பதிவு செய்த நாள்
24
ஜன
2012
11:01
திருநெல்வேலி :பாளை., அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோயிலில் வரலாற்று தொன்மை குறித்து தொல்லியியல் துறை ஓய்வு பெற்ற அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். தொல்லியல் துறை ஓய்வு பெற்ற அதிகாரி வேதாச்சலம், ஓய்வு பெற்ற வரலாற்றுத்துறை பேராசிரியர் வெங்கட்ராமன், மதுரை தானம் அறக்கட்டளையை சேர்ந்த பாரதி, ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் கல்லூரி பேராசிரியர் போஸ் அடங்கிய குழுவினர் பாளை., வேத நாராயணன் அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோயிலுக்கு வந்திருந்தனர். கோயில் சுவர்களில் உள்ள கல்வெட்டுக்கள் குறித்து ஆய்வு செய்தனர். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் என்பதாலும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயில் என்பதாலும் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். பல ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2009ம் ஆண்டு நடந்த திருப்பணிகள், கும்பாபிஷேகம் குறித்தும் தொல்லியியல் துறை அதிகாரிகள் விசாரித்தனர். கோயிலை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என குழுவினர் தெரிவித்தனர். நெல்லை மாவட்டத்தில் களக்காடு சத்தியாவாகீஸ்வரர்-கோமதி அம்பாள் கோயில், திருப்புடை மருதூர் நாறும்பூ நாத சுவாமி கோயில், சிங்கிகுளம் பகவதிஅம்பாள் கோயில், கங்கைகொண்டான் கைலாசநாத சுவாமி கோயில் ஆகிய இடங்களில் குழுவினர் ஆய்வு செய்தனர். கிருஷ்ணாபுரம் கோயிலையும் தொல்லியியல் துறை குழுவினர் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.