Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
11. பாத்திரம் பெற்ற காதை 13. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை
முதல் பக்கம் » மணிமேகலை
12. அறவணர்த் தொழுத காதை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2012
05:01

பன்னிரண்டாவது மணிமேகலை பாத்திரங் கொண்டு தன்னூர் அறவணர்த் தொழுத பாட்டு

அஃதாவது: மணிமேகலை அமுதசுரபியின் திறம் நின்னூரில் அறவணன் தன்பால் கேட்குவை என்று தீவதிலகை அறிவுறுத்தமையாலும் அறவணருடைய பெருமையை மணிமேகலா தெய்வமும் கூறி முற்பிறப்பிலே நின் தமைக்கையராயிருந்த தாரையும் வீரையுமே மாதவியாகவும் சுதமதியாகவும் நின்னொடு கூடினர் என்று அறிவுறுத்தமையானும் அவ்வறவண அடிகளாரைக் கண்டு தொழும் ஆர்வம் மிக்குத் தாயராகிய மாதவியோடும் சுதமதியோடும் சென்று வணங்கி அரிய பல உண்மைகளை அவர்பாலறிந்த செய்தியைக் கூறும் செய்யுள் என்றவாறு.

இதன்கண்- மணிமேகலை மாதவியோடும் சுதமதியோடும் அறவணவடிகளார் உறையும் பள்ளி இருக்குமிடம் வினவிச் சென்று அவர் அடிகளில் வணங்கித் தான் முன்பு உவவனதிற்குச் சென்றதும் ஆங்கு உதயகுமரன் வந்ததும் முதலாகத் தீவதிலகை அறவணர்பால் ஆபுத்திரன் வரலாறு கேள் என்று விடுப்ப வந்தது ஈறாகக் கூறுதலும் அறவணவடிகள் மீண்டும் பாதபங்கய மலையைப் பரவிச் சென்று மாதவிக்கும் சுதமதிக்கும் கணவனாகிய துச்சயனை ஒரு பொழிலிற் கண்டு உசாவியதும் அவன் தாரையும் வீரையும் சாவுற்றமை கூறியதும்; அறவணர் தம்மொரு பிறப்பிலே முற்பகுதியிலே தாரையும் வீரையுமாய் அரசன் மனைவியா யிருந்தவரே மாறிப் பிறந்து மாதவியும் சுதமதியுமாகி அப்பிறப்பின் பிற்பகுதியிலே தம்முன் வந்து நிற்றலைக் கண்டு

ஆடுங் கூத்தியர் அணியே போல
வேற்றேர் அணியொடு வந்தீரோ!

என வியந்து மணிமேகலைக்கு அவர் முற்பிறப்பு நிகழ்ச்சிகளைச் சொல்லியும் அமையாராய், புத்த ஞாயிறு தோன்றுதற்குக் காரணமும் அவன் தோன்றிய பின்னர் இவ்வுலகம் எய்தும் நலங்களும் விதந்தெடுத்துக் கூறுதலும் அமுதசுரபியைப் பெற்ற மணிமேகலைக்கு மக்கள் தேவர் என இருசாரார்க்கும் ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன் அது பசிப்பிணி தீர்த்தலே எனத் தவப்பெரு நல்லறம் சாற்றலும் பிறவும் பெரிதும் இன்பம் தரும் வகையில் கூறப்படுகின்றன.

ஆங்கு அவர் தம்முடன் அறவண அடிகள்
யாங்கு உளர்? என்றே இளங்கொடி வினாஅய்
நரை முதிர் யாக்கை நடுங்கா நாவின்
உரை மூதாளன் உறைவிடம் குறுகி
மைம் மலர்க் குழலி மாதவன் திருந்து அடி
மும் முறை வணங்கி முறையுளி ஏத்தி
புது மலர்ச் சோலை பொருந்திய வண்ணமும்
உதயகுமரன் ஆங்கு உற்று உரைசெய்ததும்
மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்திடை
அணி இழை தன்னை அகற்றிய வண்ணமும்  12-010

ஆங்கு அத் தீவகத்து அறவோன் ஆசனம்
நீங்கிய பிறப்பு நேர் இழைக்கு அளித்ததும்
அளித்த பிறப்பின் ஆகிய கணவனை
களிக் கயல் நெடுங் கண் கடவுளின் பெற்றதும்
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும்
வெவ் வினை உருப்ப விளிந்து கேடு எய்தி
மாதவி ஆகியும் சுதமதி ஆகியும்
கோதை அம் சாயல் நின்னொடும் கூடினர்
ஆங்கு அவர் தம் திறம் அறவணன் தன்பால்
பூங் கொடி நல்லாய்! கேள் என்று உரைத்ததும்  12-020

உரைத்த பூங்கொடி ஒரு மூன்று மந்திரம்
தனக்கு உரைசெய்து தான் ஏகிய வண்ணமும்
தெய்வம் போய பின் தீவதிலகையும்
ஐயெனத் தோன்றி அருளொடும் அடைந்ததும்
அடைந்த தெய்வம் ஆபுத்திரன் கை
வணங்குறு பாத்திரம் வாய்மையின் அளித்ததும்
ஆபுத்திரன் திறம் அறவணன் தன்பால்
கேள் என்று உரைத்து கிளர் ஒளி மா தெய்வம்
போக என மடந்தை போந்த வண்ணமும்
மாதவன் தன்னை வணங்கினள் உரைத்தலும்  12-030

மணிமேகலை உரை மாதவன் கேட்டு
தணியா இன்பம் தலைத்தலை மேல் வர
பொன் தொடி மாதர்! நல் திறம் சிறக்க
உற்று உணர்வாய் நீ இவர் திறம் உரைக்கேன்
நின் நெடுந் தெய்வம் நினக்கு எடுத்து உரைத்த
அந் நாள் அன்றியும் அரு வினை கழூஉம்
ஆதி முதல்வன் அடி இணை ஆகிய
பாதபங்கய மலை பரவிச் செல்வேன்
கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன்
துச்சயன் தன்னை ஓர் சூழ் பொழில் கண்டேன்  12-040

மா பெருந் தானை மன்ன! நின்னொடும்
தேவியர் தமக்கும் தீது இன்றோ? என
அழிதகவு உள்ளமொடு அரற்றினன் ஆகி
ஒளி இழை மாதர்க்கு உற்றதை உரைப்போன்
புதுக் கோள் யானைமுன் போற்றாது சென்று
மதுக் களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம்
ஆங்கு அது கேட்டு ஓர் அரமியம் ஏறி
தாங்காது வீழ்ந்து தாரை சாவுற்றதூஉம்
கழி பெருந் துன்பம் காவலன் உரைப்ப
பழ வினைப் பயன் நீ பரியல் என்று எழுந்தேன்  12-050

ஆடும் கூத்தியர் அணியே போல
வேற்று ஓர் அணியொடு வந்தீரோ? என
மணிமேகலைமுன் மடக்கொடியார் திறம்
துணி பொருள் மாதவன் சொல்லியும் அமையான்
பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த
நறு மலர்க் கோதாய்! நல்கினை கேளாய்
தரும தலைவன் தலைமையின் உரைத்த
பெருமைசால் நல் அறம் பெருகாதாகி
இறுதி இல் நல் கதி செல்லும் பெரு வழி
அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து கண் அடைத்தாங்கு  12-060

செயிர் வழங்கு தீக் கதி திறந்து கல்லென்று
உயிர் வழங்கு பெரு நெறி ஒரு திறம் பட்டது
தண் பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம்
உண்டு என உணர்தல் அல்லது யாவதும்
கண்டு இனிது விளங்காக் காட்சி போன்றது
சலாகை நுழைந்த மணித் துளை அகவையின்
உலா நீர்ப் பெருங் கடல் ஓடாது ஆயினும்
ஆங்கு அத் துளை வழி உகு நீர் போல
ஈங்கு நல் அறம் எய்தலும் உண்டு எனச்
சொல்லலும் உண்டு யான் சொல்லுதல் தேற்றார்  12-070

மல்லல் மா ஞாலத்து மக்களே ஆதலின்
சக்கரவாளத்துத் தேவர் எல்லாம்
தொக்கு ஒருங்கு ஈண்டி துடித லோகத்து
மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப
இருள் பரந்து கிடந்த மலர் தலை உலகத்து
விரி கதிர்ச் செல்வன் தோன்றினன் என்ன
ஈர் எண்ணூற்றோடு ஈர் எட்டு ஆண்டில்
பேர் அறிவாளன் தோன்றும் அதன் பிற்பாடு
பெருங் குள மருங்கில் சுருங்கைச் சிறு வழி
இரும் பெரு நீத்தம் புகுவது போல  12-080

அளவாச் சிறு செவி அளப்பு அரு நல் அறம்
உளம் மலி உவகையோடு உயிர் கொளப் புகூஉம்
கதிரோன் தோன்றும் காலை ஆங்கு அவன்
அவிர் ஒளி காட்டும் மணியே போன்று
மைத்து இருள் கூர்ந்த மன மாசு தீரப்
புத்த ஞாயிறு தோன்றும்காலை
திங்களும் ஞாயிறும் தீங்கு உறா விளங்க
தங்கா நாள் மீன் தகைமையின் நடக்கும்
வானம் பொய்யாது மா நிலம் வளம்படும்
ஊன் உடை உயிர்கள் உறு துயர் காணா  12-090

வளி வலம் கொட்கும் மாதிரம் வளம்படும்
நளி இரு முந்நீர் நலம் பல தரூஉம்
கறவை கன்று ஆர்த்தி கலம் நிறை பொழியும்
பறவை பயன் துய்த்து உறைபதி நீங்கா
விலங்கும் மக்களும் வெரூஉம் பகை நீங்கும்
கலங்கு அஞர் நரகரும் பேயும் கைவிடும்
கூனும் குறளும் ஊமும் செவிடும்
மாவும் மருளும் மன் உயிர் பெறாஅ
அந் நாள் பிறந்து அவன் அருளறம் கேட்டோர்
இன்னாப் பிறவி இகந்தோர் ஆதலின்  12-100

போதி மூலம் பொருந்திய சிறப்பின்
நாதன் பாதம் நவை கெட ஏத்துதல்
பிறவி தோறும் மறவேன் மடக்கொடி!
மாதர் நின்னால் வருவன இவ் ஊர்
ஏது நிகழ்ச்சி யாவும் பல உள
ஆங்கு அவை நிகழ்ந்த பின்னர் அல்லது
பூங் கொடி மாதர் பொருளுரை பொருந்தாய்!
ஆதி முதல்வன் அருந் துயர் கெடுக்கும்
பாதபங்கய மலை பரசினர் ஆதலின்
ஈங்கு இவர் இருவரும் இளங்கொடி! நின்னோடு  12-110

ஓங்கு உயர் போதி உரவோன் திருந்து அடி
தொழுது வலம் கொண்டு தொடர் வினை நீங்கிப்
பழுது இல் நல் நெறிப் படர்குவர் காணாய்
ஆர் உயிர் மருந்து ஆம் அமுதசுரபி எனும்
மா பெரும் பாத்திரம் மடக்கொடி! பெற்றனை
மக்கள் தேவர் என இரு சார்க்கும்
ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன்
பசிப் பிணி தீர்த்தல் என்றே அவரும்
தவப் பெரு நல் அறம் சாற்றினர் ஆதலின்
மடுத்த தீக் கொளிய மன் உயிர்ப் பசி கெட
எடுத்தனள் பாத்திரம் இளங்கொடி தான் என்  12-121

மணிமேகலை மாதவியோடும் சுதமதியோடும் சென்று அறவணவடிகளாரை வணங்கித் தான் எய்திய பேறுகளை இயம்புதல்

1-6: ஆங்கவர்...............ஏத்தி

(இதன் பொருள்) ஆங்கு அவர் தம்முடன் இளங்கொடி அறவண அடிகள் யாங்கு உளர் என்று வினா அய்-இவ்வாறு மாதவியோடும் சுதமதியோடும் அறவணர் திருவடிகளை வணங்க எழுந்த இளைய பூங்கொடி போல்வளாகிய மணிமேகலை அவ்வறவணவடிகளார் எவ்விடத்தே உறைகின்றார் என்று அறிந்தோரை வினவித் தெரிந்துகொண்டு; நிரைமுதிர் யாக்கை நடுங்கா நாவின் உரை முதாளன் உறைவிடம் குறுகி- நரைத்து முதிர்ந்த யாக்கையுடைய யாரேனும் நடுக்கமில்லாத செந்நாவினை யுடையராய் அறமுரைத்தலிற்றிலை சிந்த முதுமையுடையோராயிருந்த அவ்வறவணவடிகளார் உறைகின்ற தவப் பள்ளியை அடைந்து; மைம்மலர்க் குழலி- கரிய கூந்தலையுடைய அம் மணிமேகலை அவரைக் கண்டதும்; மாதவன் திருந்து அடி மும்முறை வணங்கி முறையுளி ஏத்தி-அந்தப் பெரிய தவத்தை யுடையவனுடைய திருந்திய நடையினையுடைய திருவடியை மூன்றுமுறை வலம்வந்து வணங்கி நூன்முறைப்படி வாழ்த்திய பின்னர் என்க.

(விளக்கம்) அவர்- மாதவியும் சுதமதியும். வினாஅய்- வினவி. யாக்கை நரைத்து முதிர்ந்ததேனும் மொழிகுழறல் முதலியன இன்றி நன்கு உரைக்கும் ஆற்றலோடிருந்தனர் என்பது தோன்ற நடுங்கா நாவின் உரை மூதாளன் என்றார். உறைவிடம் என்றது தவப்பள்ளியை. மைம் மலர்க்குழலி, வாளாது சுட்டுப் பெயராந்துணையாய் நின்றது. ஒழுக்கத்தை அடியின் பாலதாக்கித் திருந்தடி என்றார். முறை-நூன்முறை அவருடைய வாழ்த்தினைப் பெற்றபின்னர் என்று பாட்டிடை வைத்த குறிப்பினாலே கூறிக்கொள்க.

மணிமேகலை தன் திறத்திலே நிகழ்ந்தவற்றை அறவண அடிகளார்க்கு அறிவித்தல்

7-20: புதுமலர்............உரைத்தலும்

(இதன் பொருள்) புதுமலர்ச் சோலை பொருந்திய வண்ணமும் மாதவியின் பணி மேற்கொண்டு மலர் கொய்தற் பொருட்டுத் தானும் சுதமதியும் உவவனத்திற் சென்று புகுந்த செய்தியும் ஆங்கு உதயகுமரன் உரை செய்ததும்-அம் மலர்வனத்துள் உதயகுமரன் தன்பால் பெரிதும் காமமுடையவனாய் வந்து கூறிய செய்தியும்; மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்திடை அணியிழை தன்னை அகற்றிய வண்ணமும்-அவ் வுவவனத்தினின்றும் மணிமேகலா தெய்வம் விஞ்சையிற் பெயர்த்துத் தன்னை மணிபல்லவத்திடை வைத்துப் போய செய்தியும்; ஆங்கு அத் தீவகத்து அறவோன் ஆசனம் நீங்கிய பிறப்பு நேரிழைக்கு அளித்ததும்-அங்கு அம் மணிபல்லவத் தீவின்கண் தான்கண்ட புத்தபெருமானுடைய இருக்கையாகிய தருமபீடிகை தனக்குப் பழம் பிறப்புணர்த்திய செய்தியும்; அளித்த பிறப்பின் ஆகிய கணவனைக் களிக்கயல் நெடுங்கண் கடவுளிற் பெற்றதும்- பழம் பிறப்புணர்த்துமாற்றால் அப் பிறப்பின்கண் தனக்குக்கணவனாகிய இராகுலன் மாறிப்பிறந்த பிறப்பினைக் களிக்கின்ற கயல்மீன் போன்ற நெடிய கண்ணையுடைய மணிமேகலா தெய்வத்தாலே அறியப் பெற்றதும்; மீண்டும் அத் தெய்வம் தன்னை நோக்கி; தவ்வையராகிய தாரையும் வீரையும் வெவ்வினை உருப்ப விளிந்து கேடு எய்தி-முற்பிறப்பிலே உனக்குத் தமக்கைமாராயிருந்த தாரை என்பவளும் வீரை என்பவளும் தாம் முற்செய் தீய ஊழ்வினை உருந்து வந்தூட்டுதலாலே இறந்து அவ்வுடம்பு ஒழிந்த பின்னர்; மாதவியாகியும் சுதமதி யாகியும் கோதையம் சாயல் நின்னொடுங்கூடினர்- நின் தாயாகிய மாதவியும் தாயன்பு சான்ற சுதமதியுமாகப் பிறப்புற்று மணிமேகலாய் நின்னோடும் தொடர்புடையராயினர் எனவும்; பூங்கொடி நல்லாய் ஆங்கு அவர்தந்திறம் அறவணன் தன்பால் கேள் என்று உரைத்ததும்- பூங்கொடி போலும் அழகுடையோய் நீ நின்னூரின்கண் அத் தாரையும் வீரையுமாகிய நின் தமக்கையர் செய்தியை அறவணவடிகளார்பாற் சென்று கேட்கக் கடவை என்று தனக்குக் கூறிய செய்தியையும்; என்க.

(விளக்கம்) புதுமலர்ச்சோலை என்றது-உவவனத்தை. உதயகுமரன் ஆங்கு உற்று உரை செய்ததும் என்றது அவன் தன்னை இகழ்ந்தமையையும் சித்தராபதியாற் சேர்தலும் உண்டு என்று கூறியதனையும் கருதிக் கூறியபடியாம்.

அறவோன் ஆசனம்-புத்தபீடிகை. பிறப்புணர்ச்சியை அளித்தது என்றவாறு. ஆகிய கணவன் என்றது இராகுலனை. கடவுள்- மணிமேகலா தெய்வம். மீன் தன் குஞ்சுகளைப் பார்க்குமாபோலே அவள்பால் அருட்பார்வை கொண்ட தெய்வம் என்பாள், களிக்கயல் நெடுங்கட் கடவுள் என்றாள்(15) தவ்வையராகி...........(20) நல்லாய் கேள் என்பன மணிமேகலா தெய்வத்தின் கூற்றைக் கொண்டு கூறிய படியாம்.

இதுவுமது

21-30: உரைத்த.........உரைத்தலும்

(இதன் பொருள்) உரைத்த பூங்கொடி ஒரு மூன்று மந்திரம் தனக்கு உரை செய்து தான் ஏகிய வண்ணமும்-அறவணவடிகள்பால் கேள் என்று கூறிய மலர்க்கொடி போன்ற அழகுடைய மணிமேகலா தெய்வம் ஒப்பற்ற மூன்று மந்திரங்களைத் தனக்குச் செவியறிவுறுத்தி வானத்திலேறி மறைந்த செய்தியும்; தெய்வம் போய்பின் தீவதிலகையும் ஐயெனத் தோன்றி அருளொடும் அடைந்ததும்-அத் தெய்வம் மறைந்து போன பின்னர்த் தீவதிலகை என்னும் மற்றொரு தெய்வம் ஐயென்று தான் வியக்கும்படி வானின்றிழிந்து தனக்கு முன் தோன்றி அருளோடும் தன்னை எய்தியதும்; அடைந்த தெய்வம் ஆபுத்திரன்கை வணங்குறு பாத்திரம் வாய்மையின் அளித்ததும்-அருள் ஒழுகும் முகத்தோடும் அடைந்த காவற் றெய்வமாகிய அத் தீவதிலகை தானும் ஆபுத்திரன் என்னும் அறவோன் கையகத்துப் பயின்ற வணங்கத் தகுந்த சிறப்போடு கூடிய அமுதசுரபி யென்னும் பிச்சைக் கலத்தை அதனியல்பெல்லாம் வாய்மையாகக் கூறித் தன்கையிற் புகுதுமாறு செய்தருளியதும்; ஆபுத்திரன் திறம் அறவணன் தன்பால் கேள் என்று உரைத்து அமுதசுரபிக்குரிய ஆபுத்திரனுடைய வரலாற்றை அறவணவடிகள்பால் கேட்டறிக என்று சொல்லி; கிளர் ஒளி மாதெய்வம் போக என மடந்தை போந்த வண்ணமும்-மிக்கு விளங்கும் ஒளியையுடைய சிறந்த அத் தீவதிலகை யென்னும் தெய்வம் இனி, நீ நின்னூர்க்கும் செல்லுக என்று விடுப்பத் தான் புகார் நகர்க்கு வான்வழியாக வந்தெய்திய செய்தியும் ஆகிய இவற்றையெல்லாம்; மாதவன் தன்னை வணங்கினள் உரைத்தலும்-அவ்வறவணவடிகளாரை வணங்கிச் சொல்லா நிற்றலும் என்க.

(விளக்கம்) பூங்கொடி:மணிமேகலா தெய்வம் (23). தெய்வம்- மணிமேகலா தெய்வம் (25). தெய்வம்- தீவதிலகை. ஐயென- வியக்கும்படி. ஐவியப்பாகும்(தொல்-உரி-29) வியத்தகுமொன்றனைக் காண்போர் ஐ என்று வாயாற் கூறி வியத்தல் உண்மையின் ஐ எனத் தோன்றி, என்றார். ஆபுத்திரன் திறம் ஆபுத்திரன் வரலாறு முதலியன.

அறவணவடிகளார் மகிழ்ந்து மாதவியும் சுதமதியுமாகிய இருவருடைய முற்பிறப்பு வரலாறு கூறுதல்

31-40: மணிமேகலை...................கண்டேன்

(இதன் பொருள்) மணிமேகலையுரை மாதவன் கேட்டுத் தலைத்தலை மேல்வர தணியா இன்பம்-மணிமேகலை கூறிய மொழிகளைக் கேட்ட அறவணவடிகளார் அவள் எய்திய ஆக்கங்கள் பலவற்றையும் கூறும்பொழுது ஒவ்வோராக்கத்திடத்தும் அவர் எய்தும் மகிழ்ச்சி மிகுத்துப் பெருகி வருதலாலே குறையாத பேரின்பத்தை யுடையவராய்; பொற்றொடி மாதர் நல்திறம் சிறக்க-நன்று நன்று நங்காய் நின்னாலே உலகிலே தோன்றும் பொன்வளையலணியும் மகளிரினத்தின் நற்பண்புகள் சிறந்தோங்குக; இவர் திறம் உரைக்கேன் நீ உற்று உணர்வாய்- மாதவியும் சுதமதியும் ஆகி ஈங்கு வந்தெய்திய இவருடைய வரவாற்றில் நீ அறிந்தது கிடப்ப எஞ்சியவற்றை யான் இப் பொழுது நினக்குக் கூறுவல் உள்ளம் பொருந்திக் கேட்டுணர்ந்து கொள்வாயாக; நின் நெடுந் தெய்வம் நினக்கு உரைத்த அந்நாள் அன்றியும்-உன் குலதெய்வமாகிய புகழால் நீண்ட அம் மணிமேகலா தெய்வம் நினக்குக் கூறிய அந்த நாளிலே யான் சென்ற தன்றியும்; அருவினை கழூஉம் ஆதிமுதல்வன் அடியிணை ஆகிய பாத பங்கயமலை பரவிச் செல்வேன்- போக்குதற்கரிய வினைகளைத் துவாரத் துடைக்கும் ஆதிசினேந்திரனாகிய புத்தருதடைய திருவடித் தாமரையின் சுவடு கிடப்பதாகிய அப் பாதபங்கய மலையை உள்ளத்தாலே நினைந்து வாழ்த்தி மீண்டுமொருநாள் அதனை வலம் வருதற் பொருட்டுச் செல்லும் யான்; கச்சயம் ஆளும் கழல்கால் வேந்தன் துச்சயன்றன்னை ஓர் சூழ் பொழில் கண்டேன் கச்சய நகரத்தை ஆள்கின்ற வீரக் கழலணிந்த காலையுடைய வேந்தனாகிய துச்சயனை முன்போலவே மரங்கள் சூழ்ந்த ஒரு சோலையிலே கண்டேன்காண் என்றார்; என்க.

(விளக்கம்) மணிமேகலை கூறிய செய்தியில் அவள் பெற்ற ஆக்கம் பலவாகலின் ஒவ்வோர் ஆக்கத்தையும் கேட்கும் தோறும் அறவண அடிகளார் இன்பம் மேலும்மேலும் பெருக இறுதியில் அவளைப் பாராட்டுவார் நின்னால் நின்னினத்து மாதர் நற்றிறம் உலகில் சிறப்பதாக! என்று வாழ்த்தினர் என்க. இதற்கு இங்ஙனம் நுண்ணிதின் உரை கூறாது பொற்றொடிமாதர் என்பதனை விளி என்று கொள்வார் உரை சிறவாமை யுணர்க. பிறர் ஆக்கங்கண்டு பெரிதும் மகிழ்தலும் எல்லாரும் இன்புற்று வாழவேண்டும் என்று விரும்புவதுமே சான்றேரியல்பாகலின்.

மாதவியும் சுதமதியுமாகிய இருவருடைய முற்பிறப்பின் முடிவுகள் இவ் வுலக நிலையாமையை நன்குணர்த்தி மணிமேகலையின் மெய்யுணர்விற்கு ஆக்கமா யமையும் என்பது கருதி இவர் திறம் உரைக்கேன் உற்றுணர்வாய் என்று விதந்தோதினர்.

மணிமேகலா தெய்வம் மணிமேகலைக்குக் குலதெய்வமாதல் பற்றி நின்தெய்வம் என்றார். தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் அத் தெய்வத்தின் பெருந்தகைமைபற்றி நெடுந்தெய்வம் என்றார்.

நின் தெய்வம் நினக்கெடுத்துரைத்த அந்நாள் என்றது துச்சயன் மனைவியரோடு மலையில் ஆடிக் கங்கைக் கரையிருந்துழி அறவணன் ஆங்கு அவன்பாற் சென்றான் என மணிமேகலா தெய்வம் கூறிய அந் நாளை என்க.(10-55-8) அந்நாள் அன்றியும் மீண்டும் ஒருநாள் செல்வேன் என்றவாறு.

இதுவுமது

41-50: மாபெருந்..............எழுந்தேன்

(இதன் பொருள்) மாபெருந்தானை மன்ன-அப்பொழுது யான் அம் மன்னனை நோக்கி, மிகப் பெரிய படைகளையுடைய வேந்தனே!; நின்னொடும் தேவியர் தமக்கும் தீது இன்றோ என-உனக்கும் உன் மனைவிமார் இருவர்க்கும் தீது ஏதுமின்றி இனிது வாழ்கின்றீரோ என வினவினேனாக!; அழிதகவு உள்ளமொடு அரற்றினன் ஆகி ஒளி இழை மாதர்க்கு உற்றதை உரைப்போன் அதுகேட்ட அம் மன்னவன் துன்பத்தாலே அழிகின்ற நெஞ்சத்தோடே வாழ்விட்டு அழுகின்றவனாய் ஒளிமிக்க அணிகலன் அணிந்த தன் மனைவியர் இருவர்க்கும் ஒருசேர நிகழ்ந்த நிகழ்ச்சியைக் கூறுபவன்; வீரை மதுக்களி மயக்கத்து போற்றாது புதுக்கோள் யானை முன் சென்று மாய்ந்ததூஉம்-தன் மனைவியரிருவருள் இளையாளாகிய வீரை என்பவள் கள்ளுண்டு களித்தமையாலுண்டான மயக்கங் காரணமாகப் புதுவதாகப் பற்றிக் கொணர்ந்த காட்டியானையின்முன் தன்னைப் போற்றிக் கொள்ளமற் சென்று அதனால் கொல்லப்பட் டொழிந்த செய்தியும்; தாரை ஆங்கு அதுகேட்டுத் தாங்காது ஓர் அரமியம் ஏறி வீழ்ந்து சாவுற்றதூஉம்- மூத்தாளாகிய தாரை தானும் அப்பொழுதே வீரையின் சாவுச் செய்தியைக் கேட்டுத் துயரம் தாங்கமாட்டாமல் ஒரு நெடுநிலை மாடத்துச்சியிலுள்ள நிலா முற்றத்திலேறி அங்கிருந்து நிலத்திலே குதித்து இறந்துபட்ட செய்தியுமாகிய; கழிபெருந் துன்பம் காவலன் உரைப்ப-மிகவும் பெரிய துயரச் செய்திகளை அம் மன்னவன் சொல்லியழ; பழவினைப் பயன் நீ பரியல் என்று எழுந்தேன்-அது கேட்ட யானும் இவையெல்லாம் பழவினையின் பயன்களே யாகும் ஆகவே, அவற்றிற்கு வருந்துதல் பயனில் செயலாம் வருந்தற்க என்று ஆறுதல் கூறி அவ்விடத்தினின்றும் சென்றேன்காண்; என்றார் என்க.

(விளக்கம்) மன்ன: விளி மாதர்-தாரையும் வீரையும் ஆகிய மன்னன் மனைவியர்.புதுக்கோள்யானை-புதிதாகப் பற்றிக் கொணர்ந்து பழக்கப்படாத காட்டியானை. போற்றாது- தன்னைப் போற்றுதல் செய்யாது. வெம்பு கரிக்கு ஆயிரந்தான் வேண்டுமே என்னும் அறிவுரையைப் போற்றாது எனினுமாம். வீரை-இளையாள். தங்கையிறந்தமையாலுண்டான துயரம் பொறாது தாரை அரமியம் ஏறி வீழ்ந்திறந்தாள் என்றாள் என்க.

இதன்கண்- கள்ளுண்டலால் வரும் கேடும் காமத்தால் வரும் துன்பமும் பற்றுடைமையால் வருந்துன்பமும் யாக்கை நிலையாமையுமாகிய அறிவுரைகளும் குறிப்பாகப் போந்தமையும் உணர்க.

அறவண அடிகளார் மணிமேகலை முதலியோரைப் பாராட்டி அவர்க்குப் புத்தபெருமானுடைய தோற்றச் சிறப்பறிவுறுத்துதல்

51-62: ஆடுங்.............பட்டது

(இதன் பொருள்) ஆடுங் கூத்தியர் அணியேபோல வேற்றோர் அணியொடு வந்தீர் என-அவ்வாறு முற்பிறப்பிலே தாரையும் வீரையும் இலக்குமியும் என்னும் பெயரோடு சிறந்த அரசியராய்த் திகழ்ந்த நீயிரே கூத்தாட்டரங்கில் ஏறி ஆடும் நாடக மகளிர் ஒரு கோலம் புனைந்து ஆடியவர் அவ் வேடத்தைக் களைந்து அவ் வேடத்திற்கு மாறுபட்டவராக வேடம் புனைந்து வருமாறு போலவே என் முன்னர் வந்துள்ளீர்; ஓ என-நும்வரவு பெரிதும் வியக்கத் தகுந்தது கண்டீர்! என்று வியந்து மணிமேகலை முன் மடக்கொடியார் திறம்- மணிமேகலைக்கு முன்பு மாதவியும் சுதமதியும் ஆகிய அம் மடந்தையர் முற்பிறப்பிலே தாரையும் வீரையும் என்னும் அரசியராயிருந்து இறந்துபட்ட நிகழ்ச்சிகளை; துணிபொருள் மாதவன் சொல்லியும் அமையான்- மெய்ப்பொருளை யுணர்ந்த பெரிய தவத்தை யுடைய அவ்வறவணவடிகள் ஆர்வத்துடன் அறிவித்தும் அமையாராய்; பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த நறுமலர்க் கோதாய்- பழம் பிறப்பும் அறநெறியும் ஏது நிகழ்ச்சி காரணமாக நன்குணர்ந்த நறிய மலர்மாலை போன்ற மணிமேகலையே இனி யான் கூறுவதனை; நல்கினை கேளாய்- செவி கொடுத்துக் கேட்பாயாக!; தரும தலைவன் தலைமையின் உரைத்த பெருமைசால் நல்லறம் பெருகாது ஆகி- அறத்தின் முதல்வனாகிய புத்தபெருமான் தன் இறைமைத் தன்மை  காரணமாக உலகினர்க்கு ஓதியருளிய பெருமை மிக்க அழகிய அருளறம் உலகின்கண் பெருகாதொழியா நிற்ப; இறுதியில் நல்கதி செல்லும் பெருவழி-முடிவில்லாத நன்னிலையை எய்தச் செல்லுதற்குரிய அவ்வற நெறிதானும்; அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து கண் அடைத்து ஆங்கு-அறுகம் புல்லும் நெருஞ்சியும் அடந்து சிறிதும் இயங்க இடமின்றி அடைத்தாற் போலாகி  விட்டமையாலே; உயிர் வழங்கு பெருநெறி- மக்கட் பிறப்பெய்திய உயிர்கள் செல்லுதற் கமைந்த பெரிய வழியானது; செயிர் வழங்கு தீக்கதி திறந்து-குற்றங்களே பயில வழங்கும் தீய வழியாகத் திறக்கப்பட்டு; கல் என் ஒரு திறம்பட்டது-உயிர்கள் துன்பத்தால் ஆரவாரஞ் செய்தற் கியன்றதொரு தன்மையை யுடையதாயிற்று என்றார் என்க.

(விளக்கம்) ஆடுங்கூத்தியர் அணி-நாடகமாடும் மகளிர் புனைந்து கொள்ளும் வேடம்; கூத்தியர் மாற்றுவேடம் புனைந்து கொண்டு வந்து தோன்றுதல் போல் முன்னர் அரசியராய் வேடம் புனைந்து நடித்த நீயிர் இப்பொழுது பிக்குணி வேடம் புனைந்து கொண்டு எம்முள் வந்தீர் என்று வியந்த படியாம். அறவணவடிகளார் மணிமேகலை கூற்றால் இம் மாதவியும் சுதமதியும் தாம் தமது இளமைப் பருவத்திலே அரசியராய்க் கண்கூடாகக் காணப்பட்டவர். இவரே தமக்கு உண்டி முதலியன கொடுத்துப் போற்றியவர். அவ்வரசியரே மாறிப் பிறந்து இம்மையிலேயே தம்முதுமைப் பருவத்தே தம்மைக் காணப் பிக்குணிமகளிராய் வந்தனர் என்றறிந்தமையால் இந் நிகழ்ச்சி அவர்க்குப் பெரிதும் வியப்பை நல்குவதாயிற்று ஈண்டு ஆசிரியர் இளங்கோவடிகளார் மாடலன் கூற்றாக, ஆடுங் கூத்தர்போல் ஆருயிர் ஒரு வழிக் கூடிய கோலத் தொருங்குநின் றியலாது என்றோதிய தொடர் நினைவிற் கொள்ளற் பாலதாம்(சிலப்-28:195-196).

துணிபொருள் மாதவன்-அறவண அடிகள். அறவி-அறநெறி. நல்கினை-உவந்தனை எனலும் ஆம். உவந்து நல்கினும் நல்காயாயினும் என்புழி (புறநா-80)யும் அஃது அப் பொருட்டாதலறிக. தரும தலைவன்-புத்தர். இறுதியில் நற்கதி-வீடு. பெருவழி-அறநெறி. செயிர்-குற்றம். உயிர் வழங்கு பெருநெறி. என்றது மக்கட் பிறப்பெய்தியவர் பெரும்பாலோர் வாழும் நெறி. காம முதலிய செயிர்கட்கு அறுகையும் நெருஞ்சியும் உவமை என்க. தீக்கதி- பிறப்பினுட் புகுவதுதற்குக் காரணமான தீநெறி. ஒரு திறம்பட்டது என்றது மாந்தர் வாழும் நெறி தீக்கதியில் மட்டும் புகுதும் ஒரே வழியாக விட்டது. எனவே மாந்தர் வாழ்க்கையில் அறம் முழுதும் அழிந்தது, மறமே யாண்டும் பெருகியது என்றவாறாயிற்று.

புத்தர் மீண்டும் பிறக்கும் காலம்

63-71: தண்பனி.........ஆதலின்

(இதன் பொருள்) ஈங்கு-இந் நிலவுலகத்திலே; நல்அறம்-புத்த பெருமான் ஆதியிலோதிய நல்லறமானது; தண்பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம் உண்டு என உணர்தல் அல்லது-குளிர்ந்த பனி மூட்டத்தாலே மறைக்கப்பட்ட சிவந்த ஒளியையுடைய ஞாயிற்று மண்டிலமானது அழிவற்றது ஆதலால் உளதாதல் வேண்டும் என்று கருத்தளவையால் மட்டும் உணரப்படுவதன்றி, யாவதும் கண்டு இனிது விளங்காக் காட்சி போன்றது; சிறிதும் காட்சியளவையாற் காணப்பட்டு நன்கு விளங்காத மானதக் காட்சி மாத்திரையே ஆதல் போல்வதாயிற்று; சலாகை நுழைந்த மணித்துளை அகவையின் பெருங்கடல் உலாநீர் ஓடாதாயினும்- சிறிய சலாகை துளைத்துப் புகுந்த மணியின் கண்ணதாகிய சிறிய துளையினூடே பெரிய கடலிலே உலாவுகின்ற நீர் முழுவதும் புகுந்து செல்லாதாயினும்; ஆங்கு அத் துளைவழி உகும் நீர்போல-அவ்வாறாய அச்சிறிய மணித்துளை வழியே குடத்தின் முகந்து கொண்ட அக் கடல் நீரே ஒழுகுதல் போன்று; ஈங்கு நல்லறம் எய்தலும் உண்டு என-இவ் வுலகில் அந் நல்லறம் புகுதலும் உண்டு என்னும் கருத்தினாலே; யான் சொல்லலும் உண்டு- யான் செவ்வி பெற்றுழி அவ்வறத்தை அறிவுறுத்தலும் உண்டு; மல்லன் மாஞாலத்து மக்களே ஆதலின் சொல்லுதல் தேற்றார்-அங்ஙனம் அறிவுறுத்தும் பொழுதும் கேட்போ ரெல்லாம் வளமுடைய பெரிய இவ்வுலகத்து வாழ்கையையே அவாவுகின்ற மக்களே யாதலால் அவ்வறத்தைக் கேட்கும் கேளாராய்ச் சிறிதும் தெளிவாரல்லர்காண் என்றார் என்க.

(விளக்கம்) நல்லறம் இக்காலத்தே பனியால் விழுங்கப்பட்டுக் கட்புலனுக்குப் புலப்படாமல் கருத்தளவைக்குப் புலப்படுகின்ற ஞாயிறு போலக் காட்சியளவைக்குப் புலப்படாமல் மானதக்காட்சிக்கே புலப்படுவதொன்றாயிருக்கிறது. அங்ஙனமாயினும் யான் ஒல்லுமளவிற்கு அவ்வறத்தை உலகினர்க்குக் கூறி வருகின்றேன். கூறிய விடத்தும் கேட்போர் தகுதியின்மையால் அவ்வறத்தைத் தெளிகின்றிலர் என்று அறவணவடிகளார் பரிந்து கூறுகின்றனர் என்க.

கதிர் மண்டிலத்தைப் பனி விழுங்கினாலும் அதன் பேரொளி ஒரோ வழி அதனையும் ஊடுருவி அப் பணி மண்டலத்தின் புறம்பேயும் புலப்பட்டு அதனுள்ளே தனதுண்மையைப் புலப்படுத்தாமலிராது ஆதலின் நல்லறம் உண்டென உணர்தல் அல்லது யாவதும் கண்டினிது விளங்காக் காட்சி போன்றது என்னும் இவ்வுவமை ஆழ்ந்த கருத்துடையது இதனோடு,

உண்டோ லம்மவிவ் வுலக மிந்திரர்
அமிழ்த மியைவ தாயினு மினிதெனத்
தமிய ருண்டலு மிலரே முனிவிலர்
துஞ்சலு மிலர்பிற ரஞ்சுவ தஞ்சிப்
புகழெனின் உயிரும் தொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளல ரயரவிலர்
அன்ன மாட்சி யனைய ராகித்
தமக்கென முயலா நோன்றாட்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே    (புறநா. 182)

எனவரும் செய்யுள் நினைவு கூரற்பாலதாம்

யாவதும்- சிறிதும். மக்களேயாதலின் சொல்லுதல் தேற்றார் என மாறுக.

இதுவுமது

72-82: சக்கரவாள................புகூஉம்

(இதன் பொருள்) சக்கரவாளத்துத் தேவர் எல்லாம் தொக்கு இச் சக்கர வாளத்தினூடே வாழ்கின்ற தேவர்கள் எல்லாம் கூடி; ஒருங்கு துடிதலோகத்து ஈண்டி- ஒரு சேரத் துடிதலோகத்திலே சென்று; மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப-அங்குறைகின்ற தேவர்களுள் சிறந்த தேனுடைய திருவடிகளிலே வீழ்ந்து வேண்டா நிற்றலாலே; இருள் பரந்து கிடந்த மலர்தலை உலகத்து விரிகதிர்ச் செல்வன் தோன்றினன் என்ன-இருள் பரவிக் கிடந்த உலகின்கண் விரிந்த ஒளியையுடைய கதிரவன் தோன்றினாற் போன்று; ஈர் எண்ணாற்றோடு ஈர்எட்டு ஆண்டில்-இற்றை நாளிலிருந்து ஆயிரத்தறுதூற்றுப் பதினாறா மாண்டில்; பேரறிவாளன் தோன்றும் அதன் பிற்பாடு- பேரறிவுடையவனாகிய புத்தபெருமான் பிறந்தருளுவன் அப்பால்; பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி இரும்பெரு நீத்தம் புகுவதுபோல- பெரிய நீர் நிலையின்கண் கட்டப்பட்டுள்ள மதகாகிய சிறிய வழியனாலே மிகப் பெரிய வெள்ளம் புகுவதுபோல; அளவாச் சிறு செவி அளப்பு அரு நல் அறம்- எண்ணிறந்த மாந்தர் தம் சிறிய செவியினூடு அளத்தல் அரிய நன்மையுடைய மனப்பாட்டற மானது; உயிர் உளமலி உவகையொடு கொளப் புகூஉம்- மாந்தர் உயிர் உள்ளத்தே மிகுகின்ற மகிழச்சியோடு ஏற்றுக் கொள்ளுமாறு இனிது புகுங்காண் என்றார் என்க.

(விளக்கம்) இருள் அறியாமைக்குவமை. பேரறிவாளன்-புத்த பெருமான். பிற்பாடு- பின்பு: ஒரு சொல்.

துடிதலோகத்துறைகின்ற பிரபாபாலன் என்னும் தேவனே தேவர் வேண்டுகோட் கிணங்கி நிலவுலகிலே பிறந்தான் என்று பவுத்தர் நூல் சில நுவலும். கதிர்ச்செல்வன்-ஞாயிறு.

யான் கூறும் இவ்வறம் சலாகை நுழைந்த மணித்துளையினூடே ஒழுகும் நீர் போன்று ஒரு சிலர் செவியினூடு மிகவும் சிறிதே புகுதும். அவர்தாமும் மாக்களாதலால் அதனையும் தெளிகின்றிலர். புத்த பெருமான் தோன்றி அறங்கூறுங்கால் மதகு வழியாகக் குளத்தினூடு புகுகின்ற நீர் போன்று மிகுதியாக மாந்தர் செவியிற் புகுவதாம். அவர் முன்னிலையிற் சென்ற மாக்களும் அவரது தெய்வத் தன்மையாலே அவ்வறங்களைக் கேட்கும் போதே அவற்றைத் தெளிந்து பெரிதும் மகிழவும் மகிழ்வர் எனப் புத்தருக்கும் தமக்குமுள்ள வேற்றுமையை அடிகளார் ஈண்டு மணிமேகலைக்கு அறிவுறுத்துகின்றனர் என்றுணர்க.

ஈண்டு அறவணவடிகளார் புத்தர் ஆயிரத்தறுநூற்றுப் பதினாறாம் ஆண்டில் மீண்டும் நிலவுலகத்துப் பிறப்பார் என்று அறிவிப்பது அவர் கூறிய அவ்வாண்டிற்குப் பின்னர் நிகழும் காலத்தைக் குறிப்பதோ அன்றி யாதேனும் ஒரு சகாப்தத்தைக் குறிப்பதுவோ உறுதியாகத் துணிதற்கில்லை. ஒரோ வழி ஆதி புத்தர் பிறந்த யாண்டினை முதலாகக் கொண்டு வழங்கி வந்த புத்த சகாப்தம் ஒன்றிருந்திருக்கலாம்; அங்ஙனம் கொள்ளின் அப் புத்த சகாப்தத்தின்கண், அறவணர் காலங்காறும் கழிந்த யாண்டுகள் நிற்க அவற்றிற்கு மேல் நிகழும் யாண்டுகளாகக் கொள்ளல் வேண்டும்; உலகில் அறந்தலைதடுமாறும் பொழுதெல்லாம் நிலவுலகில் புத்தர் பிறந்து அறந்தலை நிறுத்துவர் என்பது பவுத்த சமயத்தார் கொள்கையுமாகும். இதனோடு,

சாவாது பிறவாது தனிமுதலா யிருந்தநான்
ஆவாவிவ் வுலகுபடும் அழிதுயர்தீர்ப் பதற்காக
மேவாது நின்றேயென் மாயையினான் மெய்யேபோல்
ஓவாது பிறந்திடுவன் உகந்தோறும் உகந்தோறும்

எனப் பகவத்கீதையில் வரும் கண்ணனுடைய திருவாக்கு ஒப்புநோக்கற் பாலதாம்(4-சம்பிரதாயவத்தியாயம்: செய் 7)

ஈண்டு அறவண அடிகளார் கூறும் புத்தர் பிறப்பு ஆதிபுத்தருடைய பிறப்பன்று; வழிவழிப்பிறக்கும் புத்தர்களுள் ஒருவர் பிறப்பையே கூறுகின்றார் என்று கொள்க.

இதுவுமது

83-92: கதிரோன்............தரூஉம்

(இதன் பொருள்) கதிரோன் தோன்றும் காலை ஆங்கு அவன் அவிர் ஒளி காட்டு மணியே போன்று மைத்து இருள் கூர்ந்த மனமாசு தீர ஞாயிறு தோன்றும் பொழுது அதன் விளங்குகின்ற ஒளியைத் தன்னுள்ளிருந்து வெளிப்படுத்துகின்ற சூரிய காந்தக் கல்லைப் போன்று, பண்டு கருகி இருள் மிகுந்த மாந்தருடைய மனம் அழுக்கு அகன்று தம்முள்ளிருந்து அறவொளியை வெளிப்படுத்தும்படி; புத்த ஞாயிறு தோன்றும் காலைத் திங்களும் ஞாயிறும் தீங்கு உறா விளங்க-புத்தன் என்னும் அவ்வறிவொளிப் பிழம்பு உலகிலே தோன்றிய காலத்தே வானத்தே இயங்குகின்ற திங்களும் ஞாயிறும் உள்ளிட்ட கோள்கள் எல்லாம் உலகில் தீங்கு நிகழாதபடி நன்னெறியிலே இயங்கி விளங்கா நிற்ப; தங்கா நாள் மீன் தகைமையின் நடக்கும்- சிறிதும் தங்காமல் இயங்குகின்ற அசுவினி முதலிய நாண்மீன்கள் தாமும் அங்ஙனமாய நன்னெறியிலேயே இயங்குவனவாம்; வானம் பொய்யாது-முகில் திங்களுக்கு மூன்று முறை பெய்யும் தன் தொழிலில் பிழையாது; மாநிலம் வளம்படும்-பெரிய நிலமும் கூல முதலிய செல்வத்தாற் சிறக்கும்; ஊன் உடை உயிர்கள் உறுதுயர் காணா-உடம்பெடுத்து வாழுகின்ற உயிர்கள் தாமும் மிக்க துன்பத்தை நுகாமாட்டா; வளி வலம் கொட்கும்- காற்றும் இனிதாக வலமாகச் சுற்றியியங்கும்; மாதிரம் வளம்படும்-மலைகளும் செல்வத்தாற் சிறக்கும். நளிஇரு முந்நீர் நலம் பல தரும்- செறிந்த பெரிய கடல் தானும் உயிர்கட்கு நன்மை பலவற்றையும் வழங்கா நிற்கும் என்றார் என்க.

(விளக்கம்) கதிரோன்.......காலை எனவரும் இதனோடு,

சூரியகாந் தக்கல்லி னிடத்தே செய்ய
சுடர்தோன்றி யிடச்சோதி தோன்று மாபோல்
ஆரியனாம் ஆசான்வந் தருளால் தோன்ற
அடிஞானம் ஆன்மாவில் தோன்றும்

எனவரும் சிவஞான சித்தியார்(சுபக்-280) நினைக்கத்தகும். அல்லதூஉம்

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு       (454)

எனவரும் அருமைத் திருக்குறளையும் நோக்குக.

மைத்து-கறுத்து. இருள்-அறியாமை. மனமாசு-அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் என்பன. மாசுதீர்ந்த நெஞ்சமே அறத்தின் பிழாம்பாதலின் மாசுதீர என்றொழிந்தார். என்னை?

மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற                 (குறள்-34)

எனவரும் பொய்யில் புலவன் பொருள் உரையும் காண்க.

நிலவுலகின்கண் வளம் மிகுதற்கும் வற்கடம் தீர்தற்கும் காரணமான வான் சிறப்புக் கோளும் நாளும் நன்னெறியிலியங்கும் பொழுதுண்டாம் என்பது பற்றி,

திங்களும் ஞாயிறும் தீங்குறா விளங்கத்
தங்கா நாண்மீன் தகைமையி னடக்கும்

என்றார். வளி-காற்று. காற்று வலஞ்சுற்றின் உலகின் வளம் பெருகும் என்ப. இதனை வலமாதிரத்தான் வளிகொட்ப எனவரும் மதுரைக் காஞ்சியினும் காண்க(5) மாதிரம்-மலை. மலைவளம் படுதலாவது- மலை தரும் பல பண்டங்களும் மிகுதல். அவையாவன தக்கோலம் தீம்பூத்தகைசால் இலவங்கம் கப்பூரம் சாதியோ டைந்து எனபன. முந்நீர் நலம்பலதரும் என்றதும் கடல்தரும் பல பண்டமும்-மிகுந்து நலந்தரும் என்றவாறு. அவை ஓர்க்கோலை சங்கம் ஒளிர் பவளம் வெண்முத்தம் நீர்ப்படும் உப்பினோடு டைந்து என்ப(சிலப்-10,107, மேற்)

இதுவுமது

92-103: கறவை..............மறவேன்

(இதன் பொருள்) கறவை கன்று ஆர்த்திக் கலநிறை பொழியும் பால் கறத்தலையுடைய ஆக்கள் தம் கன்றின் வயிறு நிறையச் சுரந்தூட்டிய பின்னரும் கறக்கும் கலங்கள் நிறையும்படி பாலைச் சுரந்து பொழியா நிற்கும்; பறவை பயன் துய்த்து உறைபதி நீங்கா- பறவைகள் தாம் வாழுமிடங்களிலேயே தமக்கு வேண்டிய இரைகளைப் பெற்றுத் தின்று காமவின்பமும் நுகர்ந்து தாம் தாம் இருக்கு மிடங்களினின்றும் பிறவிடங்களுக்குச் செல்ல மாட்டா; விலங்கும் மக்களும் வெரூஉப் பகை நீங்கும்-விலங்குப் பிறப்புற்ற உயிரும் மக்கட் பிறப்புற்ற உயிரும் தம்முள் ஒன்றற் கொன்று அஞ்சுதற்குக் காரணமான பகைமைப் பண்புகள் இலவாம்; கலங்கு அஞர் நரகரும் பேயும் கைவிடும்-நெஞ்சு கலங்குதற்குக் காரணமான துன்பத்தை நரகர் உயிரும் பேயுயிரும் விட்டொழியும்; கூனும் குறளும் ஊமும் செவிடும் மாவும் மருளும் மன்னுயிர் பெறா கூனும் குறளும் ஊமையும் செவிடும் ஊன்தடியும் மருளும் என்னும் குறையுடைய பிறப்புக்களை உயிர்கள் பெறாவாம்; அந் நாள் பிறந்து அவன் அருள் அறம் கேட்டோர்-புத்தபெருமான் பிறக்கின்ற அந்தக் காலத்திலே பிறந்து அப் பெருமான் அறிவுறுக்கும் அருளறத்தைக் கேட்கும் திருவுடையோர்; இன்னாப் பிறவி இகந்தோர் ஆதலின்-துன்பத்திற் கெல்லாம் காரணமாயிருக்கின்ற பிறப்பென்னும் பெருங்கடலையே கடந்தவராவாராதலின்; போதி மூலம் பொருந்திய சிறப்பின் நாதன்பாதம் நவைகெட ஏத்துதல் பிறவிதோறு மறவேன்-போதி மரத்தின் நிழலிலமர்ந்த சிறப்பினையுடைய நம் மிறைவனுடைய திருவடிகளை வாழ்த்திப் பிறப்பறும்படி வணங்குதலை யான் பிறப்புக்கடோறும் மறவேன் காண்! என்றார் என்க.

(விளக்கம்) நிலவுலகம் மழைவளம் பெற்றிருத்தலால் ஆக்கள் வயிறார மேய்ந்து பால் மிகுதியாகச் சுரக்கும் என்பார் கறவை கன்றார்த்திக் கலம் நிறைபொழியும் என்றார். கன்றும் ஆர்த்தி எனல் வேண்டிய உயர்வு சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. ஆர்த்தி-ஊட்டி. கலம்-கறக்குங் கலம். நிறை- நிறையுமாறு. தானே பிலிற்றும் என்பார் பொழியும் என்றார். வளம் பெற்றிருத்தற்கு ஆப்பயன் மிகுதல் அறிகுறி; அங்ஙனமே வற்கடத்தின் அறிகுறியாக, ஆசிரியர் திருவள்ளுவனார்,

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவான் எனின்       (540)

என்புழி ஆபயன் குன்றும் என்பதூஉ முணர்க.

பறவைபயன்றுய்த்து என்றது உண்டும் புணர்ந்தும் இன்பந்துய்த்து என்பதுபட நின்றது. விலங்குயிரும் மக்கள் உயிரும் பகைநீங்கும் என்க. நரகரும் பேயும் பிறப்புவகையால் துன்பமுறுவன. அவையும் அச் செயலை விடும் என்க. கை-செயல், பிறவுயிர்க்கு அஞர் செய்தலைக் கைவிடும் எனினுமாம்.

கூன் முதலிய பிறப்புக்கள் பயனில் பிறப்புக்கள். புத்தர் தோன்றிய பின்னர் உயிர் கூன்முதலிய உறுப்புக்குறை யுடையனவாகப் பிறவா என்றவாறு. இவற்றை,

சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்
கூனுங் குறளும் ஊமும் செவிடும்
மாவு மருளு முளப்பட வாழ்நர்க்(கு)
எண்பே ரெச்ச மென்றிவை எல்லாம்
பேதைமை யல்ல தூதிய மில்

எனவரும் புறநானூற்றுச் செய்யுளினும்(28) காண்க.

அருளறம்- பவுத்தசமயத்தின் சிறப்பறம். இனி மறவேன் மடக்கொடி என்னுந் தொடரை மறவேல் மடக்கொடி எனக் கண்ணழித்து அத்தகைய நாதன் பாதம் ஏத்துதலை மறவேல் என மணிமேகலைக்குச் செவியறிவுறுத்தனர் எனினுமாம்.

அறவணர் மாதவி சுதமதி என்னும் இருவர் திறமும் அறிவுறுத்து மணிமேகலைக்கு நல்லறம் சாற்றுதல்

103-115: மடக்கொடி................பெற்றனை

(இதன் பொருள்) மடக்கொடி மாதர் நின்னால் வருவன இவ்வூர் ஏது நிகழ்ச்சி பல உள-இளம் பூங்கொடி போலும் மணிமேகலையே! உன்னைத் தலைக்கீடாகக் கொண்டு இந் நகரத்தில் நிகழ்ச்சிக்கு வருவனவாகிய பழவினை நிகழ்ச்சிகள் பல உள, அவை யாவும் ஆங்கு நிகழ்ந்த பின்னர் அல்லது-அந் நிகழ்ச்சிகள் எல்லாம் அவ்வாறே நிகழ்ந்து முடிந்த பின்னர் அன்றி; பூங்கொடி மாதர்- பூங்கொடி போலும் நங்காய்!; பொருள் உரை பொருந்தா- மெய்ப் பொருள் அறிவுரை நினக்குப் பொருந்த மாட்டா, அவை நிற்க; ஈங்கு இவர் இருவரும் ஆதிமுதல்வன் அருந்துயர் கெடுக்கும் பாதபங்கய மலை பரசினர் ஆதலின்- நின்னோடிங்கு ஆடுங் கூத்தர்போல் வேற்றோர் உருவொடு வந்த இத் தாரையும் வீரையும் ஆகிய மாதவியும் சுதமதியும் கழிந்த பிறப்பில் ஆதி புத்தருடைய பாதபங்கயம் கிடந்த பாதபங்கய மலையை வலம் வந்து தொழுத நல்வினையை உடையராகலின், நின்னோடு ஓங்கு உயர் போதி உரவோன் திருந்து அடிதொழுது வலங் கொண்டு அங்ஙனமே முற்பிறப்பில் நல்வினைப் பேறுடைய நின்னோடு மிகவும் உயர்ந்த மெய்க் காட்சியாளனாகிய புத்த பெருமானுடைய அழகிய திருவடிகளைத் தொழுது வலஞ் செய்யுமாற்றால்; தொடர்வினை நீங்கிப் பழுது இல் நல்நெறிப் படர்குவர் காணாய்- பிறவிகடோறும் தொடர்ந்து வருகின்ற இருவகை வினையும் துவா நீங்கப் பெற்றுக் குற்றமற்ற நன்னெறியாகிய வீட்டு நெறியிலே செல்லா நிற்பர், இவர் திறம் இங்ஙனமாக மடக்கொடி; ஆருயிர் மருந்தாம் அமுதசுரபி எனும் மாபெரும் பாத்திரம் பெற்றனை மணிமேகலாய்! நீதானும் நினது ஆகூழ் காரணமாக ஆருயிர்க்கு மருந்தாகின்ற அமுதசுரபி என்னும் மிகவும் சிறப்புடைய தெய்வத் தன்மையுடைய பாத்திரத்தைப் பெற்றிருக்கின்றாய் அல்லையோ என்றார் என்க.

(விளக்கம்) மடக்கொடி மாதர்: விளி. இவ்வூர் என்றது-புகார் நகரத்தை. பொருள் உரை- மெய்ப்பொருள் அறிவுறுக்கும் செவியறிவுறூஉ. இருவரும்- மாதவியும் சுதமதியும். நின்னோடு என்றது இவர் போலவே நல்வினையாற்றிய நின்னோடு என்பதுபட நின்றது. தொடர் வினை- பிறப்புக்கடோறும் காரணகாரிய முறைப்படி தொடர்ந்து வரும் பழ வினைகள். பழுது இல் நன்னெறி என்றது வீட்டிற்குக் காரணமான துன்பம் துடைக்கும் நெறியாகிய நாலாவது வாய்மையை. மீட்சி நெறி எனினுமாம். அமுதசுரபிபெற்றனை ஆதலால் அதனாற் செய்யத்தகும் அறவினையை நீ மேற்கொள்ளுதி என்பார் மேலே செய்யத்தகும் நல்லறம் கூறுகின்றனர் என்க.

மக்கள் தேவர் என இரு சார்க்கும் ஒத்த மடிவின் ஓர் அறம்

116-121: மக்கள்...............தானென்

(இதன் பொருள்) மக்கள் தேவர் என இரு சார்க்கும் ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன்- நிலவுலகிற் பிறந்த மக்கட்டொகுதியும் வானுலகிற் பிறந்த தேவர் தொகுதியுமாகிய இருவகைத் தொகுதிக்கும் ஒத்ததான ஒரு முடிவையுடைய ஒப்பற்ற நல்லறம் ஒன்றனைக் கூறுவல் கேட்பாயாக!; பசிப்பிணி தீர்த்தல் என்றே அவரும் தவப்பெரும் நல் அறம் சாற்றினர்-அதுதான் யாதெனின் ஆற்றாமாக்கள் அரும்பசி களைதல் ஆகும் என்றே தீவதிலகை கூறினாற் போன்றே அவ்வறவணவடிகளாரும் அதனையே மிகப்பெரிய அறமாக அறிவுறுத்தனர்; ஆதலின்-ஆதலால்; மடுத்த தீக்கொளிய மன்னுயிர் பசி கெட- மூட்டிய தீயினாற் சுடப்படுகின்ற உயிர்கள் போன்று வருந்தும் உயிர்களின் பசித்துயர் தீரும்படி; இளங்கொடி பாத்திரம் எடுத்தனள் மணிமேகலை ஆருயிர் மருந்தாகிய அமுதசுரபி என்னும் மாபெரும் பாத்திரத்தைத் தன் அருள் கெழுமிய கையிலேந்துவாளாயினள்; என்பதாம்.

(விளக்கம்) உடம்பொடு வாழும் உயிர்கட்கெல்லாம் உணவு இன்றியமையாமையின் பசிதீர்க்கும் அறம் மக்கள் தேவர் இருமாரார்க்கும் பொதுவாயிற்று. மக்கள் தேவர்க்கு அவிசொரிந்து வேள்வியாற்றி அரும்பசிகளைகின்றனர். தேவர் மழைவளந்தந்து அரும்பசிகளைகின்றனர் என்க. இவ்வாற்றால் இவ்வறம் இருசார்க்கும் ஒத்தலறிக. இனிஇதனோடு,

சிறந்தாய்க் கீதுரைக்கலாம் சிந்தனையை முடிப்பதே
துறந்தார்க்குக் கடனாகிற் சோறலாற் பிற வேண்டா
இறந்தார்க்கு மெதிரார்க்கும் இவட்காலத் துள்ளார்வான்
பிறந்தார்க்கு மிதுவன்றிப் பிறிதொன்று சொல்லாயோ

எனவரும் நீலகேசிச் செய்யுள்(281) ஒப்பு நோக்கத்தகும்

அவரும் என்புழி உம்மை தீவதிலகையே அன்றி அவரும் என இறந்தது தழீஇ நின்ற எச்சவும்மை

இனி, இக்காதையை இளங்கொடி வினவிக்குறுகி மாதவன் அடியை வணங்கி ஏத்தி உரைத்தலும் கேட்டு அவரும் அறஞ்சாற்றினராதலின் இளங்கொடி எடுத்தனள் என இயைத்திடுக.

அறவணர்த் தொழுத காதை முற்றிற்று.

 
மேலும் மணிமேகலை »
temple news
தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் மணிமேகலை ஆகும். இந்நூல் பவுத்த மத சார்புடைய நீதிகளை எடுத்துச் ... மேலும்
 

1. விழாவறை காதை நவம்பர் 11,2011

முதலாவது விழாவறைந்த பாட்டு அஃதாவது: பூம்புகார் நகரத்து வாழ்கின்ற சமயக் கணக்கர் முதலிய பெரியோர் ... மேலும்
 
இரண்டாவது ஊரலருரைத்த பாட்டு அஃதாவது விழாவறைதல் கேட்ட மாந்தர் மாதவியை நினைந்து நாடகக் கணிகை துறத்தல் ... மேலும்
 
மூன்றாவது மலர்வனம் புக்கபாட்டு அஃதாவது-மாதவியும் வயந்த மாலையும் சொல்லாட்டம் நிகழ்த்தும் பொழுது ... மேலும்
 
நான்காவது மணிமேகலை உதயகுமரனைக் கண்டு பளிக்கறை புக்க பாட்டு அஃதாவது -உவவனத்தினுட் சுதமதியோடு மணிமேகலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar