பதிவு செய்த நாள்
01
ஆக
2018
11:08
விருத்தாசலம்: விருத்ததாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் புனரமைப்பு பணிகள் துவங்கியது. விருத்தாசலத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் விபச்சித்து முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ‘பழமலைநாதர்’ எனும் விருத்தகிரீஸ்வரர் கோவில் மணிமுக்தாற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோவில், ஐந்து தேர், ஐந்து தீர்த்தம், ஐந்து கோபுரம், ஐந்து பிரகாரம், பஞ்சமூர்த்திகள், ஐந்து நந்தி, ஐந்து கொடிமரம், எனும் ஐந்தின் சிறப்புகளைக் கொண்டது. இக்கோவில், கடந்த 2002ம் ஆண்டு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மகா கும்பாபிேஷகம் நடந்தது. இதையடுத்து, 2014ல் கும்பாபிேஷகம் செய்யப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, 2015ல் பாலாயணத்துடன் 18.5 லட்சம் ரூபாயில் மேற்கு கோபுரம் புனரமைக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய தொல்பொருள் துறையினர் பழமை மற்றும் கலை நயம் பாதிப்பின்றி; தொல்லியல் துறை வழிகாட்டுதல்படி புனரமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனால், கோவிலின் பிரகாரங்கள், கோபுரங்கள் புனரமைப்பு பணிகள் கிடப்பில் போடப்பட்டது. பின்னர், ஐ.ஐ.டி., சென்னை ஐகோர்ட், தொல்லியல்துறை, இந்துசமய அறநிலையத்துறை பிரதிநிதிகள் கொண்ட குழு அமைத்து கோவிலில் ஆய்வு பணிகள் மேற்கொண்டு, திட்ட மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மீண்டும் பாலாயணம் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள கோபுரங்களுக்கு சாரங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.