Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

10. மந்திரங் கொடுத்த காதை 12. அறவணர்த் தொழுத காதை
முதல் பக்கம் » மணிமேகலை
11. பாத்திரம் பெற்ற காதை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2012
17:35

பதினொன்றாவது மணிமேகலைக்குத் தீவதிலகை கோமுகி என்னும் பொய்கையிலெழுந்த பாத்திரம் கொடுத்த பாட்டு

அஃதாவது-மணிமேகலா தெய்வம் மந்திரம் கொடுத்து மறைந்த பின்னர்த் தீவதிலகை என்னும் தெய்வம் மணிமேகலை முன்வந்து தோன்றி நீ யார் என்று வினவி அறிந்த பின்னர்த் தானே அம் மாமணிப் பீடிகையின் காவற்றெய்வம் எனத் தன்னையும் அறிவித்து, அங்குள்ள கோமுகி என்னும் கொழுநீரிலஞ்சியின் வைகாசித் திங்கட் பூரணை நாளில் ஆபுத்திரன் கை அமுத சுரபி நீரினின்றும் மேலெழுந்து ஆண்டுக் கொருமுறை தோன்றுவதாம் அந் நன்னாள் இந்த நாளே என்று சொல்லி அப் பாத்திரம் நினக்குக் கிடைக்கும் என, மணிமேகலை அத் தீவதிலகையொடு அப்பொய்கையை வலம் வந்து அதனைப் பெறும் கோட்பாட்டோடு நிற்ப அம் மணிமேகலையின் கையில் அப்பொய்கையிலெழுந்த அமுதசுரபி வந்துற்றது. இவ்வாற்றால் மணிமேகலை அமுதசுரபியைப் பெற்ற செய்தியைக் கூறுஞ் செய்யுள் என்றவாறு.

இனி இதன்கண் தீவதிலகை மணிமேகலை முன் தோன்றி நீ யார் என்று வினவிய பொழுது அவள் விடையிறுத்தலும் தன் வரலாறும் பயனும் விளம்புதலும், மணிமேகலை அன்னாய் நீ யார் என்று தீவதிலகையை வினவியபொழுது அவள்தன் வரலாறு கூறுதலும், கோமுகி என்னும் கொழுநீரிலஞ்சியினின்று ஆபுத்திரன் கை அமுத சுரபி மேலெழுந்து தோன்றும் நாள் இதுவே, அதன் சிறப்பெல்லாம் நின்னூரின்கண் அறவணனடிகளார் நினக்கு அறிவுறுத்துவர் என்றும் அப் பாத்திரம் இப்பொழுது நினக்குக் கிடைக்கும் என்று இயம்பி அப் பொய்கையை இருவரும் வலம் வந்து வணங்கி நிற்றலும் கையில் வந்துறுதலும் அது பெற்றபின்னர் மணிமேகலை மாத்திரையின்றி மனமகிழ் வெய்திய புத்தபெருமானை ஏத்துபவள் மாரனை வெல்லும் வீரநின்னடி எனத் தொடங்கி என்னாவிற் கடங்காது என்று முடிக்கும் வழிபாட்டுச் செய்யுட் பகுதியும், தீவதிலகை பசிப்பிணியின் கொடுமையை மணிமேகலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டோடு அறிவுறுத்துதலும், செய்ந்நெறி வாழ்கையின் இயல்பு கூறுதலும் அதுகேட்ட மணிமேகலை அமுதசுரபி கொண்டு நாவந்தீவிடத்தே சென்று பசிப்பிணியுற்றோர்க் கெல்லாம் உண்டி கொடுத்து அருளறம் ஓம்ப விதுப்புற்றுக் கூறும் கூற்றுக்களும் மணிமேகலை அமுத சுரபியோடு வான்வழியே இயங்கி வந்து தன் வரவு நோக்கி மயங்கும் மாதவி முன்னர் வந்து தோன்றி அவளும் சுதமதியும் வியக்குமாறு அற்புத மொழிவாயிலாய் அவர்தம் முற்பிறப்பு வரலாறு கூறுவதும் இவையெல்லாம் வியத்தகுமுறையில் கூறப்படுகின்றன.

மணிமேகலா தெய்வம் நீங்கிய பின்னர்
மணிபல்லவத்திடை மணிமேகலை தான்
வெண் மணல் குன்றமும் விரி பூஞ்சோலையும்
தண் மலர்ப்பொய்கையும் தாழ்ந்தனள் நோக்கிக்
காவதம் திரிய கடவுள் கோலத்துத்
தீவதிலகை செவ்வனம் தோன்றிக்
கலம் கவிழ் மகளிரின் வந்து ஈங்கு எய்திய
இலங்கு தொடி நல்லாய்! யார் நீ? என்றலும்
எப் பிறப்பு அகத்துள் யார் நீ என்றது
பொன் கொடி அன்னாய்! பொருந்திக் கேளாய்!  11-010

போய பிறவியில் பூமி அம் கிழவன்
இராகுலன் மனை யான் இலக்குமி என் பேர்
ஆய பிறவியில் ஆடல் அம் கணிகை
மாதவி ஈன்ற மணிமேகலை யான்
என் பெயர்த் தெய்வம் ஈங்கு எனைக் கொணர இம்
மன் பெரும் பீடிகை என் பிறப்பு உணர்ந்தேன்
ஈங்கு என் வரவு இது ஈங்கு எய்திய பயன் இது
பூங் கொடி அன்னாய் யார் நீ? என்றலும்
ஆய் இழை தன் பிறப்பு அறிந்தமை அறிந்த
தீவதிலகை செவ்வனம் உரைக்கும்  11-020

ஈங்கு இதன் அயல் அகத்து இரத்தினத் தீவத்து
ஓங்கு உயர் சமந்தத்து உச்சி மீமிசை
அறவியங் கிழவோன் அடி இணை ஆகிய
பிறவி என்னும் பெருங் கடல் விடூஉம்
அறவி நாவாய் ஆங்கு உளது ஆதலின்
தொழுது வலம் கொண்டு வந்தேன் ஈங்கு
பழுது இல் காட்சி இந் நல் மணிப் பீடிகை
தேவர் கோன் ஏவலின் காவல் பூண்டேன்
தீவதிலகை என் பெயர் இது கேள்
தரும தலைவன் தலைமையின் உரைத்த  11-030

பெருமைசால் நல் அறம் பிறழா நோன்பினர்
கண்டு கைதொழுவோர் கண்டதன் பின்னர்
பண்டைப் பிறவியர் ஆகுவர் பைந்தொடி
அரியர் உலகத்து ஆங்கு அவர்க்கு அறமொழி
உரியது உலகத்து ஒருதலையாக
ஆங்கனம் ஆகிய அணி இழை! இது கேள்
ஈங்கு இப் பெரும் பெயர்ப் பீடிகை முன்னது
மா மலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சி
இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து  11-040

ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்ற பின்
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்
போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்
ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும்
மா பெரும் பாத்திரம் மடக்கொடி! கேளாய்
அந் நாள் இந் நாள் அப் பொழுது இப் பொழுது
நின்னாங்கு வருவது போலும் நேர் இழை!
ஆங்கு அதில் பெய்த ஆருயிர்மருந்து
வாங்குநர் கைஅகம் வருத்துதல் அல்லது
தான் தொலைவு இல்லாத் தகைமையது ஆகும்  11-050

நறு மலர்க் கோதை! நின் ஊர் ஆங்கண்
அறவணன் தன்பால் கேட்குவை இதன் திறம்
என்று அவள் உரைத்தலும் இளங்கொடி விரும்பி
மன் பெரும் பீடிகை தொழுதனள் வணங்கி
தீவதிலகை தன்னொடும் கூடி
கோமுகி வலம் செய்து கொள்கையின் நிற்றலும்
எழுந்து வலம் புரிந்த இளங்கொடி செங் கையில்
தொழும்தகை மரபின் பாத்திரம் புகுதலும்
பாத்திரம் பெற்ற பைந் தொடி மடவாள்
மாத்திரை இன்றி மனம் மகிழ்வு எய்தி  11-060

மாரனை வெல்லும் வீர! நின் அடி
தீ நெறிக் கடும் பகை கடிந்தோய்! நின் அடி
பிறர்க்கு அறம் முயலும் பெரியோய்! நின் அடி
துறக்கம் வேண்டாத் தொல்லோய்! நின் அடி
எண் பிறக்கு ஒழிய இறந்தோய்! நின் அடி
கண் பிறர்க்கு அளிக்கும் கண்ணோய்! நின் அடி
தீ மொழிக்கு அடைத்த செவியோய்! நின் அடி
வாய்மொழி சிறந்த நாவோய்! நின் அடி
நரகர் துயர் கெட நடப்போய்! நின் அடி
உரகர் துயரம் ஒழிப்போய்! நின் அடி  11-070

வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவிற்கு
அடங்காது! என்ற ஆய் இழை முன்னர்
போதி நீழல் பொருந்தித் தோன்றும்
நாதன் பாதம் நவை கெட ஏத்தித்
தீவதிலகை சேயிழைக்கு உரைக்கும்
குடிப் பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும் புணை விடூஉம்
நாண் அணி களையும் மாண் எழில் சிதைக்கும்
பூண் முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப் பிணி என்னும் பாவி அது தீர்த்தோர்  11-080

இசைச் சொல் அளவைக்கு என் நா நிமிராது
புல் மரம் புகையப் புகை அழல் பொங்கி
மன் உயிர் மடிய மழைவளம் கரத்தலின்
அரசு தலைநீங்கிய அரு மறை அந்தணன்
இரு நில மருங்கின் யாங்கணும் திரிவோன்
அரும் பசி களைய ஆற்றுவது காணான்
திருந்தா நாய் ஊன் தின்னுதல் உறுவோன்
இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர்
வந்து தோன்றிய வானவர் பெருந்தகை
மழை வளம் தருதலின் மன் உயிர் ஓங்கி  11-090

பிழையா விளையுளும் பெருகியது அன்றோ?
ஆற்றுநர்க்கு அளிப்போர் அறம் விலைபகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உயிர்க் கொடை பூண்ட உரவோய் ஆகி
கயக்கு அறு நல் அறம் கண்டனை என்றலும்
விட்ட பிறப்பில் யான் விரும்பிய காதலன்
திட்டிவிடம் உணச் செல் உயிர் போவுழி  11-100

உயிரொடு வேவேன் உணர்வு ஒழி காலத்து
வெயில் விளங்கு அமயத்து விளங்கித் தோன்றிய
சாதுசக்கரன் தனை யான் ஊட்டிய
காலம் போல்வதோர் கனா மயக்கு உற்றேன்
ஆங்கு அதன் பயனே ஆர் உயிர் மருந்து ஆய்
ஈங்கு இப் பாத்திரம் என் கைப் புகுந்தது
நாவலொடு பெயரிய மா பெருந் தீவத்து
வித்தி நல் அறம் விளைந்த அதன் பயன்
துய்ப்போர் தம் மனை துணிச் சிதர் உடுத்து
வயிறு காய் பெரும் பசி அலைத்தற்கு இரங்கி  11-110

வெயில் என முனியாது புயல் என மடியாது
புறங்கடை நின்று புன்கண் கூர்ந்து முன்
அறங்கடை நில்லாது அயர்வோர் பலரால்
ஈன்ற குழவி முகம் கண்டு இரங்கி
தீம் பால் சுரப்போள் தன் முலை போன்றே
நெஞ்சு வழிப்படூஉம் விஞ்சைப் பாத்திரத்து
அகன் சுரைப் பெய்த ஆருயிர்மருந்து அவர்
முகம் கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன் என
மறந்தேன் அதன் திறம் நீ எடுத்து உரைத்தனை
அறம் கரியாக அருள் சுரந்து ஊட்டும்  11-120

சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது
ஆங்கனம் ஆயினை அதன் பயன் அறிந்தனை
ஈங்கு நின்று எழுவாய் என்று அவள் உரைப்பத்
தீவதிலகை தன் அடி வணங்கி
மா பெரும் பாத்திரம் மலர்க் கையின் ஏந்திக்
கோமகன் பீடிகை தொழுது வலம் கொண்டு
வானூடு எழுந்து மணிமேகலை தான்
வழு அறு தெய்வம் வாய்மையின் உரைத்த
எழு நாள் வந்தது என் மகள் வாராள்!
வழுவாய் உண்டு! என மயங்குவோள் முன்னர்  11-130

வந்து தோன்றி அவர் மயக்கம் களைந்து
அந்தில் அவர்க்கு ஓர் அற்புதம் கூறும்
இரவிவன்மன் ஒரு பெரு மகளே!
துரகத் தானைத் துச்சயன் தேவி!
அமுதபதி வயிற்று அரிதின் தோன்றி
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும்
அவ்வையர் ஆயினீர் நும் அடி தொழுதேன்
வாய்வதாக மானிட யாக்கையில்
தீவினை அறுக்கும் செய் தவம் நுமக்கு ஈங்கு
அறவண அடிகள் தம்பால் பெறுமின்  11-140

செறி தொடி நல்லீர்! உம் பிறப்பு ஈங்கு இஃது
ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும்
மா பெரும் பாத்திரம் நீயிரும் தொழும்! என
தொழுதனர் ஏத்திய தூமொழியாரொடும்
பழுது அறு மாதவன் பாதம் படர்கேம்
எழுக என எழுந்தனள் இளங்கொடி தான் என்  11-146

உரை

மணிமேகலையின் முன்னர்த் தீவதிலகை என்னும் காவற் றெய்வம் வந்து தோன்றி நீ யார்? என வினாதல்

1-8: மணிமே...........என்றலும்

(இதன் பொருள்) மணிமேகலா தெய்வம் நீங்கிய பின்னர்- மணிமேகலா தெய்வம் மீண்டும் வந்து மந்திரம் கொடுத்து வானத்திலேறி மறைந்து போன பின்பு; மணிமேகலை தான் மணிபல்லவத்திடை வெண் மணல் குன்றமும் விரிபூஞ் சோலையும் தண் மலர்ப் பொய்கையும் பல்லவத் தீவின்கண்ணுள்ள வெள்ளிய மணற்குன்றுகளினும் மலர்ந்த பூம்பொழில்களிடத்தும் குளிர்ந்த நீர்ப் பூக்கள் மலர்ந்துள்ள இயற்கை நீர்நிலை மருங்குகளினும் சென்று சென்று கவலை சிறிதுமின்றி ஆங்காங்கு நெடும்பொழுது தங்கியிருந்து அவற்றின் அழகைக் கூர்ந்து நோக்கி மகிழ்ந்து; காவதம் திரிய-ஒரு காததூரம் சுற்றித் திரியா நிற்ப; தீவதிலகை கடவுள் கோலத்துச் செவ்வனம் தோன்றி-அம் மணிமேகலை முன்னர் அத் தீவத்துக் காவற்றெய்வமாகிய தீவதிலகை என்பாள் தனக்கியன்ற கடவுள் உருவத்தோடு நன்கு எய்திய இலங்கு தொடி நல்லாய் நீ யார் என்றலும்-மரக்கலம் கவிழாநிற்ப அதனினின்றும் உய்ந்து கரையேறினாள் ஒரு மகள் போன்று மக்கள் வழக்கற்ற இத் தீவினிடையே வந்து இவ்விடத்தை அடைந்த நங்கையே நீ யார்? கூறுதி என்று அத் தெய்வம் வினவாநிற்ப என்க.

(விளக்கம்) மணிமேகலை புத்தபீடிகையைத் தொழுது பழம் பிறப்புணர்ச்சி கைவந்தமையானும் மாபெருந்தெய்வமாகிய மணிமேகலா தெய்வம் தன்னைக் காப்பதனைக் குறிக்கோளாகக் கொண்டிருப்பது அதன் செயலாலும் சொல்லாலும் அறிந்துகொண்டமையானும் அத் தெய்வம் உணர்த்திய செய்திகளானும் இப்பொழுது சிறிதுந் துன்பமற்றவளாயினள் என்னுமிச் செய்தியை அவள் குன்றமும் பொழிலும் பிறவுமாகிய இடந்தோறும் இடந்தோறும் சென்று சென்று ஆண்டாண்டு நின்று நின்று அத் தீவின் அழகை நுகருமாற்றால் இப் புலவர் பெருமான் இனிது நம்மனோர்க்குக் குறிப்பாக அறிவுறுத்தும் நுணுக்கம் உணர்க. தீவதிலகை தெய்வவுருவத்தோடு எதிர் தோன்றி நீ யார் என்று வினவியதற்கும் மேல் அவள் வினவெதிர் வினாவாக விடை இறுக்கும் சொற்றிறத்தானும் அவள் இப்பொழுது எய்தியிருக்கின்ற புதிய நிலைபுலப்படும்.

தாழ்ந்தனள்- தங்கி நின்று நோக்கி என்றமையால் அவற்றின் அழகையே அவள் நோக்கினாள் என்பது பெற்றாம். ஆராமையாலே அங்கங்கே நின்று நின்று நோக்கினள் என்பார் தாழ்ந்தனள் நோக்கி என்றார். இவ்வழகுக்காட்சியி லீடுபட்டு அவள் சுற்றிய தூரம் ஒரு காவதம் இருக்கும் என்பார் காவதந்திரிய என்றார்.

தீவதிலகை அம்மணிபல்லவத்துக் காவற்றெய்வம். கலம் கவிழ்ந்த காலை அதனினின்றும் உய்ந்து கரையேறிய மகள் போல என்றது அத் தகையோரையன்றி மாந்தர் வருதலில்லாத தீவிற் றமியளாய்க் காணப் படுதற்கு உவமை எடுத்தோதினள். அவள் நிலைமை அங்ஙனமில்லாமையால் உவமை யாகவே கூறினள்.

மணிமேகலை தீவதிலகைக்கு மறுமொழி கூறுதல்

9-18: எப்பிறப்பு...........என்றலும்

(இதன் பொருள்) பொன் கொடி அன்னாய்-அது கேட்ட மணிமேகலை தீவதிலகையைச் செவ்வனம் நோக்கிக் காமவல்லி போன்ற கவினொடு தோன்றிய அன்னையே நீ; யார் நீ என்றது எப்பிறப்பு அகத்துள்- நீ என்னை யார் என்று அறிந்து கொள்ள விரும்பி வினவியது என்னுடைய பிறப்புக்களுள் வைத்து எந்தப் பிறப்பைச் சுட்டி வினவப்பட்டதோ! யானறிகிலேன் ஆதலின் யான் அறிந்துள எனது முற்பிறப்பினும் இப்பிறப்பினும் என்னை இன்னள் இன்னள் என்று தனித்தினியே விளம்புவல்; பொருந்திக் கேளாய்-நீ தானும் மனமியைந்து கேட்டருள்வாயாக! யான் போய் பிறப்பில் பூமியங்கிழவன் இராகுலன் மனைவி என்பேர் இலக்குமி-யான் எனது முற்பிறப்பிலே நிலத்தை ஆளும் உரிமையுடைய இராகுலன் என்னும் அரசிளங் குமரனுடைய மனைவியாயிருந்தேன், அப் பிறப்பில் இலக்குமி என்பதே என் பெயராகும்; ஆய பிறவியில்-மாறிப்பிறந்ததாகிய இப் பிறப்பிலோ; யான் ஆடல் அம் கணிகை மாதவி ஈன்ற மணிமேகலை- யான் நாடகக் கணிகையாகிய மாதவி என்பவள் ஈன்ற மகளாகிய மணிமேகலை என்னும் பெயருடையேன் காண்! என் பெயர்த் தெய்வம் ஈங்கு எனைக் கொணர இம் மன் பெரும் பீடிகை என் பிறப்பு உணர்ந்தேன்-என் பெயரையுடையதாகிய மணிமேகலா தெய்வம் பூம்புகார் நகரத்திலிருந்து இம் மணிபல்லவத்தீவிற்கு எடுத்து வர யான் ஈண்டு நிலைபெற்றுள்ள பெருமை மிக்க மாமணிப் பீடிகையினாலே என் முற்பிறப்பினை உணர்ந்துள்ளேன் காண்!; இது ஈங்க என்வரவு இது ஈங்கு எய்திய பயன்-இதுவே இங்கே என்னுடைய வரவிற்குக் காரணம் இதுவே யான் இங்கு வந்தமையால் எய்திய பயனுமாம்; பூங்கொடி அன்னாய் நீ யார்? என்றறிய விரும்புகின்றேன் அறிவித்திடுவையோ? என்று வினவாநிற்ப என்க.

(விளக்கம்) யான் என் இரண்டு பிறப்புக்களை அறிந்துள்ளேன் அவற்றுள் எப் பிறப்பினை நீ வினவினை என்றவாறு. இரண்டையும் அறிவிப்பேன் கேள் என்கின்றனள். போய பிறவி-முற்பிறப்பு. ஆய-பிறவி-அது போய பின் ஆய பிறப்பு. அஃதாவது-இப் பிறப்பு ஆடலங்கணிகை- நாடகக்கணிகை. கணிகையர் பலதிறப்படுவர்; அவருள் மாதவி அகக் கூத்தாடும் கணிகை எனற்கு ஆடலங்கணிகை என்றாள். என் பெயர்த் தெய்வம் என்றது மணிமேகலா தெய்வத்தை. அத் தெய்வம் கொணருதலால் வந்தேன் பீடிகையைக் கண்டமையாலே பிறப்புணர்ந்தேன் என இரண்டற்கும் காரணம் தெரிந்தோதினள் மீண்டும் அத் தெய்வம் வினவாமைப் பொருட்டென்க. மணிமேகலையின் இம் மொழிகளில் கல்வி நிலைக்களனாகவும் செல்வம் நிலைக்களனாகவும் பிறந்த பெருமிதச் சுவை தோன்றுதலுணர்க.

தீவதிலகை மணிமேகலைக்குக் தன்னை அறிவித்தல்

1929: ஆயிழை........என் பெயர்

(இதன் பொருள்) ஆயிழை தன் பிறப்பு அறிந்தமை அறிந்த தீவதிலகை செவ்வனம் உரைக்கும்-மணிமேகலையையும் அவள் பீடிகை கண்டு பிறப்புணர்ந்தமையையும் அறிந்து கொண்ட தீவதிலகை அவளை நன்கு மதித்தவளாய் அவள் வினாவிற்கு விளக்கமாக விடை கூறுவாள்; ஈங்கு இதன் அயலகத்து இரத்தின தீவத்து ஓங்கு உயர் சமந்தத்து உச்சி மீமிசை- நங்காய்! இந்த மணிபல்லவத்தின் அணித்தாக இரத்தின தீவம் என்றொரு தீவுளது காண்! அதன்கணுள்ள மிகவும் உயர்ந்த சமந்தம் என்னும் மலையுச்சியின் மேலே; அறவியங் கிழவோன் அடியிணை ஆகிய-அருளறத்தை உரிமையாகவுடைய புத்த பெருமானுடைய திருவடியிணையின் சுவடாகிய; பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம் அறவி நாவாய் ஆங்கு உளது ஆதலின்-பிறவி என்கின்ற பெரிய துயர்க்கடலினின்றும் உயிர்களைக் கரை யேற்றி விடுகின்ற அறத்தன்மையுடைய மரக்கலம் ஆங்கோரிடத்தே உளதாகலின்; தொழுது துயர்க்கடலினின்றும் உயிர்களைக் கரை யேற்றி விடுகின்ற அறத்தன்மையுடைய மரக்கலம் ஆங்கோரிடத்தே உளதாகலின்; தொழுது வலங் கொண்டு வந்தேன்-அங்குச் சென்று அதனைக் கைதொழுது வலமுறைவந்து வணங்கி மீண்டு வந்தேன் காண்! பழுதுஇல் காட்சி இந்நல் மணிப்பீடிகை தேவர்கோன் ஏவலின் காவல் பூண்டோன்-குற்றமற்ற மெய்க்காட்சியை நல்கும் தெய்வத் தன்மையுடைய இந்த  அழகிய மணியாலியன்ற பீடிகையை இவ்விடத்தே இட்ட தேவேந்திர னுடைய பணி தலைமேற்கொண்டு காவற்றொழில் பூண்டுள்ளேன்; என் பெயர் தீவதிலகை-என்னடைய பெயர் தீவதிலகை என்பதாம் சொல்லி என்க.

(விளக்கம்) புத்த பீடிகையைக் கண்டுழியும் அருளறம் பூண்ட அறவோர்க்கன்றிப் பழம் பிறப்புணர்ச்சி உண்டாதலில்லை என்பது கீழ்நிலமருங்கில் நாக நாடாளும் இருவர் மன்னவர் ஒரு வழித் தோன்றி அதனைக் கண்டுழியும் அவ்விருவர்க்கும் பழம் பிறப்புணர்ச்சி உண்டோ காமையாலறியப்பட்டது(எட்டாங்காதை) எனவே, ஈண்டுத் தீவதிலகை மணிமேகலை இறுத்த விடையினால் இவள் மனப்பாட்டறம் என்னும் அருளற நெறியிற் பிறப்புக்கடோறும் அடிப்பட்டு வந்த நன்னர் நெஞ்சமுடையாள் என்று அவளைப் பெரிதும் மதித்து அவள்பால் சொல்லாட்டம் நிகழ்த்துகின்றாள் என்று உணர்த்தற்கு ஆயிழை தன் பிறப்பறிந்தமையறிந்த தீவதிலகை என வேண்டாதன விதந்து கூறி வேண்டியது முடித்தனர்.

இரத்தினதீவம் இலங்காதீவத்தில் ஒரு பகுதி என்றும், அஃது இக் காலத்தில் இரத்தினபுரி என்று வழங்கப்படுகின்றது என்றும், அதில் சமனொளி என்னும் பெயருடைய மலையும் அதன்கண் புத்தர் திருப்பதியும் உளதென்றும் அம் மலையைச் சிலர் சமந்தகூடம் என்றும் சிலர் சமனெலை யென்றும் வழங்குகின்றனர் என்றும், இந் நூலாசிரியரும் பின்னர் 28 ஆங் காதையில்(107-109) இதனை,

இலங்கா தீவத்துச் சமனொளி யென்னும்
சிலம்பினை யெய்தி வலங்கொண்டு மீளும்
தரும சாரணர்

எனறோதுதலானும் அம் மலையே ஈண்டுத் தீவதிலகையால் கூறப்படுவது என்றும் அறிஞர் கூறுகின்றனர்(இம் மலை இப்பொழுது ஆடம்ஸ் பீக் என்று ஆங்கிலத்திற் கூறப்படுகிற தென்றும்  கூறுவர்)

சமந்தம்-சமந்தம் என்னும் மலை. அறவி-அறத்தின் திருமூர்த்தி. கிழவன்-தலைவன்; புத்தன் என்க. பிறவியைக் கடல் என்றமையின் அடியிணையை நாவாய் என்றார். வந்தேன் என்றது ஈண்டிருந்து சென்று மீண்டு வந்தேன் என்றவாறு. தேவர்கோமானே இம் மாமணிப்பீடிகையை ஈங்கிட்டனன்; மேலும் அதற்குக் காவலாக என்னையும் ஈங்குறையப் பணித்தான் என்பது கருத்து.

தீவதிலகை மணிமேகலையைப் பாராட்டுதல்

29-36: இதுகேள்..............அணிஇழை

(இதன் பொருள்) இது கேள்-நங்கையே இப் பீடிகையின் மாண்பு கூறுவல் இதனையும் கேட்பாயாக! கண்டு கைதொழுவோர் தரும தலைவன் தலைமையின் உரைத்த பெருமைசால் நல் அறம் பிறழா நோன்பினர்-இப் பீடிகையைக் கண்ட துணையானே இறையன்பாலே நெஞ்சம் நெகிழப்பட்டுக் கைகூப்பி வணங்கும் இயல்புடையோர் யாவரேனும் அவர் பண்டும் பண்டும் பலப்பல பிறப்புகளினும் அறவியங்கிழவோனாகிய புத்தபெருமான் இயல்பாகவே ஓதாதுணர்ந்த தமது தலைமைத் தன்மை காரணமாக உலகிற்குத் திருவாய் மலர்ந்தருளிய பெருமை அமைந்த நல்லறமாகிய அருளற நெறியிற் சிறிதும் பிறழாது அடிப்பட் டொழுகிவந்த தாளாளர் என்பதில் ஐயமில்லை; கண்டதன் பின்னர் நண்டைய பிறவியர் ஆகுவர்-அத்தகைய கருவிலே திருவுடையர் கண்ட தன் பின்னர் அவருடைய பழம் பிறப்புணர்ச்சி முழுவதும் கைவரப் பெறுவர்காண்; பைந்தொடி உலகத்து அரியர்- நங்காய் அத்தகைய நல்லறம் பிறழா நோன்பினர் இந் நிலவுலகத்தே காண்டற்கரியராவார்காண்!; ஆங்கு அவர்க்கு அறமொழி உரியது அவ்வாறு கண்டு கைதொழும் திருவுடையார்க்கு அவ்வறவாழி அந்தணன் அறிவுறுத்த திருவற மொழி முழுவதும் உரியதாகுங்காண்!; உலகத்து ஒருதலையாக ஆங்ஙனம் ஆகிய அணியிழை-இந் நிலவுலகத்து அவ்வாறு அவ்வறம் பலப்பல பிறப்பில் அடிப்பட்டுவந்து அதன் பயனையும் ஒருதலையாகப் பெற்றுயர்ந்த தவச் செல்வி நீ என்பது அறிந்தேன் என்றாள் என்க.

(விளக்கம்) தருமதலைவன்-புத்தன். தலைமை- நல்லாசிரியனாதற்கு இன்றியமையாத முற்றுணர்வுடைமை புத்த பெருமானுக்கு அத்தகு தலைமைத் தன்மை யுண்மையை,

பூமகனே முதலாகப் புகுந்தமரர் எண்டிசையும்
தூமலரா லடிமலரைத் தொழுதிரந்து வினவியநாள்
காமமும் கடுஞ்சினமுங் கழிப்பரிய மயக்கமுமாய்த்
தீமைசால் கட்டினுக்குத் திறற்கருவி யாய்க்கிடந்த
நாமஞ்சால் நமர்களுக்கு நயப்படுமா றினிதுரைத்துச்
சேமஞ்சார் நன்னெறிக்குச் செல்லுமா றருளினையே

எனவும்,

எண்ணிறந்த குணத்தோய்நீ யாவர்க்கு மரியோய்நீ
உண்ணிறைந்த வருளோய்நீ யுயர்பாரம் நிறைந்தோய் நீ
மெய்ப்பொருளே யறிந்தோய்நீ மெய்யறமிங் களித்தோய்நீ
செப்பரிய தவத்தோய்நீ சேர்வார்க்குச் சார்வு நீ

எனவும்,

நன்மைநீ தின்மைநீ நனவுநீ கனவுநீ
வன்மைநீ மென்மைநீ மதியுநீ விதியுநீ
இம்மைநீ மறுமைநீ இரவுநீ பகலுநீ
செம்மைநீ கருமைநீ சேர்வுநீ சார்வுநீ

எனவும்,

அருளாழி பயந்தோய்நீ அறவாழி நயந்தோய்நீ
மருளாழி துரந்தோய்நீ மறையாழி புரிந்தோய்நீ

எனவும்,

மாதவரின் மாதவனீ வானவருள் வானவனீ
போதன ருட் போதனனீ புண்ணியருட் புண்ணியனீ

எனவும்,

ஆதிநீ யமலனீ அயனுநீ அரியுநீ
சோதிநீ நாதனீ துறைவனீ இறைவனீ

எனவும்,

அருளுநீ பொருளுநீ அறவனீ அநகனீ
தெருளுநீ திருவுநீ செறிவுநீ செம்மனீ

எனவும், பாராட்டி வருகின்ற பழைய செந்தமிழ்த் தீம்பாடலானு முணர்க.(இவ்வருமைப் பாடல் வீரசோழியம் 11ஆம் கலித்துறையின் உரையிற் கண்டது)

கண்டுகை கொழுவோர் பிறழா நோன்பினர் என மாறுக. நீயும் முற்றவமுடைய பொற்றொடியே என்பாள் ஆங்ஙனம் ஆகிய அணியிழை என்று பாராட்டினள் ஈண்டு

தவமுந் தவமுடையார்க் காகும்

எனவரும் திருவள்ளுவர் பொன்மோழி நினைக.

தீவதிலகை அமுத சுரபி என்னும் அரும்பெறற்
பாத்திரமும் ஈண்டு நினக்குக் கிடைக்கும் எனல்

36-47: இதுகேள்............போலும்

(இதன் பொருள்) இதுகேள்- மணிமேகலாய் நினக்கு ஆக்கமாகிய இன்னொரு செய்தியாகிய இதனையும் கேட்பாயாக; ஈங்கு இப்பெரும் பெயர்ப் பீடிகை முன்னது-இவ் விடத்துள்ள இம் மாபெரும் புகழை யுடைய இம் மாமணிப் பீடிகையின் முன் பக்கத்திலே யுளதாகிய; மாமலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சி- கரிய நிறமுடைய மலராகிய குவளையும் நெய்தலும் விரவிமலர்ந்த இந்தக் கோமுகி என்னும் பெயருடைய நிரம்பிய நீரையுடைய நீர்நிலையினின்றும்; இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து ஒருபதின் மேலும் ஒரு மூன்று சென்றபின்- பெரும் பொழுதுகளில் வைத்து இந்த இளவேனிற் பொழுதின்கண் கார்த்திகை முதலிய பதின் மூன்று நாள்களும் கழிந்த பின்னர்; மீனத்து இடைநிலை மீனத்து அகவயின்- நாள் மீனகளுள் நடுவு நிற்றலையுடைய விசாகநாளின் கண்; ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும் மாபெரும் பாத்திரம் ஆபுத்திரன் என்னும் அறவோன் கையின்கண்ணிருந்த அமுதசுரபி என்னும் மிகவும் பெருமையுடைய பிச்சைப்பாத்திரம்; போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்- தோன்று நாளாலே புத்தபெருமான் போன்று மேலே எழுந்து வந்து தோன்றுங் காண்; மடக் கொடி-இளைமையுடைய பூங் கொடியேபோல் வாளே!; கேளாய்-கேட்பாயாக; அந்நாள் இந்நாள் அப்பொழுது இப்பொழுது-அந்த வைகாசித் திங்கள் தூய நிறைத் திங்கள் நாளே இற்றை நாள் அம் மாபெரும் பாத்திரம் நீரினின்றும் மேலெழுந்து தோன்றும் முழுத்தமும் இம் முழுத்தமேயாம் ஆகவே; நின்னாங்கு வருவது போலும்-அம் மாபெரும் பாத்திரம் நின்பால் வந்தெய்துங்காண்! என்றாள் என்க.

(விளக்கம்) பெரும் பெயர்- பெரிய புகழ். இலஞ்சி- நீர் நிலை இருது- பெரும்பொழுது. இளவேனில் சித்திரைத் திங்களும் வைகாசித் திங்களும் ஆகிய இரண்டு திங்களுமாம். இவற்றுள் வைகாசித் திங்களில் என்பாள், எரிகதிர் இடபத்து என்றாள். எரிகதிர்-ஞாயிறு. இனி, இக்கால வழக்கில் நாள்மீன்களுள் நடுவண்நிற்பது சித்திரை மீனாக, ஈண்டு விசாக மீனை மீனத்து நடுநிலை மீன் என்பதற்கு அறிஞர் காட்டும் அமைதி வருமாறு:

ஒவ்வோராண்டினும் பகலையும் இரவையும் தம்முட் சமமாக முப்பது முப்பது நாழிகையாகவே பெற்ற விழுவநாள்களில் ஒன்றாகிய சித்திரை விழுவில் எந்த நாளில் ஞாயிற்றிற்குப் புகுதி யுண்டாகின்றதோ, அந் நாள் மீனை முதலாக வைத்துக் கூறுதல் கணிக நூல் வழக்காதலின் பண்டொரு காலத்தே ஞாயிற்றுக்குச் சித்திரை விழுவ நாள் கார்த்திகை நாளாதல் கண்டு கார்த்திகை மீனையே முதன் மீனாக வைத்து வழங்குவாராயினர்; பின்னர் வராக மிகிரர் என்னும் பெருங் கணவர் தமது காலத்தே சித்திரை விழுவம் அச்சுவினியில் ஞாயிற்றின் புகுதியுண்டா யிருத்தலை அறிந்து அச்சுவினியை முதன் மீனாக வைத்தெண்ணும் வழக்கத்தை யுண்டாக்கினர்; ஆதலால் அவ் வராகமிகிரர் காலத்திற்கு முன்பிருந்த வழக்கத்தால் கார்த்திகையை முதன் மீனாகக் கொண்டு ஈண்டு விசாகம் நடுநிலை மீன் எனப்பட்டது என்ப.

ஒரு பதின் மேலும் மூன்று -பதின் மூன்று. இஃது எண்ணால் நாள்களுக்குப் பெயராயிற்று. கார்த்திகை முதலாகப் பதின்மூன்று நாள் மீன்களும் கழிந்தபின் வரும் மீனாகிய விசாகம் எனவும். இருபத்தேழு மீன்களுள் நடுவுநிலை மீனாகிய விசாகம் எனவும் தனித்தனி இயைத்திடுக.

போதித்தலைவன்-புத்தர் அவரோடு தோற்றத்தால் பொருந்தித் தோன்றும் என்க. அஃதாவது- போதித்தலைவன் போல விசாக நாளாகவையின் தோன்றும் என்றவாறு. எனவே அப் பாத்திரம் அந்த நாளில் தோன்றுதற்குரிய காரணமும் உடன் தெரித்தோதியபடியாம். அந் நன்னாளில் பிறந்த புத்தன் உலகினர் எல்லார்க்கும் நல்லறம் வழங்கினாற் போன்று இப் பாத்திரமும் உலகினர்க் கெல்லாம் உண்டிகொடுத்து அருளறம் புரிவோர்பாற் சேறற் பொருட்டு அவ்வறவோன் பிறந்த நாளிலே ஆண்டுதோறும்- தோன்றும். அதனை ஏற்றற்குத் தகுதியுடைய அறவோரைப் பெறாமையாலே மீண்டும் நீரினுள் மூழ்கி விடும். இப் பொழுது எவ்வாற்றானும் அத் தகுதியுடைய நீ இந்த நாளில் இப் பொழுது இவ்விடத்திலே வந்தெய்தினை ஆதலின் அப் பாத்திரம் நின் பால் வந்தெய்தும் என்று தெய்வமாகலின் எதிரதுணர்ந்து கூறிற்றென்க. போலும்:ஒப்பில் போலி.

தீவதிலகையோடு மணிமேகலை கோமுகியை வலம் வந்து நிற்றலும் அமுதசுரபி அவள் கையில் வந்துறுதலும்

47-58: நேரிழை...........புகுதலும்

(இதன் பொருள்) நேரிழை- மணிமேகலயாய்! அமுதசுரபி என்னும் அம் மா பெரும் பாத்திரத்தின் சிறப்பினை யான் சிறிது கூறுவல் கேள்; ஆங்கு அதிற் பெய்த ஆருயிர் மருந்து வாங்கு நர் கையகம் வருத்துதல் அல்லது-அவ்வமுத சுரபி என்னும் பாத்திரத்திலே இட்ட ஆருயிரின் பசிப்பிணிதீர்க்கும் மருந்தாகிய உணவு பின்னர் ஏற்போருடைய கையைத் தனது பொறையாலே வருத்துவதன்றி; தான் தொலைவு இல்லாத் தகைமையது ஆகும்- இடப்பட்ட அவ்வுணவு ஒருபொழுதும் ஒழிதலின்றி மேன் மேலும் வளருகின்றதொரு தெய்வத்தன்மை யுடைய தாங்காண்! நறுமலர் கோதை- நறிய மலர்மாலை போன்று யாவராலும் விரும்பப்படுகின்ற நங்கையே!; இதன் திறம்-அதன் சிறப்பும் வரலாறும் பிறவு மெல்லாம்; நின் ஊர் ஆங்கண் அறவணன் தன் பால் கேட்குவை என்று- நீ நின் ஊரிற் சென்றவிடத்தே அறவணவடிகளார்பால் கேட்டறிகுவை காண்! ஈண்டு அது கூறப் பொழுது இல்லை என்று; அவள் உரைத்தலும்-அத் தீவதிலகை அறிவித்தலும்; இளங்கொடி விரும்பி- மணிமேகலைதானும் அப் பெறற்கரும் பேற்றினைப் பெறுதற்கு விரும்பி மீண்டும்; மன் பெரும் பீடிகை தொழுதனள் வணங்கி- ஆரா அன்பினாலே என்றும் நிலைபெற்றுள்ள பெருமையுடைய அத் தருமபீடிகையைக் கைகூப்பித் தொழுது நிலத்தில் வீழ்ந்து வணங்கிப் பின்னர்; தீவதிலகை தன்னொடுங் கூடி அத் தெய்வத்தோடு சேர்ந்து; கோமுகி வலம் செய்து கோள்கையின் நிற்றலும்-அக் கோமுகி என்னும் கொழுநீரிலஞ்சியை வலமுறை வந்து அப் பாத்திரத்தை ஏற்றுக் கொள்ள ஏந்திய கைகளோடே நின்றவளவிலே; தொழுந்தகை மரபின் பாத்திரம் எழுந்து நீரினின்று தொழத்தகுந்த தெய்வத் தன்மையுடைய அமுத சுரபி என்னும் அப் பாத்திரம் மேலெழுந்து மணிமேகலை மருங்கில் வந்து; வலம் புரிந்த இளங்கொடி செங்கையில் புகுதலும்- தன்னை வலம் வந்து நிற்கும் அம் மணிமேகலையின் ஏந்திய சிவந்த கைகளிலே புக்கமர்தலும்; என்க.

(விளக்கம்) நேரிழை: மணிமேகலை. அதில்-அவ்வமுத சுரபியில் ஆருயிர்மருந்து-உணவு. தன் பொறையால் ஏற்போருடைய கையை வருத்தும் என்றவாறு. தான் என்றது-ஆருயிர் மருந்தென்ற உணவினை அது தோன்றும் பொழுதும் இப்பொழுதே என்றமையின், அதன் திறமெலாம் யான் உரைத்தற்குச் செவ்வி இஃதன்று நீ அதனியல்பெலாம் அறவணடிகள் பால் கேட்குவை என்று கூறி முடித்தவாறாம்.

கொள்கையின் ஏற்றுக் கொள்ள ஏந்திய கையோடு நிற்றலும் என்க. அதனை ஏற்க வேண்டும் என்னும் கோட்பாட்டோடு நிற்றலும் எனினுமாம்.

வலம் புரிந்த இளங்கொடி செங்கை என்றது அப் பாத்திரம் தன் மருங்கு வந்துற்றவுடன் மணிமேகலை அப் பாத்திரத்தையும் வலம் வந்து கை யேந்தி அதனை ஏற்க ஏந்திய செங்கை என்பதுபட நின்றது.

பாத்திரம் பெற்ற மணிமேகலை பகவனைப் பராவுதல்

59-72: பாத்திரம்............முன்னர்

(இதன் பொருள்) பாத்திரம் பெற்ற பைந்தொடி மடவாள்- இவ்வாறு அமுதசுரபி என்னும் மாபெரும் பாத்திரத்தை எய்திய பசிய வளையலணிதற்கியன்ற இளமகளாகிய மணிமேகலை எல்லையில்லாத மனமகிழ்ச்சியை எய்தி அப் பேற்றினைத் தனக் கருளிய புத்த பெருமானை வணங்கி வாழ்த்துபவள்; மாரனை வெல்லும் வீர நின் அடி- காமனைக் கடிந்து வென்ற வீரனே நின் திருவடிகளை; தீ நெறிக் கடும்பகை கடிந்தோய் நின்னடி- தீய நெறியிலொழுகுதற்குக் காரணமான காம முதலிய கொடிய உட்பகையை எல்லாம் அழித்தவனாகிய நின்திருவடிகளை பிறர்க்கு அறம் முயலும் பெரியோய் நின்னடி- நினக்கென முயலாது பிறர்க்கு அறமுண்டாக்கும் பொருட்டே முயலுகின்ற பெருமையுடையோனே நின் திருவடிகளை; துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின்னடி- மேனிலையுலகத்தையும் விரும்புகிலாத பழைமையுடையோய் நின் திருவடிகளை; எண் பிறக்கு ஒழிய இருந்தோய் நின்னடி- மக்கள் எண்ணங்கள் எட்டமாட்டாமற் பின்னே கிடக்கும்படி உயர்நிலையிற் சென்றிருந்த நின் அடிகளை; பிறர்க்குக் கண் அளிக்கும் கண்ணோய்- பிறர்கெல்லாம் அகக் கண்ணை அளிக்கின்ற கண்ணோட்ட முடையவனே; நின் அடி நின் அடிகளை; தீ மொழிக்கு அடைத்த செவியோய் நின் அடிபொய் முதலிய தீயமொழி சிறிதும் உட்புகாதபடி காவல் செய்யப்பட்ட திருச்செவிகளையுடையோனே! நின்திருவடிகளை; வாய் மொழி சிறந்த நாவோய் நின் அடி- வாய்மையே ஆகிய நன் மொழியே நவிலுதலிற் சிறந்த செந்நாவினையுடையோய் நின் திருவடிகளை; நரகர் துயர் கெட நடப்போய் நின் அடி- நரகத்திற் கிடந்துழலும் தீவினையாளர் எய்துகின்ற அந் நகரத்துயரமும் இல்லையாம்படி அவர் பொருட்டு அந் நரகருலகத்தினும் புகுகின்றவனே! நின் திருவடிகளை; துயரம் ஒழிப்போய் நின் அடி- நரகர்களின் துன்பத்தையும் அகற்றும் அருளாளனே நின் திருவடிகளை; வணங்குதலல்லது-வாளாது வணங்குதலேயன்றி; வாழ்த்தல்- புகழ்ந்து வாழ்த்துதல்; என் நாவிற்கு அடங்காது- எளியேனாகிய என் ஒரு நாவிற்கடங்காதன்றே! என்ற ஆயிழை முன்னர்-என்று வாழ்த்தி வணங்கிய மணிமேகலையின் முன்பு என்க.

(விளக்கம்) மாத்திரை-அளவு. எல்லை-அருளறம் பூண்டோளாதலின் அவ்வறத்திற்கு இன்றியமையாத கருவியாகிய அமுத சுரபி பெற்றமை யால் அளவற்ற வுவகை பெற்றனள். இது செல்வம் நிலைக்களனாகப் பிறந்த உவகை. மாரன்-அவாக்களை நெஞ்சத்தே தோற்றுவிக்கும் ஒரு தேவன் என்பது பவுத்த சமய நூற்றுணி. காமற் கடந்த வாமன் என முன்னும் வந்தது. அங்கும் காமன் என்றதும் மாரன் என்னும் அத் தேவனையேயாம்.

தீநெறிக் கடும்பகை என்றது காம வெகுளி மயக்கங்களை. போதி மரத்தின்கீழ், புத்தருக்கு மெய்யுணர்வு பிறந்துழி மாரன் நீ இப்பொழுது நிருவாண மெய்துக என்றானாக அது கேட்ட புத்தர் மயங்கினாராக பிரமதேவர் வந்து நீ இப்பொழுது அந் நிலையை அடைதல் வேண்டா! நீ ஈண்டுக் கண்ட அறங்களை உலகிற்கறிவுறுத்து அந் நிலையை உலகத்தவர் எல்லாரும் எய்தும்படி செய்வித்து அப்பால் நிருவாணமெய்துக என்று கூற, அது கேட்ட புத்தர் கைவந்த நிருவாண நிலையையும் துறந்து உலகிற்கு அறவுரை அறிவுறுத்துவாராயினர் என்று புத்தர் வரலாறு கூறும்.

முன்றான் பெருமைக்க னின்றான் முடி வெய்து காறும்
நன்றே நினைந்தான் குணமே மொழிந்தான் தனக்கென்
றொன்றானு முள்ளான் பிறர்க்கே உறுதிக் குழந்தான்
அன்றே இறைவன் அவன்றாள் சரணாங்க ளன்றே

எனவரும் குண்டகேசிச் செய்யுள் ஈண்டு நினையற்பாலது

பிறர்க்கற மருளும் பெரியோன் எனப் பின்னும்(21-178) கூறுவர்.

துறக்கமும் அழிதன்மாலைத்தென்று அதனையும் வேண்டாத் தொல்லோய் என்றவாறு. எண்-எண்ணம். பிறக்கு-பின்னே. கண் அகக் கண். கண்ணோய்- கண்ணோட்டமுடையோய்.

இனி, இந்திரன் வந்து புத்தருடைய கண்களை இரந்து நிற்ப அவர் கண்களையும் வழங்கினார் என்பது பற்றிக் கண்பிறர்க் களிக்கும் கண்ணோட்டமுடையோய் என்றாள் எனினுமாம். இதனை- விண்ணவர் நாயகன் வேண்டக், கண்ணினி தளித்த காதற், புண்ணியன் இருந்த போதி, நண்ணிட நோய்நலியாவே எனவரும் பழம் பாடலானும்(வீர சோழியம் யாப்பு-3 உரைமேற் கோள்)

கண் கொடுத்தான் தடிகொடுத்தான் எனவும் ....இரண்டு கண்ணை........வந்திரந்தவர் மகிழ்ந்தே ஈயும் வானவர் தாம் உறைந்தபதி மானாவூரே எனவும் வரும் நீலகேசிச் (205) செய்யுளானும் மேற் கேளானும் உணர்க.

தீமொழி- பொய் குறளை கடுஞ்சொல் பயனில் சொல் என்பன மொழி புகாமைக்கு அடைத்த செவி என்க. புத்தர் நரகர் துயர் கெட நடந்ததனை அருவினை சிலர் கெட வொருபெரு நரகிடை எரிசுடர் மரைமல ரெனவிடும் அடியினை எனவரும் செய்யுளானும் உணர்க(வீர சோழியம். யாப்பு-11 உரைமேற்கோள்)

உரகர்- நாகர். புத்தர் இவர் துயரம் ஒழித்ததனை மீதியல் கருடனை விடவர வொடுபகை விதி முறை கெடவறம் வெளியுற வருளினை எனவும் பொற்புடை நாகர் தம் துயரம் போக்கினை எனவும், பைந் நாகர் குலமுய்ய வாயமிழ்தம் பகர்ந்தனையே எனவும், ஆரமிழ்த மணிநாகர் குலமுய்ய வருளினையே எனவும், வார்சிறைப்புள் ளரையற்கும் வாய்மை நெறி பகர்ந்தனையே எனவும் வரும்(þ வீர சோழியம் யாப்பு-11) மேற்கோட் செய்யுள்களானும் உணர்க.

தீவதிலகை பசிப்பிணியின் கொடுமையை மணிமேகலைக்குக் கூறுதல்

73-81: போதி....நிமிராது

(இதன் பொருள்) தீவதிலகை போதி நீழல் பொருந்தித் தோன்று நாதன் பாதம் நவை கெட ஏத்தி- தீவதிலகை தானும் போதி மரத்தின் நீழலிலே எழுந்தருளிக் காட்சியளிக்கும் முதல்வனாகிய புத்த பெருமானுடைய திருவடிகளைப் பிறவிப்பிணி தீரும்பொருட்டு வாழ்த்தி வணங்கிய பின்னர்; சேயிழைக்கு உரைக்கும்- மணிமேகலைக்குக் கூறுவாள்; பசிப்பிணி என்னும் பாவி- மக்கட்கு வருகின்ற பசிப்பிணி என்று கூறப்படுகின்ற பாவியானது; குடிப்பிறப்பு அழிக்கும்-உயர்ந்த குடியிற் பிறந்தார்க்கு இயல்பாகவே அமைந்துள்ள செப்ப முதலிய உயரிய பண்புகளைத்தானும் அழித்தொழித்துவிடும்; விழுப்பம் கொல்லும்-அவர் எய்திய சிறப்புக்களையும் இல்லையாக்கிவிடும்; பிடித்த கல்விப் பெரும்புணைகளையும் இல்லையாக்கிவிடும்; பிடித்த கல்விப் பெரும்புணைவிடூஉம்- பிறவிப் பெருங்கடலை நீந்திக் கரையேறுதற் பொருட்டுக் கைப்பற்றிய கல்வியாகிய பெரிய தெப்பத்தையும் அகற்றிவிடும்; நாண் அணி களையும்- நாணாகிய அணிகலனைக் களைந்துவிடும்; மாண் எழில் சிதைக்கும்- மாட்சிமையுடைய அழகையும் அழித்து விடும்; பூண் முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்- தாம் மணந்து கொண்ட வாழ்க்கைத் துணைவியரோடு ஏதிலார் முன்றிலிலே நிறுத்தி வைக்கும்; அது தீர்த்தோர்-அத்தகைய கொடிய பசிப்பிணியைத் தீர்த்து விடுகின்றவருடைய; இசைச் சொல் அளவைக்கு என் நா நிமிராது- புகழ்ச் சொல்லைக் கடைபோகச் சொல்லுதற்கு எனது நா துணிந்து எழமாட்டாது காண்! என்றாள் என்க.

(விளக்கம்) குடிப்பிறப்பு-உயர்ந்த குடியிற் பிறந்த மேன் மக்களுக்கு இயல்பாகவிருக்கும் உயரிய பண்புகள்; அவையாவன: செப்பம் நாண் ஒழுக்கம் வாய்மை நகை ஈகை இன்சொற்கூறல் பிறரை இகழாமை முதலியன. விழுப்பம் என்றது தமது முயற்சியாலெய்திய சிறப்புக்களை. பிறவிப் பெருங்கடலை நீந்துதற்குக் கைப்பற்றிய கல்வி என்க. பெரும் புணை என்றமையால் பிறவிப் பெருங்கடல் என்பது பெற்றாம். அறிவினை நிச்சிநிரப்பக் கொல்லும் என்பது பற்றி இங்ஙனம் கூறினார். விடூஉம் என்றது விடுவிக்கும் என்பதுபட நின்றது. நாண் அணி- நாணாகிய அணிகலம். அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு என்பது திருக்குறள்(1014).

இனி, ஈண்டு பிறந்த குலமாயும் பேராண்மை மாயும் சிறந்ததங் கல்வியு மாயும் எனவரும் நாலடியும்(285) நோக்குக. பசி-தீவினைகட் கெல்லாம் காரணமாதலின், பாவி என்றார். அதன் கொடுமை பற்றிப் பண்பையே பண்பியாகக் கூறிய படியாம். அழுக்காறென ஒருபாவி எனவும், இன்மை என ஒரு பாவி எனவும் திருவள்ளுவரும் ஓதுதல் உணர்க. இதற்கு ஆசிரியர் பரிமேலழகர் பண்பிற்குப் பண்பி இல்லை யேனும் தன்னை ஆக்கினானை இரும்மையும் கெடுத்தற் கொடுமை பற்றி அழுக்காற்றினைப் பாவி என்றார் என்பர். யாதானும் ஒரு பண்பின் சிறுமை பெருமை கொடுமை முதலியவற்றைக் கூறுங்கால் சிறுமை முதலியன பண்புகளாகவும் அவற்றையுடைய பண்புகளை பண்பிகளாகவும் அமைதலின் பண்பிற்குப் பண்பி இல்லை என்பது போலி உரை என்க.

கொடுத்தார் எனும் சொல் மூவுலகும் கேட்குமே என்பது பற்றி அவர் இசையை அளத்தற்கு நாவெழாது என்றவாறு. விரிப்பின் அகலுமாகலின் கடைபோகாமையால் அஞ்சி நா எழாது என்பது கருத்து. புகழ் அளவுபடாமையை,

உரைப்பார் உரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்
றீவார்மேல் பிற்கும் புகழ்          (232)

எனவரும் திருக்குறளானு முணர்க

பசிப்பிணியின் கொடுமைக்கோர் எடுத்துக்காட்டு

82-91: புன்மரம்...............அன்றோ

(இதன் பொருள்) புல் மரம் புகையப் புகை அழல் பொங்கி மன்னுயிர் மடிய மழை வளம் கரத்தலின்-ஒரு காலத்தே நிலவுலகத்தே பசும்புல்லும் மரங்களும் எரிந்து புகையும்படி காட்டுத்தீப் பற்றி மிகுமாறு மழைவளம் ஒழிந்து போதலாலே; அரசு தலை நீங்கிய அருமறை அந்தணன்-தனக்கியன்ற அரசுரிமையையும் தன்னிடத்தினின்றும் நீங்கப் பெற்றவனாய்க் காட்டகத்தே தவஞ் செய்து கொண்டிருந்த உணர்தற்கரிய மறைகளையுணர்ந்த அறவோனாகிய விசுவாமித்திர முனிவன் காயும் கனியும் இலையும் கிழங்குமாகிய தனக்குரிய உணவுகளில் யாதொன்றும் கிடைக்கப் பெறாமையின், அரும்பசி களைய இருநிலமருங்கின் யாங்கணும் திரிவோன்- தனக்குண்டான பொறுத்தற்கரிய பசிப்பிணிவய அகற்றற் பொருட்டு உணவு தேடிப் பெரிய நிலப்பரப்பிலே எங்குந் திரிபவன்; ஆற்றுவது காணான்-அப் பசியைத் தணித்தற்கியன்ற உணவு பிறிதொன்றனையும் காணப் பெறானாய்; திருந்தாநாய் ஊன் தின்னுதல் உறுவோன்-ஆண்டு இறந்து கிடந்த அருவருப்புடைய நாயினது ஊனைத் தின்னத் தொடங்கி; இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர்-உண்பதற்கு முன்பு செய்வதற்குரிய இந்திர சிறப்பு என்னும் தேவர் வழிபாட்டைச் செய்பவன் முன்னிலையிலே; வந்து தோன்றிய வானவர் பெருந்தகை-அந் நிலைகண்டிரங்கி அம் முனிவன் முன்வந்து தோன்றி அவ்வரும் பசியைப் போக்கிய அமரர் கோமானாகிய பெருந்தகைமையுடையோன்; மழைவளம் தருதலின் மன்னுயிர் ஓங்கிப் பிழையா விளையுளும் பெருகியது அன்றோ-அந் நிகழ்ச்சியைத் தலைக்கீடாகக் கொண்டு நிலவுலகிற்கு மழையினாலே வளத்தை வழங்குதலாலே அற்றைநாள் தொடங்கிப் பிழைத்தலில்லாது விளைபொருளும் பெருகிய தென்னும் இவ் வரலாற்றை நீயும் கேட்டிருப்பாய் அல்லையோ; என்றாள் என்க.

(விளக்கம்) புல் மரம் புகையப் புகை அழல் பொங்கி மன்னுயிர் மடிய மழைவளம் கரத்தலின் எனவரும் இதனோடு,

விசும்பிற் றுளிவீழி னல்லான்மற் றாங்கே
பசும்புற் றலைகாண் பரிது               (16)

எனவும்

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
துண்ணின் றுடற்றும் பசி           (13)

எனவும், வரும் திருக்குறள்களையும் நினைவு கூர்க.

விசுவாமித்திரன் அரசுரிமை துறந்து கானகம் புக்குத் தவஞ்செய்தலின், அரசுதலை நீங்கிய முனிவன் என்றார். துறவோனாதலின் அருமறை அந்தணன் என்றார். எல்லா இன்பங்களையும் துறந்து அரமறைகளையுமுணர்ந்து துறவியாயிருந்தவன்றானும் பசிப்பிணி ஆற்றான் ஆயினன் எனப் பசிப்பிணியின் கொடுமையை விளக்குவார் உவமைகளை ஏற்ற அடைமொழி தேர்ந்து புணர்ந்து விதந்தார்.

இந்திர சிறப்பு என்றது, தேவர்க்குப் பலியிடுதலை, உண்ணும் உணவினை முதலில் தேவர்கட்குப் பலியாக்கிப் பின்னர் உண்ணுதல் வேண்டும் என்பது மனுநூல் விதி. அல்லதூஉம் இவ்விதி பிடகநூல் விதியாதலும் கூடும்.

இந்திரன் இம் முனிவனிலைக்கு இரங்கித் தானே போதருதலின் அவனைப் பெருந்தகை என்றார். இதனைப் பாட்டிடை வைத்த குறிப்பினாலே இந்திரன் வந்து அம் முனிவன் அரும்பசி களைந்து உலகிற்கு மழைவளம் தந்தனன் என்பதும் கூறிக்கொள்க.

விசுவாமித்திரன் இங்ஙனம் நாயூன்தின்ன முயன்றமை மனுநூலின் 10 ஆம் அத்தியாயத்தில் 108 ஆம் சுலோகத்தினும் கூறப்பட்டுளதென்பர்.

தீவதிலகை மணிமேகலைக்கு அறிவுரை கூறுதல்

92-98: ஆற்றுநர்..................என்றலும்

(இதன் பொருள்) ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர் தாமே முயன்று உண்ணும் தாளாளர்க்கு உண்டி கொடுப்போர் அறம்விற்கும் வணிகரேயாவர் ஆதலின் அவர் வாழ்க்கை அற வாழ்க்கை எனப்படாது; உலகின் ஆற்றாமாக்கள் அரும்பசிகளைவோர் மேற்றே மெய்ந்நெறி வாழ்க்கை-உலகின்கண் தாமே முயன்றுண்ணவியலாத வறியவர்க்குத் தாமே நீக்குதற்கரிய பசிப்பிணியை உண்டி கொடுத்துத் தீர்த்துவிடுகின்ற மக்கள் பாலதாம் வாய்மையான அறவாழ்க்கை; மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே-எனவே அம் மெய்ந்நெறி வாழ்க்கையை மேற்கொண்டு மண் செறிந்த இந்நிலவுலகத்திலே வாழும் அத்தகைய ஆற்றாமாக்கட்கு எல்லாம் உணவு கொடுத்தவர் மாத்திரம் ஆகார் உயிரையே வழங்குபவர் ஆகின்றனர் காண்!; உயிர் கொடை பூண்ட உரவோய் ஆகி கயக்கு அறு நல்அறம் கண்டனை என்றலும்-இனி மணிமேகலையே கேள் இத்தகைய பேரறம் செய்தற்குத் தலைசிறந்த கருவியாகிய இவ்வமுத சுரபியைப் பெற்ற திருவுடைய நீ இது சுரக்கும் ஆருயிர் மருந்தை ஆற்றா மாக்கட்கெல்லாம் வழங்குமாற்றால் அவர்க்கெல்லாம் உயிர் வழங்கும் ஆற்றலுடைய தெய்வமேயாகி ஆருயிரின் கலக்கம் அறுதற்குக் காரணமான நன்மைமிக்க அருளறத்தைச் செய்தாய் அல்லையோ என்று அத் தெய்வம் உவகை கூறுதலும் என்க.

(விளக்கம்) ஆற்றுநர் ஈண்டு உடையோர் என்பதுபட நின்றது உடையோர்க்கு உண்டி வழங்குவதனை அறம் என்று கருதி அவரையெல்லாம் ஒருங்கு கூட்டி உண்டி வழங்குபவர் உலகில் இக்காலத்துச் சாலப் பலராவார். இவர் செய்வன புகழ் விரும்பியோ பிற ஏதேனும் விரும்பியோ செய்பவராவார். இவர் அறம் என்னும் செல்லாக் காசை விலையாகக் கொடுத்து அதற்கு மாற்றாகப் புகழ் என்னும் பொய்யையே பொருளாகக் கருதி வாங்குகின்ற மடவோரே யாவார், ஆதலின் இவரை அறம் விலை பகர்வோர் என்றொழிந்தார், அதற்கு யாதும் பொருள் பெறாமையின்.

இனி, இம்மைச் செய்தது மறுமைக்காமெனும் கருத்தோடு ஆற்றுநர்க்கே அளிப்பாரும் உளர். இவரை அறவிலை வாணிகர் என்று புறநானூறு (134) புகலும்.

இனி வள்ளுவர், ஈகைக்கு அவ்வதிகாரத்திலேயே

வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீ துடைத்து     (குறள், 220)

எனத் தெள்ளத் தெளிய இலக்கணம் இயம்பின்மை ஈண்டு நினைந்து மகிழற்பாற்று. ஏற்றகை மாற்றாமை என்னானும் தாம் வரையாதாற்றாதார்க் கீவதாம் ஆண்கடன் என்பது நாலடி (98). உயிர்க் கொடை-உயிர் வழங்குதல். கயக்கு-கலக்கம். நல்லறங் கண்டனை நல்லறங் காண்பாய். காண்டல் ஈண்டு செய்து காண்பாய் என்பதுபட நின்றது. தெளிவுபற்றிக் காண்பாய் எனல் வேண்டிய எதிர்காலவினைச் சொல் இறந்த காலமாயிற்று;

வாராக் காலத்து வினைச் சொற் கிளவி
இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும்
இயற்கையும் தெளிவுங் கிளக்குங் காலை
                  (தொல்-சொல்: வினை- 48)

என்னும் இலக்கணமும் உணர்க.

மணிமேகலை ஆற்றாமாக்கட்கு உண்டி கொடுத்தற்குப் பெரிதும் விதுவிதுப்புற்றுக் கூறுதல்

99-109: விட்ட..........புகுந்தது

(இதன் பொருள்) விட்ட பிறப்பில் யான் விரும்பிய காதலன் திட்டிவிடம் உணச் செல் உயிர் போவுழி-அது கேட்ட மணிமேகலை ஆற்றவும் மகிழ்ந்து அன்னாய்! கழிந்த பிறப்பிலே இலக்குமியாயிருந்த யான் காதலித்த என் ஆருயிர்க் காதலனைத் திட்டிவிடம் என்னும் பாம்பின் நஞ்சுண்ணா நிற்ப அவனது போகூழுடைய உயிரானது போகும்பொழுது அத் துன்பம் பொறாமல்; உயிரொடு வேவேன் உணர்வு ஒழிகாலத்து- உயிரோடு தீயினுள் மூழ்கி வேகின்ற என்னுடைய உணர்வு அழிகின்ற பொழுது; வெயில் விளங்கு அமயத்து விளங்கித் தோன்றிய சாது சக்கரனை-வெயில் மிகவும் விளக்கமெய்தும் நண்பகலிலே என் கண்முன் வானின்றிழிந்து வந்து தோன்றிய சாதுசக்கரன் என்னும் துறவோனை; யான் ஊட்டிய காலம் போல்வது ஓர் கனாமயக்கு உற்றேன்- யான் உண்டி கொடுத்து ஓம்பிய காலத்தைப்போன்று ஒருகனா என்னெஞ்சத்தே நிகழக்கண்டேன்; ஆங்கு அதன் பயனே-அப் பிறப்பில் எனது இறுதிப் பொழுதிற் கண்ட அந்த அறக்காட்சியின் பயனாகவே; இப் பாத்திரம் ஈங்கு என் கைப் புகுந்தது- இவ்வரும் பெறல் அமுதசுரபி அடிச்சி கையில் வந்தெய்தியது என்றாள் என்க.

(விளக்கம்) உயிர் உடம்பினின்றும் பிரியும் பொழுது அவ்வுயிர் அது காறும் முதன்மையாகக் குறிக்கொண்டிருந்த எண்ணமே ஏனைய எண்ணங்களைக் கீழ்ப்படுத்து உள்ளத்தின்கண் தன் காட்சியைத் தோற்றுவிக்கும் என்றும். அக் காட்சிக் கியன்ற பிறப்பே அடுத்து வந்துறும் வந்துற்ற காலத்து அவ்வெண்ணத்திற்கியன்ற சூழ்நிலைகளை ஊழ்வினை வகுத்துக் கொடுக்கும் என்றும் திறவோர் கூறுவர், அதற்கேற்ப ஈண்டும் மணிமேகலை முற்பிறப்பிலே பூண்டிருந்த அருளறக் காட்சியே அவள் ஆவி துறக்கும் பொழுது தோன்ற, அவ்வருளறம் மீண்டும் தொடர்ந்து பூணும்படி ஆகூழ் அமுதசுரபியை அவள்கையிற் புகுவித்தது என்பது கருத்து. இதனையே பவுத்த சமயத்தவர் ஏது நிகழ்ச்சி எதிர்தல் என்றோதுப. இதனை இந் நூலாசிரியர் பின்னர்,

மணிபல் லவத்திடை மன்னுடம் பிட்டுத்
தணியா மன்னுயிர் தாங்குங் கருத்தொடு
சாவக மாளும் தலைத்தாள் வேந்தன்
ஆவியிற் றுதித்தனன்

எனபதனானும் உணர்க.(14:101-104)

இன்னும், பிறப்பென்னும் திருக்குறள் (358) விளக்கவுரையின் கண் ஆசிரியர் பரிமேலழகர் உயிர் உடம்பினீங்குங் காலத்து அதனால் யாதொன்று பாவிக்கப்பட்டது அஃது அதுவாய்த் தோன்றுமென்பது எல்லா ஆகமங்கட்கும் துணிபு என ஓதுவதும் ஈண்டு நினைவு கூர்க.

இதுவுமது

107-113: நாவலொடு...............பலரால்

(இதன் பொருள்) நாவலொடு பெயரிய மாபெருந் தீவத்து-நாவல் என்னும் மரப் பெயரை அடைபுணர்த் தோதப்படுகின்ற நாவலந் தீவு என்னும் பெயரையுடைய மிகவும் பெரிய தீவின்கண்ணே; நல் அறம் வித்தி விளைந்த அதன் பயன் துய்ப்போர் தம்மனை முற்பிறப்பிலே நன்மை தருகின்ற அறமாகிய விதையை விதைத்து இம்மையிலே விளைந்த பயனாகிய பல்வேறு செல்வங்களையும் நுகர்ந்து மகிழ்கின்ற மாந்தர் தம் நெடுநிலை மாடமனை முன்றிலின் கட்சென்று; சிதர்த்துணி உடுத்து வயிறு காய் பெரும்பசி அலைத்தற்கு இரங்கி- நைந்த கங்தைத்துணியை உடுத்துத் தம் வயிறு தம்மை இடையறாது துன்புறுத்தும் பெரும்பசிக்கு ஆற்றாது அலமந்து; வெயில் என முனியாது புயல் என மடியாது புறங்கடை நின்று- வெயில் என்று வெறாமலும் மழை யென்று சோம்பிக்கடவாமலும் அம் மனையிற் புகுதாமலும் வெளியிடத்தேயே நின்று; புன்கண் கூர்ந்து- பசிப்பிணி மிகுந்து முன் அறங்கடை நில்லாது அயர்வோர் பலரால்-முற்பிறப்பிலே செய்த தீவினை காரணமாக அம் மணிகளிலே புகவும் மாட்டாராய் நிற்கவும் மாட்டாராய்ப் பெரிதும் வருந்தும் மாக்கள் பலராவார் என்க.

(விளக்கம்) நாவல் என்னும் அடைபுணர்த்தப்பட்ட பெயரையுடைய தீவு நாவலந்தீவு. அறம் வித்தி என மாறுக. அதன் பயன் இன்பம் சிதர்த்துணி-நைந்தபழந்துணி; கந்தை. புறங்கடைநின்று வாயிலில்நின்று உட்புகுதமாட்டாமையால் முனியாதும் மடியாதும் நிற்றல் வேண்டிற்று.

அறங்கடை- தீவினை. ஈண்டு நல்லதன் நலனும் தீயதன் தீமையும் ஒருசேர. நல்லறம் வித்தி விளைந்த பயன் துய்ப்போர் மனையும் அதன் முன்றிலில் முன் அறங்கடை நின்றோர் புன்கண்கூர்ந்து அயர்ந்து அங்கும் நிற்கவும் பெறாராய் அயர்வோர் நிலையும் உணர்த்தப்பட்டமை உணர்க. இதனோடு

அகத்து ஆரே! வாழ்வார்என் றண்ணாந்து நோக்கிப்
புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி
மிகத்தாம் வருந்தி யிருப்பரே மேலைத்
தவத்தால் தவஞ்செய்யா தார்

எனவரும் நாவடி (31) யும் நினைக.

இதுவுமது

114-118: ஈன்ற...............என

(இதன் பொருள்) ஈன்ற குழவி முகம் கண்டு இரங்கித் தீம்பால் சுரப்போள் தன் முலை போன்று-தான் பெற்ற குழந்தையின் முகத்தைப் பார்க்குமளவிலேயே அதன் பசித்துயருக்குப் பெரிதும் இரக்கமெய்தி இனிய பாலைச் சுரக்கின்ற தாயினது கொங்கையைப் போன்று; நெஞ்சு வழிப் படூஉம் விஞ்சைப் பாத்திரத்து அகன் சுரைப் பெய்த ஆருயிர் மருந்து-வருந்தி வந்தோர்தம் நெஞ்சில் நினைத்தவாறே உணவைத் தோற்றுவிக்குமொரு வித்தையைத் தன்பாற் கொண்டுள்ள இத் தெய்வப் பிச்சைக்கலத்தினது அகன்ற உட்பகுதியிலே முதன் முதலாகப் பெய்யப்பட்ட உணவானது; அவர் முகம் கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன் என அவ்வாற்றா மாக்களுடைய வருந்து முகம் கண்டதுணையானே அவர் விரும்பும் உணவைச் சுரக்கின்ற அற்புதத்தைத் கண்டு மகிழ்வதற்கு வேணவாவுடையேன்காண்! என்றுகூற என்க.

(விளக்கம்) அன்னை மகவின் முகம் பார்த்த அளவிலேயே அவள் கொங்கை அப்பொழுதே அம் மகவு விரும்பும் பாலைச் சுரந்து பிலிற்றும் அன்றோ! அங்ஙனமே இப் பிச்சைக்கலம் பசியால் வருந்துவோர் வந்துற்றபோதே அவர் நெஞ்சம் விரும்பும் உணவைச் சுரந்துவிடும் என்றவாறு. எனவே வருபவர் எத்தகைய உணவை விரும்புவாரோ அத்தகைய உணவை அவர் கூறுமுன்பே அக்கலம் சுரக்கும் என்றவாறாயிற்று. இங்ஙனம் சுரப்பதுவே காண்டற்கரிய அற்புதச் செயலாகலின் அதனைக் காண யான் பெரிதும் விரும்புகின்றேன் என்றாள். எனவே யான் இடையறாது அவ்வறத்தைச் செய்யுமாற்றால் அக்காட்சியைக் கண்டு மகிழ விதுப்புற்று நிற்கின்றேன் காண் எனத் தீவதிலகைக்கு அறிவித்தபடியாம்.

கயக்கறும் நல்லறம் செய்குதி என்று பணிந்த தெய்வத்திற்கு அவ்வறஞ் செய்தலில் தனக்கிருக்கின்ற விதுப்புறவினை அறிவிக்கும் இம் மொழிகள் பெரிதும் இன்பம் செய்தலறிக. தீவதிலகை இன்றியமையாத மற்றொரு செய்தியையும் அறிவுறுத்து மணிமேகலைக்கு விடைகொடுத்தல்

119-123: மறந்தேன்............உரைப்ப

(இதன் பொருள்) அதன் திறம் மறந்தேன்-அதுகேட்ட தீவதிலகை மணிமேகலையாய் அவ்வமுதசுரபியின் பண்பிலே உனக்குயான அறிவிக்கவேண்டிய தொன்றனை யான் என் மறதியாலே அறிவியாதொழிந்தேன் காண்; நீ எடுத்து உரைத்தனை- நின் ஆகூழ்காரணமாகப் போகலும் யான் மறந்த செய்தியை மீண்டும் யான் நினைவு கூரும் வண்ணம் நீயே அச் செய்தியை விதந்து கூறா நின்றனை; அறம் கரியாக அருள் சுரந்து ஊட்டும் சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது-அறமே சான்றாக உள்ளத்தே அருள் சுரந்து ஆற்றாமாக்கட்கு உணவூட்டுகின்ற சிறப்புடையோர் முதன்முதலில் அதன்கண் ஆருயிர் மருந்தைப் பிச்சையாகப் பெய்தாலன்றி ஏனையோர் பெய்யின் நன்கு சுரவாதுகாண்! ஆதலின் நீ ஆங்ஙனம் ஆயினை-அவ்வாறு முதன் முதலாகச் சிறந்தோர்பால் ஏற்கும் கடப்பாடுடையை ஆயினை பின்னர்; அதன் பயன் அறிந்தனை-அங்ஙனம் ஏற்பின் நீ விரும்பும் அதன் பயனாகிய அஃதுணவு சுரக்கும் காட்சியையும் கண்டு மகிழ்வாய்!; ஈங்கு நின்று எழுவாய் என்று அவள் உரைப்ப-இனி நீ இம் மணிபல்லவத்தினின்றும் எழுந்து நின்னூர் புகப் போவாயாக என்று பணித்தலும் என்க.

(விளக்கம்) அறத்திற்காகவே அறஞ்செயதல் வேண்டும் என்பாள் அறங்கரியாக என்றாள். அஃதாவது அறம் பிறர்கண்டு மதித்தற் பொருட்டுச் செய்யப்படுவது அன்று. அறம் செய்யும் பண்புடைமை மட்டுமே அச் செயற்குச் சான்றாதல் வேண்டும் என்றவாறு. இதனாலேயே நின் வலக்கையாற் செய்யும் அறம் உன் இடக்கை அறியாவண்ணம் செய்க என்று இயேசு பெருமான் இயம்புவாராயினர். அறம் சான்றதலாவது அவன் மனச்சான்றிற் கிணங்கச் செய்தலாம். அருள் சுரக்க வேண்டும் என்று அவன் மனச்சான்று கட்டளையிட்டவழி அது சான்றாக அங்ஙனமே அருள்சுரப்பதாம் என்க. இவ்வாறு செய்யப்படும் அறம் அவன் மனத்தையன்றிப் பிறர் யாருமே அறியாவண்ணம் செய்யப்படுதலும் கூடுமாகலின் அதற்குப் பிறிதொரு சான்றின்மையறிக. இங்ஙனம் செய்வதே வாய்மையான அறமுமாம் என்க.

ஈண்டுத் தீவதிலகை தான் மறந்ததாகக் கூறியது, அமுதசுரபியில் முதன் முதலிற் பிச்சையாக உணவுபெய்வோர். அறங்கரியாக அருள் சுரந்தூட்டும் சிறந்தோராக விருத்தல் வேண்டும். அவர் பெய்தால் செவ்வனம் சுரக்கும். இன்றேல் அங்ஙனம் சுரக்கமாட்டாது என்னும் அப் பாத்திரத்தின் தன்மையையேயாம். இதனை நான் கூறமறந்தேன். நீ விஞ்சைப்பாத்திரத்து அகன்சுரைப் பெய்த ஆருயிர் மருந்து அவர்முகம் கண்டு சுரத்தல் என்ற எடுத்துரைத்தமையால் யான் அஃது அங்ஙனம் சுரப்பது சிறந்தோர் பிச்சை பெய்தவழி அவர் பொருட்டே சுரப்பதாம் என்னும் அதன் திறத்தை நினைவு கூர்ந்தேன். நீ முதன் முதலில் அங்ஙனம் சிறந்தோர் பாற் சென்றே முதன் முதலாகப் பிச்சை ஏற்பாய். ஏற்றவழி அஃது அங்ஙனமே சுரந்து நீ விரும்பிய பயனை அளிக்கும். அதனால் இன்பம் எய்துக என்பாள் ஆங்ஙனம் ஆயினை அதன்பயன் அறிந்தனை என்றாள். ஈண்டும் தெளிவுபற்றி ஆகுக, அறிவாய் என வேண்டிய எதிர்காலவினைச் சொற்கள் இறந்தகாலத்தாற் கூறப்பட்டன. இதற்கு இலக்கண விளக்கம்(98) கயக்கறு நல்லறம் என்புழிக் கூறினாம். ஆண்டுக் கண்டுகொள்க.

ஈண்டு நூலசிரியரின் இக்கருத்தறியாது தீவதிலகை முன்பு கூறியதையே கூறியதாக உரை கூறுவாரும் உளர். அவர் உரையும் விளக்கமும் போலியாதல் ஆராய்ந்தறிக.

மணிமேகலை மணிபல்லவத்திலிருந்து பூம்புகார் நகரத்தில் மாதவி முன்னர் வந்துதோன்றுதல்

124-132: தீவ..................கூறும்

(இதன் பொருள்) மணிமேகலை தீவ திலகை தன் அடிவணங்கி அவ்வன்புப் பணிமொழிகேட்ட மணிமேகலை அத் தெய்வமகளின் திருவடிகளிலே வீழ்ந்து வணங்கி; மாபெரும் பாத்திரம் மலர்க் கையின்ஏந்தி கோமகன் பீடிகை தொழுது வலம் கொண்டு மிகவும் பெருமையுடைய அமுதசுரபியைத் தன் தாமரை மலர் போன்ற கையிலே ஏந்திப் புத்தபெருமானுடைய பீடிகையையும் வலம்வந்து மந்திரத்தின் துணைகொண்டு வானினூடு எழுந்து (பூம்புகார் நகர் நோக்கி வான்வழியாக வருபவள் அந் நகரத்தின் கண்) வழுஅறு தெய்வம் வாய்மையின் உரைத்த எழுநாள் வந்தது என்மகள் வாராள்-சுதமதியின்பாற் குற்றமற்ற கந்திற் பாவையாகிய தெய்வம் வாய்மையாக அறிவுறுத்த ஏழாநாளும் வந்துற்றது என் மகள் மணிமேகலை இன்னும் வந்திலளே!; வழுவாய் உண்டு என் மயங்குவோள் முன்னர் வந்து தோன்றி- அத் தெய்வ மொழி பொய்ம் மொழி ஆதலும் உண்டாமோ! என்று ஐயுறும் மயங்கி யிருக்கின்ற மாதவி முன்னிலையிலே வானின்றிழிந்து வந்து தோன்றிய மணிமேகலை; அவர் மயக்கம் களைந்து-அங்கிருந்த மாதவியும் சுதமதியும் ஆகிய இருவருடைய மனமயக்கத்தையும் போக்கி; அந்தில் அவர்க்கு ஓர் அற்புதம் கூறும்-அவ்விடத்தே தன் வரவு கண்டு வியப்புற்றிருக்குமிருவர்க்கும் அவ் வியப்பின் மேலும் ஓர் அற்புதமான மொழியைக் கூறுவாள்; என்க.

(விளக்கம்) சுதமதி தனக்குக் கூறியபடி தெய்வம் உரைத்த மொழி பொய்க்குமோ என்று மாதவி மயங்கினள் என்க. வாய்மை- மெய்ம்மொழி. வழுவாய்- பொய். தப்புதல் எனலுமாம். அவர் என்றது சுதமதியையம் உளப்படுத்தவாறு. அந்தில்-அவ்விடம். அற்புதம்-அதிசயம். அம் மொழி மேலே கூறுவன.

மணிமேகலை அற்புதம் கூறுதல்

133-141: இரவி..................பிறப்பு

(இதன் பொருள்) இரவிவன்மன் ஒரு பெருமகளே-இரவிவன்மன் என்னும் மன்னவன் மகளே!; துரகத்தானைத் துச்சயன் தேவி-குதிரைப்படை மிக்க துச்சய மன்னவன் தேவிமாரே!; அமுதபதி வயிற்று அரிதின் தோன்றித் தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும் அவ்வையர் ஆயினர்-அமுதபதி என்னும் கோப்பெருந்தேவியின் திருவயிற்றில் அரிதாகப் பிறந்து இலக்குமியாகிய எனக்குத் தவ்வையராயிருந்த தாரையும் வீரையுமாகிய நீவிர் இருவருமே ஈண்டு மாதவியும் சுதமதியும் ஆகி இருவருமே எனக்கு இம்மையில் அன்னையராயினீர் காண்! ஆகவே; நும்மடி தொழுதேன்-இப் பிறப்பும் முப்பிறப்பும் ஆகிய இரு பிறப்பினும் என்னால் தொழப்படும் சிறப்புடைய நும் மிருவருடைய திருவடிகளையும் தொழுகின்றேன்; மானிட யாக்கையில் ஈங்கு தீவினை அறுக்கும் செய்தவம் நுமக்கு வாய்வது ஆக-இம் மக்கட் பிறப்பில் ஈங்குப் பிறப்பிற்குக் காரணமான தீவினையை அறுத்தற்குக் காரணமாக நீயிர் செய்யும் தவம் நுமக்கு வாய்ப்புடைய தாகுக!; செறிதொடி நல்லீர் உம் பிறப்பு அறவண அடிகள் தம்பால் பெறுமின்-நும்முடைய பழம் பிறப்பின் வரலாற்றில் எஞ்சியவற்றையும் அறவண வடிகளார்பால் கேட்டறிந்து கொண்மின்!; என்றாள் என்க.

(விளக்கம்) அவர் என்றது மாதவி போன்றே மயங்கி யிருக்கும் சுதமதியை உளப்படுத்தியவாறு. என்னை? அவளும் மணிமேகலையின் பிரிவாற்றாமல் தனித்துயர் உழக்கும் மாதவியினும் காட்டில் பெரிதுந் துயருற்றனள் என்பது துயிலெழுப்பிய காதையில் சுதமதி இன்னுயிர் இழந்த யாக்கையினிருந்தனள் என்றமையாலறிக (துயிலெ...133-134)முற்பிறப்பில் அவர் தாரையும் வீரையும் ஆகியிருந்த செய்தி அற்புதமாக முன்னரே அறிந்த செய்தியே ஆயினும், அதனை இவளும் கூறுதலின் ஈண்டும் அற்புதச் செய்தியாயிற்று.அவற்றுள் எஞ்சியவற்றை அறவணர் அறிவிப்பர் என்பாள் அறவணடிகள் தம்பாற் பிறப்புப் பெறுமின் என்றாள், என்னை? அறவணடிகளார் அவர்தம் முற்பிறப்பை பெறுமின் என்றாள் நேரிற் கண்டவர் என்பது மணிமேகலா தெய்வம் கூறிய கூற்றால் மணிமேகலை அறிந்திருத்தலால் இங்ஙனம் கூறினள் அல்லதூம் வருகின்ற காதையில்(12) ஆங்கவர் தந்திறம் அறவணன் தன்பால் பூங்கொடி நல்லாய் கேள் என்றுரைத்ததும் என மணிமேகலை மணிமேகலா தெய்வம் தனக்குக் கூறியதாகவே ஓதுதலின், மந்திரங் கொடுத்த காதையில் இது காணப்படாமையின் இப் பொருள்பட வரும் மணிமேகலா தெய்வத்தின் கூற்று ஏடெழுதுவோரால் விடப்பட்டிருத்தல் கூடும் என்று நினைத்தற்கும் இடந்தருகின்றது. முன்பு தவ்வையரும் இப்பொழுது அவ்வையரும் ஆயினமையால் நீயிர் உம்மையினும் இம்மையினும் என்னாற் றொழுந்தகையுடையீரே ஆகுதிர் ஆதலால் நும்மடியைப் பேரன்புடன் தொழுகின்றேன் என்பதுபட தவ்வையராகிய............தொழுதேன் என்று விதந்தெடுத்து விளம்பினள் செய்தவம் வாய்வதாக என மாறுக.

மணிமேகலை அமுதசுரபியை அவர்க்குக் காட்டி அறவணவடிகளாரைத் தொழுதற்கு அவரொடும் போதல்

141-146: ஈங்கிஃது............தானென்

(இதன் பொருள்) ஈங்கு இஃது ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும் மாபெரும் பாத்திரம்-அன்னையீர்! இதோ என் கையகத்திருக்கும் இப் பாத்திரம் அறவோனாகிய ஆபுத்திரன் என்பவன் கையகத்திருந்த மாபெருந் தெய்வத் தன்மையுடைய அமுதசுரபி என்னும் பெயருடைய அரும்பெற்ற பாத்திரமாகும் ஆதலின்; நீயிரும் தொழும் என- நீயிரும் இதனைத் தொழுவீராக! என்று கூற; தொழுதனர் ஏத்திய தூமொழியாரொடும்-அது கேட்டு ஆர்வத்தோடு அமுதசுரபியைக் கைகூப்பித் தொழுது வாழ்த்திய தூய மொழியையுடைய அம் மாதவியையும் சுதமதியையும் நோக்கி, இனி யாம்; பழுது அறுமாதவன் பாதம் படர்கேம் எழுக என-குற்றமற்ற பெரிய தவத்தையுடைய அறவணவடிகளாருடைய திருவடிகளிடத்தே செல்லுதும் எழுமின்! என்று கூற;(தூமொழியாரொடும்) இளங்கொடி எழுந்தனள்-அது கேட்டு ஆர்வத்தோடு எழுந்த மாதவியும் சுதமதியுமாகிய அத் தூமொழி மடவாரோடு இளையளாகிய மணிமேகலை எழுந்து போயினள் என்பதாம்.

(விளக்கம்) பழுது- பிறப்பிற்கு ஆகுபெயர். பிறப்பறுதற்குக் காரணமான மாதவம் எனத் தவத்தின் மேனின்றது. தூமொழியாரை எழுகென எழுந்த அத் தூமொழியாரோடும் இளங்கொடி எழுந்தனள் என்க.

மாதவனைச் சரண்புகுவேம் என்பாள் மாதவன் பாதம் படர்கேம் என்றாள்.

இனி இக் காதையை மணிபல்லவத்திடை தெய்வம் நீங்கிய பின்னர் மணிமேகலை குன்ற முதலியவற்றை நோக்கித் திரிய அவள் முன்னர்த் தீவதிலகை தோன்றி யார் நீ என்றலும் அவள் அன்னாய் கேளாய் யான் போய பிறவியில் இராகுலன் மனை; இலக்குமி என் பெயர்; ஆய பிறவியில் மாதவியீன்ற மணிமேகலை, ஈங்குத் தெய்வம் கொணரப் பிறப் புணர்ந்தேன்; என் வரவிது பயனிது யார் நீ என்றலும் தீவதிலகை உரைக்கும் தொழுது வந்தேன் ஈங்குப் பூண்டேன் தீவதிலகை என் பெயர்; இது கேள்! ஆபுத்திரன் கை அமுதசுரபி தோன்றும் அதன் திறம் செய்து நின்னூரங்கண் கேட்குவை என்று உரைத்தலும் வணங்கிக் கூடிச் செய்து நிற்றலும் செங்கையிற் பாத்திரம் புகுதலும் மடவாள் மகிழ்வெய்தி வீர நின்னடி வாழ்த்தல் என் நாவிற் கடங்காது என்ற ஆயிழை முன்னர் நாதன் பாதம் ஏத்திச் சேயிழைக்குத் தீவதிலகை உரைக்கும் கொல்லும் விடுஉம் சிதைக்கும் நிறுத்தும் பாவி அது தீர்த்தோர் இசைச் சொல் அளவைக்கு நா நிமிராது உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் ஆகிக் கண்டனை என்றலும் பாத்திரம் என்கைப் புகுந்தது அயர்வோர் பலர், காண்டல் வேட்கையேன் என, ஆயினை அறிந்தனை ஏழுவாய் என்று உரைப்ப வணங்கி எழுந்து மணிமேகலை பெறுமின் இது பாத்திரம் தொழும் என படர்கேம் என இளங்கொடி எழுந்தனள் என இயைத்திடுக.

பாத்திரம் பெற்ற காதை முற்றிற்று.

 
மேலும் மணிமேகலை »
temple

தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் மணிமேகலை ஆகும். இந்நூல் பவுத்த மத சார்புடைய நீதிகளை எடுத்துச் ... மேலும்

 

1. விழாவறை காதை நவம்பர் 11,2011

முதலாவது விழாவறைந்த பாட்டு

அஃதாவது: பூம்புகார் நகரத்து வாழ்கின்ற சமயக் கணக்கர் முதலிய ... மேலும்

 

இரண்டாவது ஊரலருரைத்த பாட்டு

அஃதாவது விழாவறைதல் கேட்ட மாந்தர் மாதவியை நினைந்து நாடகக் கணிகை ... மேலும்

 

மூன்றாவது மலர்வனம் புக்கபாட்டு

அஃதாவது-மாதவியும் வயந்த மாலையும் சொல்லாட்டம் நிகழ்த்தும் ... மேலும்

 

நான்காவது மணிமேகலை உதயகுமரனைக் கண்டு பளிக்கறை புக்க பாட்டு

அஃதாவது -உவவனத்தினுட் ... மேலும்

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.