பதிவு செய்த நாள்
23
ஜன
2012
12:01
வேதாரண்யம்: தை அமாவாசையையொட்டி, வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை கடலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.ரிக், யஜூர், சாம, அதர்வணம் என நான்கு வேதங்கள் இறைவனை வழிபட்ட பெருமைக்குரியது திருமறைக்காடு. வடமொழியில், மறை, வேதமாகவும், காடு, ஆரண்யமாகவும் மாறி, ஊருக்கு பெயர் வேதாரண்யமானது.வேதங்கள் வழிபட்ட ஸ்தலம் என்பதால், வேதாரண்யத்தில் உள்ள காட்டுக்கு பெயர் வேதவனம் என்றும், கடலுக்கு பெயர் வேதநதி என்றும், ஏரிக்கு பெயர் வேதாமிர்த ஏரி என்றும் வேதங்களின் பெயராலேயே அழைக்கப்படுகிறது.ஆண்டுதோறும் தை அமாவாசை தினத்தன்று, வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை கடலில், ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.நேற்று தை அமாவாசை தினத்தையொட்டி, வேதாரண்யம் சன்னதி கடலிலும், கோடியக்கரையில் உள்ள சித்தர்கட்டம் கடலிலும், தங்களது முன்னோர்கள் நினைவாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திதி கொடுத்து, தர்ப்பணம் செய்து புனித நீராடினர்.
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள மணிக்கர்ணிகை தீர்த்தத்தில் நீராடி, திருமணக்கோலத்தில் அருள்பாலித்த வேதாரயண்யேஸ்வரரை வழிபட்டனர். தமிழக தேர்தல் கமிஷனர் சோ அய்யர், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கோகுலகிருஷ்ணன் உட்பட முக்கிய பிரமுகர்கள் கடலில் புனித நீராடி, வேதாரண்யேஸ்வரை வழிபட்டனர். பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை வேதாரண்யம் நகராட்சி நிர்வாகத்தினர் செய்திருந்தனர். சாய்பாபா பக்தர்கள் சார்பில் நான்குகால் மண்டபம் அருகே நடந்த அன்னதானத்தை, எம்.எல்.ஏ., காமராஜ் துவக்கி வைத்தார். நகராட்சித்தலைவர் மலர்கொடி அன்னதானம் வழங்கினார்.பல்வேறு சேவை அமைப்புகள் சார்பில், பக்தர்களுக்கு நீர், மோர், பானகம் வழங்கப்பட்டது. தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களிலிருந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. வேதாரண்யம் போலீஸ் டி.எஸ்.பி., குணசேகரன் தலைமையில், 200க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வேதாரயண்யேஸ்வரர் கோவிலில், லட்ச தீபம் ஏற்றும்விழா நேற்று மாலை நடந்தது. ஏராளமான பெண்கள் பங்கேற்று, லட்சத்தீபங்களை ஏற்றி, துர்க்கையம்மனை வழிபட்டனர்.*திருவையாறு: வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி ஆகிய ஐந்து ஆறுகள் பாய்வதால் திருவையாறு என்று பெயர் பெற்றது. இங்கு நீராடினால், காசிக்கு சென்று கங்கையில் நீராடும் புண்ணியம் கிடைக்கும் என்பது முன்னோர் வாக்கு. ஆண்டுதோறும் தை அமாவாசையன்று நடக்கும் தீர்த்தவாரி சிறப்புமிக்கது.நேற்று தை அமாவாசையையொட்டி, திருவையாறு காவிரி ஆறு புஷ்ப மண்டலப் படித்துறையில், அறம் வளர்த்த நாயகி சமேத ஐயாறாப்பர் வெள்ளி ரிஷப வாகனத்தில் தீர்த்தவாரி கண்டருளினர். ஆற்றில் அஸ்திர தேவருக்கு பல்வேறு பொருட்களால் அர்ச்சனை செய்விக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்தனர்.