ௫௨௦ பெண்கள் உட்பட ௨,௯௯௫ பக்தர்கள், பலத்த பாதுகாப்புடன், நேற்று காலை புறப்பட்டனர். யாத்ரீகர்கள் குழு, பால்தால், பஹல்காம் பகுதியில் உள்ள முகாம்களை சென்றடையும். அங்கிருந்து இரண்டு குழுக்களாக பிரிந்து, பனி லிங்கத்தை தரிசிக்க, பாத யாத்திரையாக செல்வர். யாத்திரையை, கவர்னரின் ஆலோசகர்கள், பி.பி.வியாஸ், கே. விஜயகுமார் ஆகியோர், கொடியசைத்து துவக்கி வைத்தனர்.விஜயகுமார் கூறுகையில், அமர்நாத் யாத்திரை, மிகவும் முக்கியமான நிகழ்வு. நாடு முழுவதிலும் இருந்து, பனி லிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் வருகின்றனர். ஜம்மு -காஷ்மீரின் கவுரவ அடையாளமாக, அமர்நாத் யாத்திரை திகழ்கிறது, என்றார்.
உச்சக்கட்ட பாதுகாப்பு: அமர்நாத் யாத்ரீகர்களுக்கு, முன் எப்போதும் இல்லாத அளவில், உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.யாத்ரீகர்கள் செல்லும் வாகனங்கள், வானொலி அலைவரிசை மூலம் இணைக்கப்பட்டு, அதை கட்டுப்பாட்டு அறையில், போலீசார் கண்காணிக்கின்றனர்.யாத்ரீகர்கள் செல்லும் வாகனங்களுக்கு, முன்னும் பின்னும், ஜீப் மற்றும் மோட்டார் சைக்கிள்களில், துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் செல்கின்றனர். யாத்திரை பாதை முழுவதும், ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆளில்லா சிறிய ரக விமானங்கள் மூலமும், கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையே, யாத்திரை செல்பவர்கள், எங்கள் விருந்தினர்கள்; அவர்களை தாக்க மாட்டோம். அது போன்ற திட்டம், எங்களிடம் இல்லை என, ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது.
|