குலதெய்வ வழிபாட்டிற்கு பாரம்பரிய மாட்டு வண்டி பயணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2018 11:07
திருப்புத்துார்: காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூர், வேலங்குடி உள்ளிட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த நாட்டார்கள் அழகர்கோவிலில் உள்ள குலதெய்வ வழிபாட்டிற்காக மாட்டு வண்டிகளில் பயணம் செய்தனர். அழகர் கோயிலில் ஆடி திருவிழா துவங்கியவுடன் வேலங்குடி நாட்டார்களுக்கு விழாவில் பங்கேற்க கோவிலிலிருந்து திருஓலை அனுப்பப்படுகிறது. இதனையடுத்துஅழகர்கோவில் பயணத்திற்காகவே பிரத்யேகமாக செய்யப்பட்டுள்ள வண்டிகளை சீரமைக்கின்றனர். வண்டிகளில் விவசாயத்திற்கான காளைகளை பூட்டுகின்றனர். நேற்று காலை வேலங்குடி பிள்ளையார்கூடத்திலிருந்து காளைகள் பூட்டப்பட்ட 18 கூட்டு மாட்டு வண்டிகளில் ஏழு நாள் பயணத்தை நாட்டார்கள் துவக்கினர். முதல் நாள் பயணமாக குன்றக்குடி,பிள்ளையார்பட்டி வழியாக நேற்று திருப்புத்துார் வந்தனர். இரவு எஸ்.எஸ்.கோட்டையில் தங்குகின்றனர். நாளை இரண்டாவது நாளாக மேலுாரில் தங்குகின்றனர்.
மூன்றாம் நாளான ஜூலை25ல் அழகர்கோவில் சென்று தீர்த்தமாடுகின்றனர். மறுநாள் 18 படி கருப்பருக்கு கிடா வெட்டி படைக்கின்றனர். இறைவழிபாடு முடிந்த பின் மீண்டும் மறுநாள் மாட்டு வண்டி பயணத்தைத் துவக்கி சொந்த ஊர் திரும்புகின்றனர். நாட்டார்கள் கூறுகையில், பல தலைமுறைகளாக பாரம்பரியம் மாறாது இந்த பயணத்தை தொடர்கிறோம். இதற்காக இந்த வண்டிகளை புனிதமாக கருதி பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். ஏழுநாள் பயணத்தில் உறவினர்களுடன் சேர்ந்து வழிகளில் தங்கி, ஒன்றாக சாப்பிட்டு, உறங்கி, பயணம் சென்று இறைவனை வழிபடுவது எங்களுக்கு பசுமையான நினைவுகளாக இருக்கும். ஆடி மாதம் நடக்கும் இந்த பயணம் எங்களது சுக, துக்கங்களால் பாதிக்கப்படுவதில்லை இந்த பயணம் குலதெய்வத்திற்கான வேண்டுதல்களை நிறைவேற்றவும், உறவுகள் பலப்படவும் உதவுகிறது. இதனால் வெளிநாட்டில் இருந்தால் கூட மறக்காமல் வந்து பங்கேற்கின்றனர்.’ என்றனர்.