கோரக்பூர்:மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக, உ.பி.,யைச் சேர்ந்த, 15 முஸ்லிம்கள், சிவ வழிபாட்டு யாத்திரையில் கலந்து கொண்டது, பாராட்டை பெற்றுள்ளது.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள தியோரியா மாவட்டத்தைச் சேர்ந்த குஷாஹரி கிராமவாசிகள், ஆண்டுதோறும் சிவ வழிபாட்டு யாத்திரை செல்வது வழக்கம். இதற்கு, கன்வார் யாத்திரை என பெயர். இந்த கிராமத்தில் இருந்து யாத்திரை புறப்படும் பக்தர்கள், பீஹாரின், சுல்தான்கன்ஜ் என்ற இடத்துக்கு செல்வர். அங்கு, கங்கை ஆற்றில் இருந்து நீர் எடுத்து, 104 கி.மீ., நடைபயணமாக, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாபா தாம் என்ற இடத்தில் உள்ள வைத்தியநாத் ஜோதிர்லிங்க கோவிலுக்கு செல்வர். அங்கு, இவர்கள் எடுத்து செல்லும் கங்கை நீர், சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம்.இந்த ஆண்டுக்கான கன்வார் யாத்திரை நேற்று முன்தினம் துவங்கியது. இதில், குஷாஹரி கிராமத்தைச் சேர்ந்த, 70 பேர் கலந்து கொண்டனர். இதில், 15 முஸ்லிம்களும் கலந்து கொண்டது, பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.கிராமத் தலைவரான நிசாம் அன்சாரி தலைமையில், தங்கள் சொந்த செலவில் இந்த யாத்திரையில் பங்கேற்ற, 15 முஸ்லிம்கள், காவி உடை அணிந்தனர். மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நடந்த இந்த நிகழ்ச்சி, பலரது பாராட்டை பெற்றுள்ளது.