பதிவு செய்த நாள்
25
ஜூலை
2018
12:07
சிவகங்கை: மதுரை மாவட்டம் திருவாதவூரில் சோழர் காலத்து மடையில் காக்கும் தெய்வமாக புருஷாமிருகம் இருக்கிறது, என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.கண்மாய்களில் இருந்து தண்ணீர் திறக்க, மடை அமைக்கும் வழக்கம் உள்ளது. திருவாசகத்தை தந்த மாணிக்கவாசகர் பிறந்த ஊரான திருவாதவூர் கண்மாயில் பழமையான மடை உள்ளது. அதன் மேற்பகுதியில் புருஷாமிருகம் காவல் தெய்வமாக உள்ளது.
மழை இல்லாத காலங்களில், அத்தெய்வத்திற்கு 100 தேங்காய் உடைத்து பூஜை செய்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை அப்பகுதி மக்களிடம் உள்ளது.மடையை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் உ.விஜயராமு கூறியதாவது: மடை சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக தெரிகிறது. பொதுவாக மடையில் காக்கும் தெய்வமாக மடைமுனி இருக்கும். புருஷாமிருகம் என்பது இடுப்பிற்கு மேல் மனித உருவம், கீழ்பகுதி விலங்கின் உடலை கொண்டது. எப்போதும் சிவநாமம் சொல்லி கொண்டிருக்கும் புருஷாமிருகம் ,கோயில்களில் காவல் தெய்வமாக இருக்கும். இவற்றை நாயக்கர் காலத்திலும் கோயில்களில் வைத்தனர்.இது மடையில் இருப்பது அதிசயமான ஒன்று. மேலும் இப்பகுதி, வேதத்தை மறந்த திருமால் நீராக நின்று ஈசனை வழிபட்டதால், விஷ்ணு தீர்த்தம் என்று புராணத்தில் கூறப்பட்டது. இந்த தீர்த்தமே பிற்காலத்தில் பெரிய கண்மாயாக மாறியது. மடை பயன்பாட்டில் இல்லாவிட்டாலும் தொடர்ந்து விவசாயிகள் வழிபட்டு வருகின்றனர், என்றார்.