ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி தெப்பம்பட்டி மாவூற்று வேலப்பர் கோயிலில், தை அமாவாசை விழா நடந்தது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். மலைப்பகுதியில் உள்ள மருத மரங்களின் வேர் பகுதியில் இருந்து வரும் சுனை நீரில் குளித்து வேலப்பர் சுவாமியை வழிபட்டால் மனக்கவலைகள் தீரும், நோய்கள் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேற்று கோயிலுக்கு வந்து சென்றனர். காவல் தெய்வம் கருப்பசாமிக்கு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் பொங்கலிட்டு, மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேவாரம்:அனுமந்தன்பட்டி, ஹனுமந்தராயப்பெருமாள் கோயிலில், தை அமாவாசை சிறப்பு பூஜைகள் நடந்தன. மூலவர், சொர்ண அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சர்க்கரை பொங்கல், வடை, எள்சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டன. அறங்காவலர், வெங்கட்ராமன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.