திருப்பரங்குன்றம் கோயிலில் விளக்கு ஏற்றி வழிபட வழியின்றி வேதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2018 11:07
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வாடா மகா தீப விளக்குகளில் எண்ணெய் ஊற்றி வழிபட வழியின்றி பக்தர்கள் தவிக்கின்றனர். இக்கோயிலில் சனீஸ்வரர், பத்ரகாளி, வெற்றி விநாயகர், துர்க்கை, தட்சிணாமூர்த்தி சன்னதிகள், திருவாட்சி மண்டபங்கள் முன் கோயில் சார்பில் நெய், எண்ணெய் விளக்குள் விற்கப்பட்டன. பக்தர்கள் விளக்குகளை வாங்கி தீபமேற்றி வழிபட்டனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து எதிரொலியாக வாடா விளக்குள் அமைக்க அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டார். ஜூலை 2 கோயில் திருவாட்சி மண்டபம், ஆஸ்தான மண்படம், மகா மண்டபங்களில் வாடா மகா விளக்குகள் அமைக்கப்பட்டன. பக்தர்களுக்கு கோயில் சார்பில் 10 மில்லிநெய் ரூ.10, சனீஸ்வரருக்கு 50 மில்லி தீப எண்ணெய் 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும். பக்தர்கள் வாங்கி அணையா விளக்கில் ஊற்றி வழிபடலாம் என நிர்வாகம் அறிவித்தது. ஆனால் கோயில் சார்பில் எண்ணெய் விற்க கமிஷனர் அனுமதி கிடைக்காததால் விற்பனை இல்லை. தற்போது பத்ரகாளியம்மன், சனீஸ்வரர் சன்னதிகளில் மட்டும் கோயில் சார்பில் விளக்குகள் விற்கப்படுகின்றன. அங்கு வாங்கிச் மற்ற சன்னதிகளில் ஏற்ற முடியாமல் பக்தர்கள் அவதியுறுகின்றனர்.