ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்த பெரிய நாகபூண்டியில் திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான நாகவள்ளி சமேத நாகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
ராகு பரிகார தலமான இக்கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. இதற்கான யாகசாலை பூஜை, கடந்த 25ம் தேதி காலை கணபதி பூஜையுடன் துவங்கியது.
நேற்று முன்தினம் காலை மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது. இதில், பெங்களூரு ஆக்ஸ்போர்டு கல்வி குழும தலைவர் நரசிம்ம ராஜி மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, நேற்று காலை 11:20 மணிக்கு, கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு திருக்கல்யாணமும், அதை தொடர்ந்து சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.