பதிவு செய்த நாள்
02
ஆக
2018
12:08
அந்தியூர்: அந்தியூர் அருகேயுள்ள, புதுப்பாளையம் குருநாதசாமி கோவில், தமிழக அளவில், பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளது. இங்கு ஆடித்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு விழா, கடந்த மாதம், 18ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது, அதை தொடர்ந்து, முதல் வன பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி குருநாதசாமி மற்றும் பெருமாள்சாமி தெய்வங்களின் உற்சவர் சிலைகளை சப்பர தேர்களிலும், காமாட்சியம்மனை பல்லக்கிலும் எழுந்தருளச் செய்து, மேளதாளங்கள் முழங்க, பக்தர்கள் தோளில் சுமந்து சென்றனர். புதுப்பாளையம் மடப்பள்ளியில் இருந்து, 5 கி.மீ., தூரம் வனக்கோவிலுக்கு ஊர்வலம் சென்றது. தேர் செல்லும் வழியில், தேங்காய், பழங்கள் வைத்து, பக்தர்கள் சாமிக்கு படைத்தனர். வனக்கோவில் சென்றவுடன், நாள் முழுவதும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பெண்கள் பொங்கல் வைத்தும், நூற்றுக்கணக்கான ஆடு, கோழிகளை பலியிட்டு வேண்டுதல் நிறைவேற்றினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தேர்கள் வனத்தில் இருந்து, நாளை விடியற்காலை புதுப்பாளையம் மடப்பள்ளிக்கு வரும். முக்கிய நிகழ்வான திருவிழா வரும், 8ல் தொடங்கி, நான்கு நாட்கள் நடைபெறும். இதையொட்டி தென்னிந்திய அளவில், புகழ்பெற்ற குதிரை சந்தை நடக்கும். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பக்தர்கள், வியாபாரிகள் என, லட்சக்கணக்கானோர், நான்கு நாள் விழாவில் பங்கேற்பர்.