பதிவு செய்த நாள்
09
ஆக
2018
10:08
அந்தியூர்: ஈரோடு மாவட்டம், அந்தியூரில் புகழ்பெற்ற குருநாதசுவாமி கோவில் ஆடிப்பெருந்தேர்திருவிழா கடந்த, 8 ல் துவங்கியது. வரும், 12 வரை நடக்கிறது. நேற்று காலை, 11:00 மணியளவில் குருநாதசுவாமி, பெருமாள், காமாட்சியம்மன் சுவாமிகள், மூங்கில் தட்டிகளால் செய்த, 50 அடி நீளமுள்ள மகமேரு தேர்களில் சென்றது. அப்போது காமாட்சியம்மன் சிலையை, பக்தர்கள் தோளில் சுமந்து, மடப்பள்ளியிலிருந்து மூன்று கி.மீ., தொலைவில் உள்ள வனக்கோவிலுக்கு எடுத்துச் சென்று, அங்கு சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனர். இதில், ஓங்காளியம்மன் வகையை சேர்ந்த மாடுகள் முன்புறம் செல்ல, அதன் பின் இசைக்கு ஏற்ப ஆடும் குதிரை சென்றது. அதன் பின், சுவாமிகளின் தேர்கள் சென்றன. விழாவை முன்னிட்டு, நான்கு நாட்கள் குதிரை சந்தை, மாட்டுச்சந்தை நடக்கிறது. இதில் வந்த குதிரைகளில் மார்வார், கத்தியவார், இங்கிலீஸ் பீட் ரக குதிரைகள் என, ஆயிரக்கணக்கில் விற்பனைக்கு குவிந்துள்ளன. இதன் உயரம், நிறம் மற்றும் சுழிகளை வைத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சில ஆயிரம் முதல், பல லட்சம் ரூபாய் விலை மதிப்பிலான குதிரைகள் கொண்டு வரப்பட்டு, விற்பனைக்காக காத்திருக்கின்றன. மேலும், காங்கேயம், ஆந்திரா வகை ஓங்கோல் இனம், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் இன நாட்டு மாடுகள், முறா இன எருமைகள், பர்கூர் இன மாடுகள், சிந்து மாடுகள் என கால்நடைகள், 10 ஆயிரம் ரூபாய் முதல், மூன்று லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ளவைகளாக, ஆயிரக்கணக்கில் விற்பனைக்கு வந்துள்ளன. பாலுக்காகவும், இறைச்சிக்காகவும், அழகுக்காகவும் வளர்க்கப்படும் அரியவகை ஆடுகள், சண்டைக்கிடாய்கள், பறவைகளும் விற்பனைக்கு வந்துள்ளன. இதுதவிர, விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள், கால்நடைகளை அலங்கரிக்கும் அணிகலன்கள், இயந்திரங்கள் என பலவகைகள் வந்துள்ளன.
பார்வையாளர்களை கவரும் வகையில் நாட்டிய குதிரைகள், ரேஸ் குதிரைகள், ராட்டின தூரிகள், ஜீப் கார்களின் கண்காட்சி என, மக்களை பரவசப்படுத்தும் பல்வேறு வகையான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இவைகளை, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும் கொண்டு வந்துள்ளனர்.