ஆண்டவர் உருக்கமாக செய்கிற ஜெபங்களுக்கு உடனடியாக செவி சாய்ப்பார் என்பதற்கு ஒரு சம்பவம். ஒரு ஆலயத்தில் பாடகர் குழு இருந்தது. அதில் முப்பது ஆண்டுகளாக ஒருவர் உருக்கமுடன் பாடி வந்தார். அவரது பாடல் உள்ளத்தை உருக்குவதாக இருக்கும். ஆனால், பாடகர் குழு தலைவர் வேறு மாதிரியாக நினைத்தார். ‘இவருக்கு வயதாகி விட்டது. குரல் கரகரப்பாக இருக்கிறது.’ என்று கருதி ஒரு இளைஞனை நியமித்தார். சில நாட்கள் கழிந்தன. ஒருநாள் கனவில் ஒரு தேவதூதன் தோன்றி, “பாடல் குழுத்தலைவரே! முப்பது ஆண்டுகளாக பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ஆண்டவர், அந்த முதியவரின் குரலை சமீப காலமாக கேட்காததால் கவலையோடு இருக்கிறார்,” என்றான். திடுக்கிட்டு விழித்த தலைவர் தவறை உணர்ந்தார். முதியவரை மீண்டும் பாட ஏற்பாடு செய்தார். குரலை விட உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரும் பக்தியைத் தான் கடவுள் விரும்புகிறார்.