பதிவு செய்த நாள்
28
ஜூன்
2018
01:06
ஈரோடு: செல்வமாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். ஈரோடு, பெரியசேமூர் பொன்னி நகரில் எழுந்தருளியுள்ள செல்வமாரியம்மன் கோவில் குண்டம், பொங்கல் திருவிழா கடந்த, 19ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, கம்பம் நடுதல், பூவோடு வைத்தல், தீர்த்த ஊர்வலம் நடந்தன. கோவில் முன் நடப்பட்டுள்ள, கம்பத்திற்கு, மஞ்சள், வேப்பிலை கலந்த புனித நீரை ஊற்றி பெண்கள் வழிபட்டனர். நேற்று, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள், குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். அம்மன் அழைத்தல் நிகழ்ச்சிக்கு பிறகு, குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. குண்டத்தை சுற்றிலும் கற்பூரம் ஏற்றப்பட்ட பின், கோவில் தலைமை பூசாரி, ராஜேந்திரன் பூங்கரகத்தை தலையில் வைத்தபடி, முதலில் குண்டம் இறங்கினார். அவரை தொடர்ந்து, பலர் குண்டம் இறங்கினர். ஆண்கள் சிலர், தங்கள் குழந்தைகளை சுமந்த படியும், பெண்கள் வேப்பிலை கொத்துகளை கையில் ஏந்தி, ஓம் சக்தி, பராசக்தி என, கோஷமிட்டபடி குண்டம் இறங்கினர். அங்குள்ள சப்பரத்தில், இருந்தபடி செல்வமாரியம்மன் உற்சவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஈரோடு, மாணிக்கம்பாளையம், பெரியசேமூர், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.