பதிவு செய்த நாள்
24
ஜூலை
2018
01:07
ஊட்டி:ஊட்டி ஏக்குணி கிராமத்தில் நடந்த தெவ்வப்பா திருவிழாவில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஐயனை வழிபட்டனர்.நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுக சமுதாய மக்களின் குல தெய்வமான ஹிரோடைய்யா திருவிழா, கடநாடு, மடித்தொரை, ஒன்னதலை, பனஹட்டி, கக்குச்சி மற்றும் டி.மணியட்டி கிராமங்களிலும், பொரங்காடு சீமைக்கு உட்பட்ட, தாந்தநாடு தொட்டூர் கிராமத்திலும் சிறப்பாக நடந்து முடிந்தது. இக்கிராமங்களில் அமைந்துள்ள ஹிரோடைய்யா கோவில்களில் இருந்து, பக்தர்கள் சங்கொலி எழுப்பி, பனகுடி எனப்படும் வனக்கோவிலுக்கு ஊர்வலமாக சென்று, ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடைத்திறக்கப்படும் இக்கோவிலில், பிரம்புகளை உரசி அங்கிருந்து வெளியேறி தீப்பொறியில் நெய் தீபம் ஏற்றி சிறப்பு பூஜை நடத்தினர்.புதிதாக கன்றுக்குட்டி ஈன்ற பசுமாட்டின் பால், வனப்பகுதியில் இருந்து சேகரித்த கொம்புத்தேன் கொண்டு, ஐயனுக்கு சிறப்பு பூஜை நடத்தி, ஐயனுக்கு படையலிட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். கடந்த, 17ல் அக்க பக்க கோவிலில், ஹரிக்கட்டுதல் என்ற தானிய திருவிழா நடத்தப்பட்டது.
கோவில் கல்துாணில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி, வனப்பகுதியில் இருந்து சேகரித்துவந்த மூங்கில் நார் தழையில், தானிய வகைகளை கோர்த்து, அக்க பக்க கோவிலில் மாலையாக கட்டி, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவின் ஒரு நிகழ்ச்சியாக, தொதநாடு சீமைக்கு உட்பட்ட, 12 கிராமங்கள் ஒருங்கிணைந்த துாடிகை பகுதி மக்கள் சார்பில், ஊட்டி ஏக்குணி கிராமத்தில் உள்ள அக்க பக்க கோவிலில், ஹரிக்கட்டுதல் என, அழைக்கப்படும் தானிய திருவிழா சிறப்பாக நடந்தது. கடசோலை பகுதியில் எழுந்தருளியுள்ள பாரம்பரியமிக்க மாலிங்கா கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.விழாவில், ஏக்குணி, உல்லத்தி, காரப்பிள்ளு, பிக்கட்டி, மேலுார், கவரட்டி, கடசோலை மற்றும் அத்திக்கல் உள்ளிட்ட, 12 கிராம மக்கள் கலாசார உடையணிந்து, ஐயனுக்கு காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவின் ஒரு பகுதியாக, நேற்று துாடிகை எனப்படும் பகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களில் உள்ள ஐயன் கோவில்களில் திருவிழா நடந்தது.