பதிவு செய்த நாள்
24
ஜன
2012
11:01
மடத்துக்குளம் : பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் பாழடைந்து வரும் வரலாற்று சிறப்பு மிக்க கோவிலை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சோழ மன்னர்கள் ஆட்சிக்காலமான 12ம் நூற்றாண்டுகளில் மடத்துக்குளம் பகுதியில், அமராவதி ஆற்றங்கரையில் அமைந்திருந்த கிராமங்களான கொமரலிங்கம், கண்ணாடிபுத்தூர், கடத்தூர், சோழமாதேவி, கணியூர் உள்ளிட்ட ஊர்களில் கலை நயத்துடனும், அப்போதைய வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வகையிலும், பல சைவ, வைணவ கோவில்கள் கட்டப்பட்டன. இந்த கோவில்களில் அமைக்கப்பட்ட சுவர்களில் தங்கள் ஆட்சிமுறை, அரசியல் அமைப்புகள் குறித்து கல்வெட்டுக்களும் அமைக்கப்பட்டன. பல நூற்றாண்டுகளை கடந்து தங்கள் புகழும்,கோவிலும் நிலைத்து நிற்க வேண்டும் என திட்டமிட்டு அனைத்து கோவில்களும் கருங்கற்களால் கட்டப்பட்டன. மடத்துக்குளம் பகுதி அமராவதி ஆற்றங்கரை ஊர்களில் அமைக்கப்பட்ட ஒவ்வொரு கோவிலுக்கும் நிலங்கள் ஒதுக்கி, அதன் மூலம் கிடைக்கும் வருவாயினை கோவில் நிர்வாகம், மற்றும் பூஜைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். பல ஆண்டுகளுக்கு பின், பல்வேறு காரணங்களால் இந்த கோவில்களுக்கு வருவாய் குறைந்து ஒரு கால பூஜைகள் கூட நடக்காமல் பூட்டப்பட்டன. இது போல் பல கோவில்கள் மடத்துக்குளம் பகுதியில் உள்ளன. கொழுமம் பகுதியிலுள்ள வீரராகவ பெருமாள் கோவில் பல ஆண்டுகளாக பூட்டபட்டு இருப்பதால் சுவர்கள் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. கோவில் வளாகத்துக்குள் உள்ள வரலாற்று சிலைகள், கல்வெட்டுக்கள் சிதைந்து அழியும் நிலையில் உள்ளது. பல ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ளதால் விஷஜந்துக்கள் இருப்பிடங்களாக மாறி உள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களையும், கல்வெட்டுக்களையும் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.