பதிவு செய்த நாள்
29
ஜன
2026
12:01
திருநின்றவூர்: திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவிலில், அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரில், 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரகதாம்பாள் சமேத இருதயாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலின் திருப்பணி முடிந்த நிலையில், அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடந்தது.
இதை முன்னிட்டு, கடந்த 23ம் தேதி முதல் யாகசாலை வளர்க்கப்பட்டு, கணபதி ஹோமத்தில் இருந்து பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில், கும்பாபிஷேக நாளான நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, சோமகும்ப பூஜை, நான்காம் கால யாகசாலை பூஜை, ஹோமம் நடந்தது. அதைத்தொடர்ந்து மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம், கலச புறப்பாடு நடந்தது.
பின், மூலவர் விமானம் உள்ளிட்ட அனைத்து விமானங்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், இருதயாலீஸ்வரர், மரகதாம்பிகை மற்ற மூல மூர்த்திகள், பரிவார தெய்வங்களுக்கு சமகால கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர். நேற்று மாலை மரகதாம்பிகை சமேத இருதயாலீஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதைத்தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடந்தது.
கும்பாபிஷேக நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட அறநிலையத் துறை இணை கமிஷனர் அனிதா, துணைக் கமிஷனர் சிவஞானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் லதா மேற்கொண்டார்.